திரு. சீனிவாசய்யங்காரின் தைரியம்

திருவாளர் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தேவஸ்தான சட்டத் தைப் பற்றி எழுதும்போது ‘பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள் தேவஸ்தான சட்டத்தை ஆதரிப்பதாக’ மனப்பூர்த்தியாய் வேண்டுமென்றே இல்லாத காரியத்தைச் சொல்லுகிறார். திரு.சீனிவாசய்யங்காருக்கு பொய் சொல்லு வதிலும் மறுபடியும் அதை மறுத்து இல்லை என்று சொல்லுவதிலும் அனுப வம் அதிகமாகி அதன் பலனாய் எவ்வளவு திருப்பாட்டு கிடைத்தபோதிலும் அதை ஏற்று ஏற்று அவர் மானம் நன்றாய் மரத்துப் போய்விட்டது. திருவாளர் கள் மாளவியா, bஐயக்கர், கெல்கர், நரசிம்மராஜு, இராமலிங்க செட்டியார், ஆந்திர தேசத்து தேசீயப் பத்திரிகைகள் முதலிய பிரபல கனவான்கள் எல்லோரிடமும் திரு.சீனிவாசய்யங்கார் சொல்லியவற்றையெல்லாம் வெகு தைரியமாய் இல்லையென்று ஒரே அடியாய் சொல்லிவிட்டார். பத்திரிக் கைகள் பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கம் உடையவைகளாகவே இருந்து விட்டதால் அவைகள் இவற்றைப்பற்றி ஒன்றும் எழுதாமல் திரு. அய்யங்கார் புளுகுக்கு ஆதரவளித்து வருகின்றன. சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நெஞ்சில் உரம் இல்லாததால் இவற்றைப் பற்றி ஒன்றும் எழுதாமல் தந்திரமாய் இருந்து விட்டன. இதன் பலனாய் திரு. அய்யங் காருக்கு பொய் சொல்லுகிற விஷயத்தில் வரவர தைரியம் அதிகமாகி கொஞ்சம்கூட மானம் வெட்கம் பயம் என்பது அடியோடு இல்லாமல் போய் இப்போது தேவஸ்தான சட்டத்தை பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதிகள் ஆnக்ஷபிக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அப்படியானால் அவர்கள் பெயர் என்ன? எப்போது ஆதரித்தார்கள்? பார்ப்பனரல்லாத காங்கிரஸ் மெம்பர்களான திருவாளர்கள் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தர முதலியார், தண்டபாணி பிள்ளை, எஸ்.இராமநாதன் முதலிய பழய கனவான் களும், காங்கிரசுக்காக தியாகம் செய்தவர் எல்லாம் தேவஸ்தான சட்டத்தை ஆதரிக்கும்போது நமது ஸ்ரீமான் அய்யங்காருக்கு இச்சட்டத்தை ஆnக்ஷபிக்க கிடைத்த காங்கிரஸ் மெம்பர்கள் யார் என்பதை பொது ஜனங்களுக்குத் தெரியப் படுத்தினால் கண்ணியமாயிருக்கும். அஃதில்லாமல் வக்கீல்வாதம் பேசுவது போல் மனச்சாக்ஷிக்கு விரோதமாய் பொய் பேசுவது எவ்வளவு மோசமான காரியம் என்பதை உணரும் வாசகர்கள்தான் புத்தி சொல்ல வேண்டும்.

சென்ற இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் “யோக்கியமுள்ள பார்ப்பனரல்லாதார் யாரும் காங்கிரசில் இல்லை” என்று சொல்லும்போது அதற்கு மறுப்பாக திரு.சீனிவாசய்யங்கார் கடற் கரையில் பேசும்போது காங்கிரசில் பார்ப்பனரல்லாதார் இல்லை என்று ஜஸ்டிஸ் கட்சியார் சொல்வது தப்பு என்றும் பார்ப்பனரல்லாதாரின் உண்மை யான தலைவர்களாகிய திருவாளர்கள் கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர்களெல்லாம் இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களின் எழுத்துக்களையும் பிரசங்கங்களையும் படித்துக்காட்டி பாமர ஜனங்களைத் திருப்தி செய்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டதும் நமது திரு. அய்யங்கார் காங்கிரசில் வேறு பார்ப்பனரல்லாதார் இருப்பதாகச் சொல்ல வந்து விட்டார். அது யாரை நினைத் துக் கொண்டு சொல்லுகிறாரோ தெரியவில்லை. ஒரு சமயம் திருவாளர்கள் ஜெயவேலு, பாவலர், மயிலை இரத்தினசபாபதி முதலியார், ஜனாப்கள் ஷாபி முகமது, ஹமீத்கான் ஆகிய இவர்களை நினைத்துக் கொண்டு சொல்லு கிறாரோ அல்லது இன்னும் யாரையாவது தன்னுடைய டிக்கட் பாக்கட்டில் வைத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. இந்தப் பிரபு இவ்வளவும் போதாமல் அஸ்ஸாம் காங்கிரசுக்குத் தலைவராகப் போகிறார். பார்ப்பன சக்தி எவ்வளவு இருக்கிறது என்பதை இப்போதாவது தமிழ் மக்கள் உணர்வார்களா?

குடி அரசு – துணைத் தலையங்கம் – 22.08.1926

You may also like...

Leave a Reply