அறிவியல் போர்வையில் புதிய மோசடி
நவீன மூடநம்பிக்கைகள் இப்போது அறிவியல் பெயரில் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, ‘நடு மூளை செயலாக்கம்’ (மிட் பிரைன் ஆக்டிவேஷன்) என்ற பெயரில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி, பம்பாய் நகரங்களைத் தொடர்ந்து இப்போது சென்னையிலும் இது பரவி வருகிறது. மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டுக்கும் இடையில் உள்ள நடுமூளைப் பகுதியைத் தீவிரமாக இயக்கினால், அது செயல்படும்போது கண்களை மூடிக்கொண்டு கூட படிக்கலாம்; படித்தவை நன்றாக பதியும். தேர்வுகளில், போட்டிகளில் குழந்தைகள் சாதனை படைப்பாளர்கள் என்ற ஒரு நம்பிக்கை பரப்பப்பட்டு, இதற்காக 10 நாள் பயிற்சி, 15 நாள் பயிற்சி என்ற மய்யங்கள் உருவாகி வருகின்றன. குழந்தைகளின் படிப்புக்காக எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் ரூ.25000 வரை கட்டணம் செலுத்தி இந்த மய்யங்களில் சேர்க்கிறார்கள்.
சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் பேசிய பகுத்தறிவாளர் பேராசிரியர் நரேந்திர நாயக், ‘இந்த மய்யங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பொய் சொல்வதற்குத்தான் கற்றுத் தரப்படுகிறது’ என்றார். “கண்களைக் கட்டிக் கொண்டு எதிரே உள்ள பொருள்கள் என்னவென்று சொல்வது போல், கண்களை கட்டிக் கொண்டு சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டுவார்கள். (கண்களில் மைதா மாவை பிசைந்து, ஒட்டிக் கொண்டு, அதன் மீது ரூபாய் நாணயத்தைப் பதித்து, அதன் மேலே கருப்புத் துணியால் போர்த்தி, கண்களைக் கட்டும்போது, கருப்புத் துணியை சற்று தூக்கி விட்டால், கண்களில் ஒட்டாத மைதா மாவு பார்வையிலிருந்து விலகும்போது, கருப்புத் துணி வழியாக கண்பார்வை தெரியும்.) இப்படி கண்களைக் கட்டி இரு சக்கர வாகனம் ஓட்டும் தந்திரம்தான், கண்களைக் கட்டிக் கொண்டு புத்தகம் பார்ப்பதும். இருட்டறையில் இவர்களால் புத்தகத்தை படிக்க வைக்க முடியுமா?” என்று கேட்டார் நரேந்திர நாயக்.
“இந்தப் பயிற்சியைப் பெறுகிற குழந்தைகளிடம், ‘உன் மூளையில் ஒரு அற்புத சக்தியைக் கொண்டு வந்திருக்கிறோம். இதை உங்கள் பெற்றோர்களிடமோ, அல்லது வேறு எவரிடமோ சொன்னால், சக்தி போய்விடும்’ என்று அச்சுறுத்துகிறார்கள். இது குழந்தைகளை பொய் சொல்ல வைப்பதோடு, அவர்களின் ஆக்கபூர்வ சிந்தனை வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது” என்றார் பேராசிரியர் நரேந்திர நாயக். இந்த பயிற்சி மய்யங்கள் நடத்து வோருக்கு அவர் சவால் விட்டார். “ரூ.50000 உறுதித் தொகை கட்டி, நீங்கள் நடத்தும் பயிற்சி அறிவியல்பூர்வமானது என்று நிரூபித்துக் காட்டுங்கள். நிரூபித்தால், அந்த இடத்திலேயே நாங்கள் ரூ. 5 இலட்சம் வழங்கத் தயார் என்று சென்னையில் செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் சவால் விட்டார். டெல்லி உயர்நீதின்றத்தில் இந்த மோசடிகளை தடை செய்யக் கோரி பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களிடையே அறிவியலைப் பரப்ப வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரைக்கு ஆட்சிகள் முட்டுக்கட்டைப் போடுகின்றன. தமிழக அமைச்சர்களே மூட நம்பிக்கையின் மொத்த உருவங்களாக வலம் வருகிறார்கள்.
‘பார்ப்பான் சாப்பிட்டு வீசி எறிந்த எச்சில் இலை மீது உருண்டால் தோல் வியாதி குணமாகும்’ என்று நம்பும் பக்தர்கள், கருநாடகத்தில் இருக்கிறார்கள். மாநில அரசு இதற்கு தடை போட்டால் பார்ப்பனர்கள் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை போய் தடை கேட்கிறார்கள்.
இந்த நிலையில் பகுத்தறிவைப் பரப்பும் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
பெரியார் முழக்கம் 10092015 இதழ்