தேவஸ்தான மசோதா பார்ப்பனரின் சூழ்ச்சி, ‘மித்திர’னின் அகம்பாவம்

சென்ற புதன் வியாழக் கிழமைகளில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பன மித்திரனாய ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ‘அக்கிரமத் திற்கும் அளவில்லையா?’ என்கிற தலைப்பின் கீழ் சில விஷமத்தனமான வார்த்தைகளை எழுதியிருக்கிறது. அது எதைப்பற்றி என்றால் வரப்போகிற சென்னை சட்டசபைக் கூட்டத்தில் தேவஸ்தான சட்டத்தில் உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத் திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால் கொண்டு வரப்படப் போகிறது. ஏனெனில் அச் சிறு சட்ட சம்பந்தமான தவறு தல்களை ஆதாரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச் சொல்லி நமது பார்ப்பனர்கள் மகந்துகளையும், மடாதிபதி களையும் ஏமாற்றி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பொருளைக் கவர்ந்து வியவகாரங்களை உண்டாக்கி நியாயஸ்தலங்களில் தற்காலத் தடை உத்திரவும் பெற்று இன்னும் பல மடாதிபதிகளை ஏமாற்றிப் பொருள் பறிக்கப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள். இப்பொழுது சர்க்காரால் கொண்டு வரப்படப் போகும் மசோதா நிறைவேறிவிடுமானால் இம்மாதிரி நமது பார்ப்பனர்கள் மடாதிபதிகளையும் மகந்துகளையும் ஏமாற்றிப் பொருள் பறிக்கவும் தற்காலத் தடை உத்திரவுகள் பெற்று தர்ம சொத்துக்களைக் கொள்ளையடிக்கவும் முடியாமல் போய் விடுமாகையால் இது பற்றியே ‘சுதேசமித்திரன்’ இம் மசோதாவைப் பற்றி அதிகப் பிரசங்கித்தனமாகவும் “அக்கிரமத்திற்கும் அளவில்லையா” என்று தலையங்கமிட்டு என்னென் னமோ பிதற்றுகிறான்.

1. “1923-ம் வருஷத்தில் இம் மசோதா சட்டசபை அங்கத்தினர்களில் ஹிந்துக்கள் பலரால் எதிர்க்கப்பட்டும் ஹிந்துக்களல்லாதாரின் உதவியைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது” என்று எழுதுகிறான். இம்மசோதா சட்ட சபையில் நிறைவேறும்போது எதிர்த்த ஹிந்துக்களைவிட எதிர்க்காத ஹிந்துக்களே அதிகமாயிருந்து நிறைவேற்றி யிருக்கிறார்கள். ‘மித்திரன்’ அகராதியில் ஹிந்துக்களென்று சொன்னால் பார்ப்பனர்களும் பார்ப்பனர் கள் தாளத்திற்கு ஆடும் பார்ப்பனரல்லாதாரையும்தான் குறிக்கும் போலிருக் கிறது. பார்ப்பனர்களுடைய அயோக்கியத்தனத்தை யாராவது வெளியி லெடுத்துச் சொன்னாலாவது அவர்களுக்கு விரோதமாய் யாராவது நடந்து கொண்டாலாவது அவர்கள் இந்துக்கள் அல்லபோலும்.”

2. அல்லாமலும் “ஆதி மசோதா கோர்ட்டில் வியவகாரத்திலிருக் கும்போது புது மசோதா வெளியிட அவசியமில்லை”என‘சுதேச மித்திரன்’ கூறுகின்றான். மசோதாவில் சட்டசம்பந்தமான சில குற்றமிருந்ததன் பல னாய் கோர்ட்டில் மசோதாவைத் தள்ளி வைக்க வியவகாரம் தொடுத்திருந் ததாக வைத்துக்கொண்டாலும் இந்த சமயத்தில் மசோதாவின் குற்றத்தை நீக்குவதில் ‘மித்திரனுக்கு’ நஷ்ட மென்ன? மசோதாவின் குற்றம் நீங்கி கோர்ட்டிலுள்ள வழக்குகள் மேல் நடவடிக்கைகள் நடத்த வேண்டிய அவசியமில்லாமல் நின்று விட்டுப்போக வேண்டிய அவசியம் ஏற்படுமே யானால் தங்கள் ஜாதியாருக்கு பீஸாப்பிடாமல் போய்விடுமே என்கிற பேராசைக் கெட்ட எண்ணமும் வரப்போகும் தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்காக மடாதிபதிகளிடம் தேவஸ்தான மசோதாவை ஒழிக்க சட்ட சபைக்கு ஆட்களை சேர்க்கிறோம், ஆட்களை சேர்க்கிறோம் என்று ஏமாற்றிப் பொருள் பறிக்க முடியாமல் போய்விடுமே என்கிற சின்னப் புத்திதானா அல்லவா?

