பஹிஷ்காரப் புரட்டும் சர்வகக்ஷி மகாநாட்டுப் புரட்டும்
சர்வகக்ஷியாரும் சேர்ந்து ஒரு சுயராஜ்யதிட்டம் போட்டுவிட்டதாகவும் அதை எல்லோரும் சேர்ந்து ஒப்புக் கொண்டதாகவும் இனி பொது ஜனங்களும் சர்க்காரும் அதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி
யென்றும் அரசியல் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைகள் ஊளையிடுகின்றன. இது ஒரு அன்னக் காவடி, “இராஜா மகளுக்கும் எனக்கும் கல்யாணம் தீர்மானம் ஆகிவிட்டது. ஆனால் ராஜாவும் அவனது மகளும் சம்மதம் கொடுக்க வேண்டியது மாத்திரம்தான் பாக்கியாய் இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டது போலிருக்கிறது. சர்வ கக்ஷி மகாநாடு என்பது என்ன? அதில் யார் யார் இருந்து “திட்டம்” செய்தார்கள்? அவர்களுக்கும் நாட்டின் ஏழை மக்களுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? இந்தியாவில் உள்ள எந்த ஜாதியாருக்கு அல்லது எந்த மதக்காரருக்கு அல்லது எந்த தொழில் காரர்களுக்கு இவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடும்?
மகமதிய சபையார்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவ சபையார்கள் ஒப்புக் கொள்கின்றார்களா? இந்து சபையார் ஒப்புக் கொள் கிறார்களா? பார்ப்பன சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? பார்ப்பன ரல்லாதார் சபையார் ஒப்புக்கொள்ளுகிறார்களா? ஆதி இந்துக்கள் ஆதிதிராவிடர்கள் என்கின்ற சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? எனவே இந்தியாவில் இத்திட்டத்தை யார் ஒப்புகொள்ளுகின்றார்கள் என்பது விளங்கவில்லை. ஒரு சமயம் உத்தியோகம் சம்பாதிக்கும் சபைகளாகிய காங்கிரஸ், சுயராஜிய, மிதவாத சபைகளின் பேரால் உள்ள சிலர் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்று சொல்ல வருவார்களேயானால்,
காங்கிரஸ் தலைவர் ஒப்புக்கொள்ளுகின்றாரா? அல்லது சுயராஜியக் கக்ஷி உபத் தலைவர் ஒப்புக்கொள்ளுகின்றாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒப்புக்கொள்ளுகின்றாரா? மற்றும் யார் ஒப்புக்கொள்ளு கின்றார்கள் என்பது விளங்கவில்லை.
மேல்கண்ட இத்தனை பேர்களும் ³ சுயராஜ்ஜியத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்பது தெரிந்து ஒப்புக்கொள்ளாத மேற்படியார்களை ஒரு பக்கம் திட்டிக் கொண்டு மறுபக்கத்தில் “சர்வகக்ஷி மகாநாட்டுத் தீர்
மானத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள்” என்று எழுதுபவர்
களை பொதுமக்கள் இப்போதாவது வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைக்காரர்கள் என்று தீர்மானிப்பதற்கு ஏதாவது ஆnக்ஷபனை உண்டா என்று கேட்கின்றோம்.
தவிர இதற்கு முன் திட்டங்கள் போட்ட பல கனவான்களின் சங்கதி யும், அத்திட்டங்களின் சங்கதியும் அதாவது ஸ்ரீமதி பெசண்டம்மை, திரு வாளர்கள் விஜயராகவாச்சாரியார், மதன் மோகன் மாளவியா, சீனிவாசய் யங்கார், ரங்கசாமி அய்யங்கார், மோதிலால் நேரு மற்றும் அநேகர்கள் போட்ட திட்டங்கள் என்ன ஆயின என்பதும் “சிதம்பர இரகசியமாய்” இருக்கின்றது.
நிற்க, இந்த சர்வகக்ஷி மகாநாட்டார் என்பவர்கள் புதிதாக செய்து முடித்திருக்கும் வேலைகளிலெல்லாம் குறிப்பிடத்தக்கது ஒரே ஒரு
வேலைதான். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் சமத்து
வத்தை ஒழிப்பதற்கு செய்துள்ள சூழ்ச்சிதான்.
இந்த சூழ்ச்சியை சர்வ கக்ஷி மகாநாடுதான் புதிதாக செய்திருப்பதாக அவர்களது கூலிகள் பெருமை பாராட்டிக் கொள்ளலாமானாலும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஏற்பட்டது முதலே இதே கூட்டத்தார் அதாவது இப்போது சர்வகக்ஷி மகாநாடு என்பதில் ஆதிக்கம் கொண்டுள்ள கூட்டத்தாரும் அவர்களுக்கு ஆதி முதலே அடிமைகளாகவும் கூலிகளாகவும் இருந்து வரும் கூட்டத்தாரும் இந்த சூழ்ச்சிகள் செய்து வருவது யாவருக்கும் தெரியாது என்பதாக நினைத்து, இப்போது வேறு போர்வை போர்த்துக் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதே காரணத்தினாலேயே சைமன் கமீஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று பார்ப்பனக் கூலிகளாய் இருந்து கூவினதும் பொது ஜனங்களுக்குத் தெரியாது என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. எது எப்படியிருந்தாலும் பகிஷ்காரக் கூச்சலில் தாங்கள் தோற்றுவிட்டதை நன்றாய் அறிந்து அதே சைமன் கமிஷனின் பாதத்தில் வைத்து விழுந்து கும்பிட ஒரு திட்டத்தையும் தயார் செய்துகொண்டு அதற்கு சர்வசக்ஷி மகாநாட்டுத் திட்டம் என்பதாக பெயரையும் கொடுத்து முக்காட்டை விலக்கிக் கொண்டு வெளியில் வந்தாய் விட்டது.
எனவே இதனால் ஒவ்வொருவரும் அவரவர்கள் திட்டத்தை சைமன் கமிஷனுக்கு தெரிவிப்பதற்காக விரைந்து போட்டி போட வேண்டிய அவசியம் ஒன்று புதிதாய் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு காரியமும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொல்வதற்கில்லை.கடைசியாக நாம் குறிப்பிடுவது என்னவென்றால், கமீஷன் பகிஷ் காரம் என்கின்ற புரட்டை பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் என்றைக்கு ஆரம்பித்தார்களோ அந்த வினாடி முதல் அதைப் பற்றி நாம் என்ன என்ன எழுதியும் பேசியும் வந்தோமோ அவைகள் எல்லாம் ஒன்று விடாமல் நடந்து வருகிறதா இல்லையா என்பதை மாத்திரம் ஞாபகப் படுத்திப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 02.09.1928