எங்கே நிம்மதி?
மனதுக்கு நிம்மதி தேடி, கடவுளைத் தேடிப் போகிறோம் என்கிறார்கள் – பக்தர்கள்! ஆனால் கதை தலைகீழாகிவிட்டது. இப்போதெல்லாம் “கடவுளே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்” என்ற குரல் கேட்கிறது.
இதைச் சொல்வது – பெரியார் இயக்கத்தினர் அல்ல; சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டி.எஸ். சிவஞானம் அடங்கிய அமர்வுதான், இப்படி ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டிருக்கிறது! அதிரடி இத்துடன்முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது.
கோயில் திருவிழாக்களில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்குமானால், காவல்துறை திருவிழா நடத்துவதற்கே அனுமதி வழங்கக் கூடாது. இது நீதிபதிகள் வெளியிட்ட இரண்டாவது அதிரடி.
கோயில் விழாக்களை தடை போடுவது, கடவுளுக்கு செய்யும் அவமதிப்பு அல்லவா என்று ‘சங்பரிவாரங்கள்’ தொடை தட்டி, மீசை முறுக்கிக் கொண்டு கிளம்பக் கூடும். அதற்கும் நீதிமன்றம் ஆப்பு வைத்திருக்கிறது. “இப்படி பக்தர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதை இந்தத் திருவிழாக்களுக்கு தடை போட்டால் மட்டுமே கடவுள் அதைப் பார்க்காமல் இருப்பார்” என்று ஓங்கி அடித்துவிட்டது உயர்நீதிமன்றம்.
இதைத் தானே இத்தனை ஆண்டுகாலமாக பெரியாரியல்வாதிகளும், மதச்சார்பின்மையாளர்களும் தொண்டைக் கிழியக் கூறி வந்தார்கள்.
அப்போதெல்லாம், “இதோ, ‘இந்து’ விரோதிகள்; இந்து மதத்தைப் புண்படுத்துகிறார்கள்; தமிழக அரசே கைது செய்; கொடும்பாவி எரிப்போம்; அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குவோம்” என்றெல்லாம் தோள்தட்டி தொடை தட்டிக் கிளம்பிய ‘சேனைகள்’, ‘முன்னணிகள்’ – இப்போது நீதிமன்றம் ‘செவியில் அறைந்து’ கூறியதற்குப் பிறகு பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடப்பது ஏன்?
“கடவுளையே நிம்மதியிழக்கச் செய்து விட்டீர்களே, பக்தர்களே! ‘பாவி’களே! இதைவிட தெய்வ நிந்தனை ஏதாவது உண்டா?” என்று உண்மையான கடவுள் பக்தர்கள் எவரிடமிருந்தும் எந்த முணுமுணுப்பும்கூட வரவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் அலசி ஆராயும் தமிழ் நாட்டின் நாளேடுகள் எல்லாம் ‘கப்சிப்’ ஆகிவிட்டன. நீதிமன்றத்தின் கருத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ எழுத முடியாமல் பறி கொடுத்தவர்களாக திக்குமுக்காடி நிற்கிறார்கள்.
விவாதங்களுக்கு தலைப்புகளை வலைவீசி தேடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளும் இந்தப் பிரச்சினையில் வாயடங்கிப் போய்விட்டன!
“கடவுளின் நிம்மதியையே பக்தர்களாகிய மனிதர்கள் கெடுக்கிறார்கள்; கடவுள் நிம்மதியைக் குலைக்கும், மனிதர்கள் நடத்தும் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது” – இது நீதிமன்ற கருத்து.
வேறு வகையில், இதையேதான் பெரியாரியலாளர்களும் கூறுகிறார்கள்.
“கடவுளை உண்டாக்கியது மனிதன்!
கடவுளை ஜாதிவாரியாக கூறு
போட்டது மனிதன்!
கடவுள் பெயரால் மூடநம்பிக்கைகளை
திணித்தது மனிதன்!
கடவுள் பெயரால் சமூகத்தின்
நிம்மதியைக் குலைத்தது மனிதன்!
சமூக அமைதியைக் குலைக்கும்
கடவுளும் வேண்டாம்;
கலவரங்களை உருவாக்கும்
திருவிழாக்களும் வேண்டாம்”
இதைச் சொல்லும் பெரியார் இயக்கங்களை ‘இந்து விரோதிகள்’ என்று சீறிக் கிளம்பும் வீரர்களே! சூரர்களே! இப்போது நீதிமன்றம் கூறியதற்குப் பிறகும் கைகட்டி, வாய் பொத்திக்கிடப்பது ஏன்?
உச்சநீதிமன்றத்தின் கருத்து உங்கள் நிம்மதியையும் குலைத்து விட்டதோ?
பெரியார் முழக்கம் 27082015 இதழ்