“சர்க்காருக்கு ஜேய்” சர்க்கார் கக்ஷிக்கு சென்னை சட்டசபையில் இன்னும் 5 மெம்பர்கள் அதிகம் ( தொழிலாளர் நிலை)

தாழ்ந்த வகுப்பார்களுக்கென்றும் தொழிலாளர்களுக்கென்றும் சர்கார் தயவில் இந்தியா பூராவுக்கும் 12 ஸ்தானங்கள் அதிகப்படுத்தப் பட்டிருக் கிறது. ஆனால் இந்த 12 – ஸ்தானங்களும் அந்தந்த வகுப்பார்களால் தெரிந் தெடுக்கப்படாமல் சர்க்காரால் நியமிக்கப்படுவதாய்ப் போய்விட்டது. இதற் காக நாம் தற்கால நிலைமையில்
தொழிலாளர்கள் பொருட்டும் தாழ்த்தப் பட்ட வகுப்பார்கள் பொருட்டும் விசனப்படாவிட்டாலும் ஓட்டர்கள் பொருட்டு நாம் மிகுதியும் விசனப்படுகிறோம். தொழிலாளிகளுக்கென்றோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கென்றோ தேர்தலுக்கு அந்தந்தப் பிரிவார் கொண்ட ஓட்டர் தொகுதியில்லாத வரையில் தற்காலத் தேர்தலைவிட நியமனம் அத் தனை மோசமானதல்ல வென்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் தற்கால நிலைமையில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கென்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் போன்ற ஒரு வருணாச்சிரம தர்மி நிற்கக் கூடும். அதற்கு மற்றொரு வருணாச்சிரம தர்மியாகிய ஒரு மகந்து பணம் செலவு செய்யக் கூடும். ஆச்சாரியார் சட்ட சபையில் வந்து உட்கார்ந்து கொண்டு “ஒரு பார்ப்பனக் குழந்தை சாப்பிடு வதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி இருப்பேன்” என்று சொல் லுவார். பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதியார் என்போர் பார்த்துவிட்டதா லேயே ஒரு மாதம் பட்டினி கிடக்கும் நமது ஆச்சாரியார், ஒரு சமயம் “தாழ்ந்த வகுப்பார்” என்று சொல்லப்பட்டவர்கள் பார்க்க நேர்ந்துவிட்டால் உடனே அவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்றுதான் தீர்மானம் கொண்டு வருவார்.

அதுபோலவே தொழிலாளர்களுக்கென்று தேர்தல் ஏற்பட்டால் முதலாளிகளைவிட மோசமான முதலாளி கூட்டத்தினரான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார் தொழிலாளி அபேட்சகராக நிற்பார். ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணம் செலவு செய்வார். சட்டசபையில் போய் உட் கார்ந்துகொண்டு பார்ப்பனர்கள் கூலி கொடுக்காவிட்டாலும் “சூத்திரர் களான” தொழிலாளிகள் வேலை செய்துதான் தீர வேண்டும். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு வேலை செய்வதற்கென்றே(“பார்ப்பனர்களின் வேசி மக்களான”) “சூத்திரர்”களைக் கடவுள் சிருஷ்டித்து இருக்கிறார் என்கிற மனுதர்ம சாஸ்திரத்தைத் தீர்மானமாகக் கொண்டுவருவார். இந்த நிலைமை யில் நல்ல வேளையாக இப்பன்னிரண்டு ஸ்தானங்களும் பொதுத் தொகுதி தேர்தலுக்கு வராமல் போனதைக் குறித்து சர்க்காரின் நடவடிக்கைக்கும் இவ்விரு வகுப்பாரின் பாக்கியத்திற்கும் நாம் சந்தோஷப்படுகிறோம். ஆனால் பொதுத்தொகுதி ஒட்டர்களைப் பற்றி நாம் ஏன் விசனப்படு கிறோமென்றால், இந்த 12-ஸ்தானங்களின் தேர்தலுக்காக செலவு செய்யப் படும் பணத்தில் பங்குபெறக் கூடிய யோகம் இந்நியமனங்களால் சில ஓட்டர்களுக்கு இல்லாமல் போய்விடு கிறதே என்பதுதான்.

நிற்க,சர்க்கார் இந்நியமனங்களையாவது அந்தந்த வகையாரிலேயே செய்வார்களா என்பது நமக்குப் பெரிதும் சந்தேகமாகவே இருக்கிறது.

