சென்னையில் திரு.எஸ்.ஆர். தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ். ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி. ஆர். தாஸ் அவர்களின் தாயாதி சகோதிரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் ஐம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயிருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங்களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதியாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரியமடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலை மையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்தவரான ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸ் அவர்களை அனுப்பி யதாகத் தெரிந்தோம்.

ஸ்ரீமான் எஸ்.ஆர். தாஸ் அவர்கள் சென்னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப்பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர். சதாசிவய்யர், மகாகனம் சீனி வாச சாஸ்திரி, ஜட்ஜுகள் குமாரசாமி சாஸ்திரி, சீனிவாசய்யங்கார், எ.ரெங்க சாமி ஐயங்கார் , வி.ராம்தாஸ், எ.வி. இராமலிங்கய்யர், வி.டி. கிருஷ்ண மாச்சாரி, சர்.சி.பி. இராமசாமி ஐயர், அட்வகேட் ஜெனரல் வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், எஸ். வரதாச்சாரி, கே. பாஷ்யம் ஐயங்கார், ஜி.எ. நடேசன் ஐயர் முதலிய பல பார்ப்பனர்கள் பெரிய விருந்து நடத்தி தாஸ் அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். இவ்விருந்தின் செலவின் பெரும்பாகம் திருப்பதி மகந்துவினுடையதென்று சொல்லப்படுகிறது. இந்த விருந்துக்கு தன்னை சன்னியாசி என்று சொல்லிக்கொள்ளும் திருப்பதி மகந்தும், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அரசாங்க சம்பந்தமான நபர்களுக்கு நடக்கும் விருந்து முதலியவைகளை பகிஷ் காரம் செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களும், ஒத்துழையா நாற்றம் தங்கள் மீது வீசப் படுகிறதாகக் கூறிக் கொள்ளுகிறவர்களுமான ஸ்ரீமான் எ. ரெங்கசாமி ஐயங்கார், வி.ராம்தாஸ், கே. பாஷ்யம் ஐயங்கார் முதலிய பார்ப்பனர்களும் வந்திருந்ததிலிருந்தும், அவ்விருந்தில் வாலிபப் பெண்கள் மூலமாக சங்கீதம் நடத்தி ஸ்ரீமான் எஸ். ஆர். தாசை ரம்மிக்கச் செய்ததிலிருந்தும் இவ்விருந்தின் சூழ்ச்சியும் தந்திரமும் விருந்து நடத்தியவர்களின் கருத்தும் நாம் சொல்லாமலே விளங்கும்.

ஸ்ரீமான் எஸ். ஆர். தாஸ் விருந்துக்கு திருப்பதி மகந்தைத் தருவிக்க வேண்டிய காரணம் என்ன? பெண்களை அழைத்து சங்கீதம் நடத்த வேண்டிய அவசியமென்ன? திருவாடுதுறை மடத்திலிருந்து வந்ததாகச் சில விஷயங்களை ஸ்ரீமான் எஸ். ஆர். தாசுக்கு அறிவிக்க வேண்டிய காரணம் என்ன? சர்க்காரை பகிஷ்கரிக்கும் சுயராஜ்யக் கட்சியார் அங்கு வர வேண் டிய வேலை என்ன? ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் கவர்னருக்குக் கொடுத்த ஒரு விருந்தின் போதே அது சுயராஜ்யக் கட்சியாருடைய விருந்தல்ல, தனிப்பட்ட நபர் செய்த விருந்துமல்ல என்று சொல்லித் தப்பித்துக்கொண்ட நமது சுயராஜ்யக் கக்ஷிப் பார்ப்பனர்கள் ஸ்ரீமான் ரெங்காச் சாரியார் என்கிற ஒரு தனிப்பட்ட நபர் நிர்வாக சபை மெம்பர் என்கிற சர்க்கார் பிரதிநிதி உத்தியோகஸ்தருக்கு, அவர் சர்க்கார் வேலை சம்பந்தமாய் வந்திருக்கும் சமயத்தில் கொடுக்கப்படும் விருந்திற்கு இவர்கள் எப்படிப் போகக்கூடும்? இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த் தால் நமது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இந்திய அரசாங்கத்தில் நமது பார்ப்பனர்கள் இதுவரை சொல்லி வந்திருக்கும் கோள்களையும் செய்து வந்திருக்கும் சூழ்ச்சிகளையும் கெடுதிகளையும் உண்மை என்று உறுதிப்படுத்துகிறது.

குடி அரசு – கட்டுரை – 08.08.1926

You may also like...

Leave a Reply