ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்
ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியா ரிடம் அனுதாபமிருந்து அவரை முனிசிபல் கவுன்சிலராக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் பார்ப்பனர்கள் ஓட்டு அதிகமாயிருக்கும் திருவல்லிக்கேணி வார்டில் போட்டு கவுன்சிலர் பதவியை ஏன் அவருக்கு செய்து வைத்திருக்கக்கூடாது? பட்டத்தையும் விட்ட “பரிசுத்தமான ஒத்து ழையா தத்துவம் கொண்ட காங்கிரஸ்வாதி” இப்போது ஸ்ரீமான் அய்யங்கார் கூட்டத்தில் நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட வேறு யார் இருக் கிறார்கள்? அல்லாமலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் இன்னமும் இதற்கு முன்னும் வக்கீல் உத்தியோகம் செய்து வருகிறார். சர்க்கார் நியமன பதவிகளும் சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார். இவரை விட ஸ்ரீமான் செட்டியார் எந்த விதத்தில் குறைந்தவர்? அல்லாமலும் இந்த பார்ப்பனர் வார்த்தையைக் கேட்டு நடந்ததின் பலனாக பார்ப்பனரல்லாத சமூகத்தில் செட்டியாருக்கு இதுசமயம் செல்வாக்கும் குறைந்துபோயிருக்கிறது. இந்த விஷயம் சேப்பாக்கம் டிவிஷனில் செட்டியார் தோல்வியுற்றதினாலும் ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப் போடாமல் பட்டம் தாங்கும் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஓ.ஏ.ஓ.கே. லக்ஷ்மணன் செட்டியாரை இவர்களே (பார்ப்பனர்கள்) போட்டதினாலேயும் நன்றாய் விளங்குகிறது. ஆதலால் பார்ப்பனர் அதிகமாயுள்ள வார்டுக்கு இவரை ஏன் போட வில்லை? இதுதான் போகட்டும். சட்டசபைத் தேர்தலிலாவது இந்த பார்ப்ப னர்களுக்கு நமது ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாருக்கு ஒரு ஸ்தானம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்றிருந்தால் பார்ப்பனர்கள் மிகுதியுள்ளதும் கண்டிப்பாய் பார்ப்பனர் சொல்லுகிறபடி ஓட்டுக் கிடைப்பதுமான யூனிவர் சிட்டி தொகுதிக்கு ஏன் நிறுத்தக் கூடாது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தி படிப்பை யும் அனுபோகத்தையும் விட ஸ்ரீமான்செட்டியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? இவற்றை யோசிக்கும்போது “உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? எங்கள் வீட்டுக் கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்?” என்ற பழமொழிபோல் இதைப் பார்ப்பனர்களின் சாவகாசம் என்பது இதிலிருந்தாவது விளங்கவில்லையா?
குடி அரசு – செய்திக் குறிப்பு – 29.08.1926