இவ்வித அனர்த்தங்கள் விளையக் காரணஸ்தர்கள் யாரென்று பார்ப் போமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதிகளாயிருப்பவர் களேயாகும்.எத்தனைக் கெத்தனை எல்லா வகுப்பாருக்கும் சரியான பிரதி நிதித்துவம் கிடைப்பதற்கில்லாமல் ஒரு வகுப்பாரே எல்லா வகுப்புக்கும் பிரதிநிதிகளாயிருக்க சூழ்ச்சியும் தந்திரங்களும் செய்கிறார்களோ, அத்த னைக்கத்தனை பிரதிநிதித்துவமற்ற வகுப்பார் சர்க்கார் தயவை நாடித்தான் பிரதிநிதித்துவம் பெற முடியும். இதில் சர்க்கார் தயவை நாடும் வகுப்பார் மீது கொஞ்சமும் குற்றமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நானும் பிரதிநிதித்துவம் பெற சம்மதிக்கமாட்டேன், சர்க்காரிடமும் நீ பிரதிநிதித் துவம் பெறக் கூடாது” என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் எப்பேர்ப் பட்ட கொடுமைக்காரர்கள் என்பதை பொது ஜனங்கள் தான் உணர வேண்டும். அல்லாமலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்து விட்டால் சர்க்கார் தயவை எதிர்பார்ப்பதற்கும் ஆள்கள் இல்லாமல் போய் விடும். ஆதலால் தான் அதிக பிரதிநிதித்துவம் அடையத்தக்க முறையில் முன்னணி யில் நிற்கும் பார்ப்பனரும் சர்க்காரும் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் என்றால் தங்களுக்கு ஆபத்து வந்து விட்டதாய்ச் சொல்லிக் கொண்டு தேசம் போய்விடும் – தேசம் போய்விடும் என்ற சத்தம் போடுவதே யொழிய வேறில்லை . தேசம் யாருக்குப் போய்விடும்? பார்ப்பனருக்கும் சர்க்காருக் கும் தான் போய்விடும்? மற்ற வேறு யாருக்கும் போய்விடாது.

இப்பன்னிரண்டு ஸ்தானங்களுள் தொழிலாளருக்கு ஏற்பட்ட நான்கு ஸ்தானங்களில் ஒன்று கூட தமிழ் நாட்டிற்கு இல்லாமல் போனதை நினைத் தால் நம் நாட்டு தொழிலாளிகள் ஏமாற்றமடைந்ததாகவே கருதி துக்கப்படு வார்கள். ஆனால் அவர்கள் ஒரு சிறிதும் துக்கப்படக் காரணமில்லை யென்றே சொல்லுவோம் . சென்னை மாகாணத்திலாகட்டும் தமிழ் நாட்டிலா கட்டும் ஒழுங்கான தொழிலாளர் சங்கங்கள் ஒன்று கூட இல்லை என்றே சொல்லுவோம். உதாரணமாக சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கர்னாட் டிக் மில் தொழிலாளர்களின் யோக்கியதையோ மிகவும் வேடிக்கையானது. ஒரு தொழிற்சாலை தொழிலாளருக்கு இரண்டு சங்கம் இருக்கிறது. அதில் ஒன்று பார்ப்பனர் கட்சியான சுயராஜ்யக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. மற்றொன்று முதலாளிகள் கட்சியும் பார்ப்பனரல்லாத ஜஸ்டிஸ் கட்சியும் ஆகிய இவ்விரண்டு கட்சிகளின் ஆதிக்கத்திலுமுள்ளது. எப்படி யெனில் முன்னையதற்கு ஸ்ரீமான் சிவராவ் என்கிற ஒரு பார்ப்பனர் அக்கிராசனர். முதலாளியும் சுயராஜ்யக் கட்சி ஜீவனுமான ஸ்ரீமான் எ.ரெங்க சாமி அய்யங்கார் உப அக்கிராசனர். இவர்கள் இருவரும் சுருதி யுக்தி அநுபவம் ஆகிய இம்மூன்றில்எந்த வகையில் தொழிலாளருக்குத் தலைவர்களாகவோ பிரதிநிதிகளாகவோ உரிமை உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை . இது போலவே மற்றொரு கட்சியாரான ஜஸ்டிஸ் கட்சி யாருக்கு தொழிலாளர் ஏறக்குறைய எல்லோ ரும் தங்கள் வகுப்பார் என் பதைத் தவிர, வேறு எந்த வழியில் இப்போதி ருக்கும் முதலாளிகளையோ ஜஸ்டிஸ் கட்சியையோ சேர்ந்த தலைவர்கள் தொழிலாளிகளை நடத்தவோ பிரதிநிதிகளாகவோ உரிமை உடையவர்கள் என்பது நமக்கு விளங்க வில்லை.

