கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்
இம்மாதம் 4-ம் தேதி கோயமுத்தூரில் நடந்த ஜில்லா போர்டு தலைவர் தேர்தலில் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் இளைய சகோதிரரான ஸ்ரீமான் பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களும் அபே க்ஷகர்களாக நின்றதில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட அங்கத்தினர் ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் கேட்க வாசகர்கள் மிகுதியும் சந்தோஷமடைவார்களென்றே எண்ணுகிறோம்.
ஸ்ரீமான் முதலியார் அவர்கள் கோயமுத்தூரில் பல தலைமுறையாய் இருந்துவரும் கௌரவமும் பிரபலமுமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்து லட்சம் இருபது லட்சம் முதல் வைத்து நடத்தும் பல கூட்டுறவு பாங்கிகளுக்கு பிரசிடெண்டாகவும் டைரக்டராகவும் இருந்து வருபவர். ஏறக்குறைய கோய முத்தூர் ஜில்லாவிலேயே 24-வயதிற்கு மேற்பட்டு 36-வயதிற்கு உட்பட்டி ருக்கிற ஒவ்வொரு வாலிபருக்கும் ஆப்த நண்பனாகவும் உற்ற மந்திரியாக வும் இருந்து வருபவர். அவர் பெரிதும் குடியானவர்களிடத்திலும் ஏழை மக்களி டத்திலும் அன்பு கொண்டவர். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கிற வித்தி யாசமே கொஞ்சமும் அற்றவர். ஏறக்குறைய பத்துப் பதினைந்து வருஷ காலமாகவே கோயமுத்தூர் முனிசிபல் கவுன்சிலராகவும் ஐந்தாறு வருஷ காலமாய் முனிசிபல் சேர்மெனாகவும் தென்னிந்திய ரெயில்வே போர்டு அட்வைசரிக் கமிட்டியிலும், தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டியிலும் அங்கத்தி னராகவும் இருந்து வருகிறார். அதோடு கூட 4,5 வருஷ காலம் கோயமுத்தூர் தாலூக்கா போர்டு பிரசிடெண்டாகவும் இருந்து வந்ததோடு சென்ற மூன்று வருஷ காலம் கோயமுத்தூர் ஜில்லா போர்டுக்குப் பிரசிடெண்டாகவும் இருந்து வந்திருக்கிறார்.
இவ்வளவு செல்வாக்கும் பெருமையும் அந்தஸ்தும் உடையவர் கோயமுத்தூர் ஜில்லா போர்டுக்கு மறுபடியும் பிரசிடெண்டாய்த் தேர்ந்தெடுக் கப்பட்டிருப்பதில் அதிக ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்றுமில்லையா னாலும், போட்டியன்னியிலேயே தேர்ந்தெடுக்கப்படாமல் போனது கோய முத்தூர் ஜில்லா போர்டு ஓட்டர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்ள வாய்த்த ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார்களென்றுதான் சொல்ல வேண்டும்.