3. தவிறவும் “பொது ஜன அபிப்பிராயம் தெளிவாக வெளிப்படப் போகும் சமயமான சட்டசபைத் தேர்தலுக்கு முன் இம் மசோதாவை சட்ட மாக்க முயலுவதால் பொதுஜன அபிப்பிராயத்தை மந்திரிகள் லட்சியம் செய்யவில்லை” என்றும்“இந்த மந்திரிகளை ஒழித்தால்தான் ஜனங்களு டைய அபிப்பிராயத்திற்கு மதிப்பு ஏற்படும்” என்றும் கூறுகிறான். இது மகா அக்கிரமமான வாசகமென்றே நாம் சொல்லுவோம். இப்பொழுது சட்டசபை யிலுள்ள கனவான்களின் அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயம் அல்லவென்று ‘மித்திரன்’ எப்படிச் சொல்லக் கூடும்? பொதுஜனங்க ளென்றால் யார்? ‘மித்திரனு’டைய இவ்வார்த்தையானது பொது ஜனங்க ளையே அவமானப் படுத்தத்தக்கதாயிருக்கிறது. பார்ப்பனர் தவிர பார்ப் பனர் பெரும்பான்மையாயிருக்கிற சபைகள் தவிர மற்ற சபை பொதுஜன சபை அல்லவென்றும் பொதுஜன அபிப்பிராயமல்ல என்றும் ‘மித்திரன்’ கருதுவானேயானால் இப்பார்ப்பனர்களும் ‘மித்திரனும்’ பொது ஜனங்கள் அல்லவென்று நாம் நிரூபித்தாலொழிய நமது நாடு முன்னுக்கு வரா தென்று தான் நாம் சொல்லுவோம். இப் பார்ப்பனர்கள் தாங்கள் எந்த முறையில் சட்டசபையில் போயிருந்து கொண்டு பொது ஜனப்பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளுகிறார்களோ, அதே முறையில் சட்டசபைக்குச் சென்ற பார்ப்பனரல்லாதாரும் தாங்களும் பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என்ற அறிவு ‘மித்திரனுக்கு’ ஏன் இல்லாமல் போய் விட்டது? இம்மாதிரி ஒரு சமூகத்தையும் சமூகப் பிரதிநிதிகளையும் கேவல மாகவும் அவமானமாகவும் மனம் புண்படும்படி யாகவும் எழுதக் கூடிய ஆணவத்தை என்றைக்கு நாம் அழிக்கிறோமோ அன்றுதான் நாட்டிற்கே nக்ஷமமுண்டாகும். அதில்லாமல் இவைகளை இப்படியே அதிகப்பிரசிங்கித் தனமாக நடக்கவிட்டுக் கொண்டிருக்கும் வரையில், கோயில் சொத்தைத் தின்னுகிறவர்களும், மகந்து மடாதிபதி களுக்கும் தாசி வேசிகளுக்கும் இடையில் தூது நடக்கிறவர்களும், வழக்கு கள் பெயரால் தர்மச் சொத்தை கொள்ளையடிக்கிறவர்களும், பாமர ஜனங் களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறவர்களும் தேசத்திற்கோ மதத்திற்கோ கொஞ்சமும் பொறுப்பற்ற சுயநலப் பிணங்களுந்தான் நமது நாட்டுப் பொது ஜனங்களாகக் கருதப்படு வார்களென்றே நாம் பயப்படுகிறோம்.

அடுத்தாப்போல் சட்டசபையில் தேவஸ்தான மசோதா வரும் போது சட்டசபையை விட்டு வெளியில் வந்துவிட்டோமென்று சொன்ன பார்ப்பன சுயராஜ்யக் கட்சி ‘வீரர்கள்’ மீண்டும் சட்டசபைக்கு வருவார்களா வரமாட் டார்களா என்பதும் தேவஸ்தான மசோதா விஷயம் சுயராஜ்யக் கட்சிக்கு சம்பந்தப்பட்டதா தனித்தனி நபர் சம்பந்தப்பட்டதா என்பதும், தனித்தனி நபர் சம்பந்தப்பட்டதானால் கட்சித் தலைவரின் உத்திரவில்லாமலே சட்ட சபைக்குப் போகலாமா என்பதும் அறிய வெகுஜனங்கள் இச்சமயம் ஆவலாக எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.08.1926

You may also like...

Leave a Reply