இவ்விரண்டுந்தான் இப்படி இருக்கிறது என்று வைத்துக் கொண்டா லும், தொழிலாளிகளுக்காவது தனித்த முறையில் தங்களுக்கு ஒரு ஸ்தாப னத்தை வைத்து நடத்திக் கொள்ள யோக்கியதை இருக்கிறதா என்ற பார்த் தால், சில காரணங்களால் அதுவும் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளு வதற்கு யோக்கியதை இல்லை. என்னவெனில், காலம் சென்ற ஸ்ரீமான் டாக்டர் நாயர் பெருமானின் ஞாபக தினத்தை கொண்டாட சென்ற வாரம் சென்னை கடற்கரையில் ஒரு பெரிய கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத் தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் மில் தொழிலாளர்கள் சார்பாய் டாக்டர் நாயர் பெரு மான் ஞாபகத்திற்காக ஒரு வெள்ளிக்கிண்ணம் அளிப்பது என்று தொழிலாளர்கள் சுமார் 5000, 6000 பேர் வரையில் வந்து கூடினர். அக் கூட்டத்திற்கு டாக்டர் நாயர் பெருமானால் ஆரம்பிக்கப்பட்ட பார்ப்பன ரல்லாதார் கக்ஷித்தலைவரும் சென்னை அரசாங்க முதன் மந்திரியுமான கனம் சர். பனகால் ராஜா அக்கிராசனம் வகித்தார். இக்கூட்டத்திற்கு சென் னையில் உள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் ஏராளமாய் வந்திருந்தார்கள். இக் கூட்டம் சென்னைப் பார்ப்பனரின் கக்ஷிக்கு பெரிய கண்வலிப் போல் இருந்து இருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். அப்படியிருக்க அப் பார்ப்பனரின் தலைமையின் கீழ் உள்ள பார்ப்பனரல்லாத தொழிலாளி களான ஆயிரக்கணக்கான பேர் கலகம் செய்வதற்கென்றே அக்கூட்டத் திற்கு வந்து அப்பார்ப்பனர்கள் ருப்தி அடையத்தக்க வண்ணம் அடி தடியும் கலகமும் உண்டாக்கியும் கல்லுகள் எறிந்து நிரபராதிகளைக் காயப் படுத்தவும் செய்தார்களாம். இப்படி இருந்தால் இவர்கள் தனித்து தங்கள் சங்கங்களை நடத்திக் கொண்டு போகத்தக்க யோக்கியதை உடையவர்கள் என்று யார் ஒப்புக்கொள்வார்கள்? கலகம் செய்து கல்லெறிந்தால் யாருக்கு லாபம் ஏற்பட்டது; யார் யோக்கியதை குறைந்தது என்று யோசித்தால் பார்ப் பனர்கள், தொழிலாளர்களுக்கும் புத்தியில்லை, அவர்களை நடத்த நாங்கள் தான் தர்மகர்த்தாக்கள் என்று சொல்லிக் கொள்ள இடம் கிடைத்தது. பார்ப்பன ரல்லாத தொழிலாளிகளுக்கு, “காலிகள்” “கலகக் காரர்”கள் என்று சொல்லும் படியான கெட்டபெயர் கிடைத்தது. காலஞ்சென்ற கனவானைக் கௌரவிப்ப தற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் தொழிலாளிகள் வந்து கலகம் செய்யக் காரணம் என்ன? என்பது நமக்கு விளங்கவில்லை. தொழிலாளிகளுக்குப் பணம் இல்லாததற்குக் காரணம் வேண்டுமானால் முதலாளிகளின் கொடுமை என்ற சொல்லிக் கொள்ளலாம்.

குலாபிமானமும் ஒழுங்கு முறையும் இல்லாததற்கு யார் பேரில் குற்றம் சொல்லுவது? பார்ப்பன விஷமமும் பார்ப்பன சூழ்சியுந்தான் காரணம் என்ற சொல்ல வேண்டும். அத்தொழிலாளர் கூட்டத்தில் கண்ணியமான தொழிலாளர்களாயிருப்பவர்கள் டாக்டர் நாயர் பெருமானை உத்தேசித்தா வது தங்களின் இவ்வித நடவடிக்கைகளுக்குக் கடவுளை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். எவ்விதத்திலும் பார்ப்பனர் சம்பந்தத்தையும் முதலாளிமார்கள் சம்பந்தத்தையும் விலக்கிக்கொண்டு தங்கள் கால்களி லேயே நிற்க வேண்டும். தங்களுக்கு எல்லா விஷயங்களுக்கும் தனிப் பிரதி நிதித்துவம் கிடைக்கும்படி உழைக்க வேண்டும். அப்படிக்கில்லாத வரையில் தொழிலாளர்களுக்காக எத்தனை ஸ்தானங்கள் சட்டசபையிலோ இந்தியா சட்டசபையிலோ ராஜாங்க சபையிலோ வழங்கப்பட்டாலும் ஒரு பலனும் இல்லை என்றே சொல்லுவதோடு சென்னை சட்டசபைக்கு தாழ்த்தப்பட்ட வர்களுக்காக புதிதாக ஏற்பட்ட 5-ஸ்தானங்களும் சர்க்கார் கட்சிக்கு இன்னும் 5-மெம்பர்களை அதிகமாகக் கொடுத்திருக்கிறதென்றுதான் சொல்லுவோம்.

குடி அரசு – கட்டுரை – 25.07.1926

You may also like...

Leave a Reply