“R E V O L T” ‘ரிவோல்ட்’
ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியும் கே. நடராஜன் போன்றவர்களும் மற்றுஞ் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரசாரத்திற்கு விரோத மாக ஆங்கிலத்தில் பத்திரிகைகள் மூலியமாயும், வியாசங்கள் மூலியமாயும் பிரசாரம் செய்கிறபடியாலும், நமது பிரசாரமும் பத்திரிகையும் தமிழிலேயே இருப்பதாலும் அது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போக மார்க்க மில்லாமலிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு வாரப் பத்திரிகை ‘குடி அரசு’ கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதாக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிகைக்கு ‘ரிவோல்ட்’ (சுநஎடிடவ) என பேர் கொடுப்பதென்றும் தீர்மானித்திருக்கிறோம். அப்பத்திரிகைக்கு கௌரவ ஆசிரியர்களாக இருக்க சில ஆங்கிலங் கற்ற நண்பர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பல அறிஞர்கள் அரிய விஷயதானம் செய்யவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்பத்திரிகையை தற்கால ‘குடி அரசு’ அளவில் 8 பக்கம் கொண்டதாகவும் வருஷ சந்தா ரூபாய் 3 ஆகவும் வைத்து வெளிப் படுத்தத் தீர்மானித்துள்ளோம். சமீபத்தில் வெளியிட முயற்சித்துக் கொண்டி ருக்கிறோமாதலால் அன்பர்கள் சந்தாதாரர்களாய்ச் சேரவும் மற்றும் கூடிய உதவிகள் செய்யவும் முன்வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். சந்தா தாரர்களாகச் சேர இஷ்டமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம்.
குடி அரசு – அறிவிப்பு – 25.03.1928