மகாத்மா காந்தியை காங்கிரஸ் பிரசிடெண்டாகத் தேர்ந்தெடுத்த காலத் திலும் அபிப்பிராய பேதமும் எதிர் ஓட்டுக்களும் சிலது இருந்ததென்றால், நமது முதலியார் தேர்தலில் எதிர் ஓட்டு இருப்பது அதிசியமல்லவென்றே சொல்லுவோம் . ஆனால் தேர்தல் காலத்தில் ஸ்ரீமான் முதலியார் விஷயத் தில் கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பெரிய ஜமீன்தாரர்களும், மிராஸ்தாரர் களும், மற்றும் பெரிய பாங்கர்களும், பெரிய இயந்திரசாலைக்காரர்களும், வியாபாரிகளும், பொது ஜன சேவையிலீடுபட்டவர்களும் முதலியாருக்காக எடுத்துக் கொண்ட ஊக்கமும் உணர்ச்சியும் அளவிடத் தகுந்ததல்ல. மற்றும் சகல வகுப்பார்களிடமும் நமது முதலியாருக்கு செல்வாக்கிருக்கிறது என்பதற்கு உதாரணமாக தேர்தல் காலங்களிலும் மற்ற சமயங்களிலும் நடந்த வைபவங் களையும் பிரயத்தனங்களையும் பார்த்தால் நன்றாய் விளங்கும்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களாகிய ஸ்ரீமான்கள் எம். சம்பந்த முதலியார், வெரிவாட செட்டியார் வகையறாக்களும், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியாரான அதன் காரியதரிசி ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார் வகையறாக் களும், வர்ணாசிரம பார்ப்பனரான ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங் கார் முதலியவர்களும், ஒத்துழையாதாரைச் சேர்ந்த ஸ்ரீமான் டி.எஸ்.பாண்டே முதலியவர்களும், கொங்கு வேளாள சமூகத்தில் முக்கியஸ்தர்களான கொங்குவேளாள சங்கக் காரியதரிசி பொள்ளாச்சி ஸ்ரீமான் இரத்தின சபாபதிக் கவுண்டரவர்களும், வடகரை வேளாள சமூகத்தில் முக்கியஸ்தரான கோவை தாலூக்காபோர்டு பிரசிடெண்டு ஸ்ரீமான் ராஜாக் கவுண்டர் என்கிற நஞ்சப்பக் கவுண்டரவர்களும், வேட்டுவக் கவுண்டர் சமூகத்தில் பிரதானஸ் தரான அப்பிச்சிமார் மடாதிபதி ஸ்ரீமான் ஆண்டமுத்துக் கவுண்டரவர்களும், ஜமீன்தாரர்களில் முக்கியஸ் தரான ஊத்துக்குளி ஜமீன்தாரும், பொள்ளாச்சி தாலூக்காபோர்டு பிரசிடெண்டுமான ஸ்ரீமான் துரைராஜா அவர்களும், பட்டக்காரர்களில் முக்கியமானவர்களுள் ஒருவரான சங்கரண்டாம்பாளை யம் பட்டக்காரர் ஸ்ரீ வேணுடையாக் கவுண்டரவர்களும், நாயுடு சமூகத் தலைவர்களான ரெங்க விலாஸ்மில் ஏஜண்டு ஸ்ரீமான் பி.எஸ். குருசாமி நாயுடுகார், பல்லடம் தாலூக்காபோர்டு பிரசிடெண்டு ஸ்ரீலட்சுமி நாராயண சாமி நாயுடுகார் முதலியவர்களும் பஞ்சமர் என்று சொல்லப்படும் வகுப்புத் தலைவரான ஸ்ரீமான் முனியா மேஸ்திரி முதலியவர்களும், ஒக்கிலியக் கவுண்டர் சமூகத்தாரில் பிரதானப்பட்டவர்களான ஸ்ரீமான்கள் பட்டக்கார வீரப்பக் கவுண்டர் அவர்கள், புளியம்பட்டி கிஞ்சப்பக் கவுண்டர் அவர்கள் முதலியவர்களும், நாட்டுக் கோட்டை நகரத்தார்களில் சிறந்தவரான காளீஸ்வரர் மில் ஸ்ரீமான் சாத்தப்ப செட்டியார் அவர்களும், மகமதிய சமூகத்தின் சிரேஷ்டர்களான ஈரோடு ஜனாப் கா. அ.ஷேக்தாவூத் சாயபு பகதூர், உடுமலைப்பேட்டை ஜனாப் காஜா முகய்யதீன் சாயபு பகதூர் முதலியவர் களும் இன்னமும் இந்த ஜில்லாவில் பெரிய வியாபாரிகளான ஸ்ரீமான்கள் வி.எஸ். செங்கோட்டய்ய முதலியார், மு.ச. முத்துக்கருப்பஞ் செட்டியார் போன்றவர்களும், சன்னியாசிகளில் ஸ்ரீலஸ்ரீ கைவல்லிய சுவாமியார் போன்றவர்களும் ஸ்ரீமான் முதலியாரவர்களைத் தேர்தலுக்கு நிற்கும்படி வற்புறுத்தியும் அவருக்காக ஊக்கத்துடன் பிரயத்தன மெடுத்துக் கொண்டுமிருக்கிறார்கள் என்றால் மற்றபடி முதலியாரின் குணாதிசயங் களைப் பற்றியும் அவரது செல்வாக்கைப் பற்றியும் யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்காதென்றே எண்ணுகிறோம்.
