காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்
மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மரணதண்டனையை எதிர்த்து, தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்ட ‘தழல் ஈகி’ செங்கொடியின் நினைவு நாள் செப். 28. செங்கொடியின் பொது வாழ்வகமாகிய காஞ்சி மக்கள் மன்றம், அன்று செங்கொடியின் நினைவுநாளை செங்கொடியின் இலட்சியத் திருநாளாக பின்பற்றியது. வெகு மக்களும் இயக்கங்களும் சாரை சாரையாக அணி வகுத்து, செங்கொடி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஈழத் தமிழர் விடுதலைக்கும், மரணதண்டனை ஒழிப்புக்கும் சூளுரைத்தனர்.
பிற்பகல் 4 மணியிலிருந்து மக்கள் மன்றத்தின் கலைக் குழுவினர், ஜாதி, மத எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு ஈழப் போராளிகளின் வீரங்களைப் பறை சாற்றும் எழுச்சி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ‘ஜாதி-பெண்ணடிமை’ ஒழித்த சமத்துவபுரியாக விளங்கும் காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அன்பைப் பரிமாறினர்.
காஞ்சி மக்கள் மன்றத்தின் அடுத்த இளைய தலைமுறை பறைகளை கையில் எடுத்தது; குழுக்களாக நடனமாடியது; பாடியது. மக்கள் தொண்டினை வாழ்க்கையாக்கிக் கொண்ட மன்றத்தின் செங்கொடி நினைவு நிகழ்வுகளில் அரசியல், சமுதாய இயக்கத் தலைவர்களும் பங்கேற்று, செங்கொடியின் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் உரையாற்றினர். இயக்கத் தலைவர்களின் வரிசையில் நிறைவுரையாற்றினார், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்கள் களப்போராளிகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பதை அவர் பட்டியலிட்டார்.
மரண தண்டனை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, ஈழ விடுதலை என்று இலட்சிய முழக்கங்கள் இசையாகவும் உரையாகவும் ஒலித்து செங்கொடியின் நினைவுகளை சுமந்து நின்றன. இதுவே செங்கொடிக்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பெரியார் முழக்கம் 10092015 இதழ்