ஸ்ரீமான் முதலியார் அவர்களை இந்த ஜில்லாவின் சார்பாய் சட்டசபை அங்கத்தினராக்க வேண்டுமென்கிற எண்ணங்கொண்டே இவ்வளவு பெரிய மனிதர்களும் இந்த ஜில்லா போர்டு தலைவர் ஸ்தானத் திற்கு ஸ்ரீமான் முதலியார் அவர்கள் அவ்வளவு லட்சியமில்லாதிருந்துங்கூட ஒரே மூர்ச்சாய் இவரை பிரசிடெண்டாக ஆக்கியிருக்கிறார்கள். இது போலவே சட்டசபைத் தேர்தல் விஷயத்திலேயும் மேற்சொன்ன கனவான் களெல்லோரும் முதலியாருக்காக வேண்டிய வேலை செய்வதாக வாக்குறுதி கொடுத்திருப்பதோடு இதுமுதலே முயற்சி செய்து கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
ஸ்ரீமான் முதலியார் அவர்கள் சட்டசபை மெம்பர் பதவியை அடை வதிலோ அதன் மூலமாய் தன்னால் செய்யக்கூடுமென்று நினைக்கிற விஷயங்களைப் பொது ஜனங்களுக்குச் செய்வதிலேயோ நமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. ஆனால் இப்போது தேச முன்னேற்றத்திற்கு அவசியமான தும் மகாத்மாவின் உபதேசமானதுமான தீண்டாமை விலக்கு, கதர் என்கிற இவ்விரண்டு விஷயத்திற்கனுகூலமாக தமது பெருமையையும், செல்வாக்கையும், பதவிகளையும் கொஞ்சம் உபயோகப்படுத்துவார்களே யானாலும் அதைத் தான் நாம் உண்மையான பொதுநல சேவை, தேச கைங் கரியம் என்று சொல்வோம். தீண்டாமை விலக்கு விஷயத்தில் நமது முதலி யார் சுமார் 20 வருஷத்திற்கு முன்பாகயிருந்தே அனுகூலமாயிருக்கிறார் என்பதும் அவருக்கு அவ்வித வித்தியாசமில்லை என்பதும் நமக்குத் தெரிந்த விஷயமே. ஆனால் கதர் விஷயத்தில் கதரின் தத்துவங்களை உணர்ந்திருந்தும் வீட்டில் கதர் வஸ்திரங்களை உபயோகப்படுத்திக் கொண்டு வந்தும் வெளியில் கதர் அணிவதற்கு வெட்கப்படுகிறாரா? அல்லது பயப்படுகிறாரா? என்பது நமக்குப் புலனாகவில்லை. இதுவரையில் எப்படியிருந்து வந்த போதிலும் இனிமேலாவது கதரைத் தவிர வேறு வஸ்திரங்கள் உடுப்பதில்லை என்றும் தன்னுடைய செல்வாக்குகளை கதருக்கு உபயோகப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை என்றும் உறுதி சொல்வாரேயானால் சட்ட சபைப் பதவியை அடைவதற்கு இப் பொழுது நிற்கும் நான்கு ஐந்து அபேட்சகர்களில் நமது முதலியார் முதன்மையானவர் என்று சொல்லக்கூட நாம் முன் வருவோம். அதில்லாத வரையில் மற்றவர்களைப்போல் இவரும் ஒருவர் என்றுதான்சொல்லுவோம்.
குடி அரசு – கட்டுரை – 08.08.1926