“சுதேசமித்திர”னின் பித்தலாட்டம்
சென்ற இதழ் ‘குடி அரசி’ல் திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியார் அவர்கள் சுயராஜ்யக் கட்சியிலிருந்து விலகுகிறார் என்பதாக வரைந்திருந்த விஷயத்தை வாசகர்கள் கண்ணுற்றிருக்கலாம். அதைப் பார்த்தவுடன் பார்ப்ப னர் கக்ஷியாய சுயராஜ்யக் கட்சிக்குப் பேராபத்து வந்து விட்டதெனக் கருதி “குடி அரசின் கட்டுக்கதை – ஸ்ரீமான் இராமலிங்க செட்டியாரின் மறுப்பு” என்ற தலைப்பில் ‘சுதேசமித்திரன்’ ஒரு மறுப்பு எழுதியிருக்கிறது.
அதில் திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியாரவர்கள் ‘மித்திரன்’ நிரூபரி டம் கூறுவதாக எழுதியிருக்கும் விஷயங்களைக் கவனித்துப் பார்த்தால் ‘குடி அரசு’ விஷயம் கட்டுக்கதையா, ‘சுதேசமித்திரன்’ விஷயம் அயோக்கியத் தனமா என்பது புலனாகும். திரு. செட்டியார் மறுபடி கூறுவதாவது:-
“என்னுடைய அபிப்பிராயம் எதுவும் மாறவில்லை. நான் சுயராஜ்யக் கட்சி அங்கத்தினராக இருந்ததே இல்லை. ‘பார்ப்பன ரல்லாத கட்சி’ என்பது ஜஸ்டிஸ் கட்சியைக் குறிப்பிடுவதானால் அதன் சார்பாக நான் தேர்தலுக்கு நிற்கப் போவதாக எவரிடமும் சொல்லவே யில்லை. உத்தியோகங்களை ஏற்றுக் கொள்ளுவதன் சம்பந்தமாக நான் எவ்வித அபிப்பிராயம் கொண்டி ருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. உத்தியோகம் ஏற்றுக்கொள் ளும் விஷயத்தில் வைதீக காங்கிரஸ்காரர்களுக்கும் (தங்கள்) தேசீயக் கட்சி யினருக்கும் அபிப் பிராய பேதமிருந்த போதிலும் நாட்டில் ஒற்றுமை ஏற்பட வேண்டு மென்னும் நோக்கத்துடன் காங்கிரஸ் அபேக்ஷகர்களாக நிற்க சம்மதித் தோம். பகிஷ்காரத் தீர்மானங்களை வாபீசு வாங்கிக் கொண்டு நாடு சட்ட மறுப்புக்குத் தயாராயில்லாததால் அதை ஆரம்பிப்பதில்லை என்று காங்கிரஸ் தீர்மானம் செய்ததால் இதற்கு நாங்கள் கட்டுப்பட முடிந்தது. இதன் பிறகு நாட்டின் கட்சிகளின் நிலைமையும் தனிப்பட்ட நபர்களின் அபிப்பிராயமும் அடிக்கடி மாறி வருவதால் தேசீயவாதி கள் (தாங்கள் ) அடிக்கடி தங் கள் நிலைமையைப் பரிசீலனை செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள். தேசீயவாதிகளில் சிலர் பரஸ்பர ஒத்து ழைப்பு மனோபாவம் கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசீயவாதிகள் (தாங்கள்) ஜுலை மாதம் சட்டசபைக் கூட்டக்காலத்தில் கூடி யோசனை செய்யும் வரையில் தற்கால ராஜீய நிலைமை சம்பந்தமாக எப்படி நடந்து கொள்வார்களென்று தற்பொழுது கூறமுடியாது”
என்று இவ்வாறு திரு. இராமலிங்கம் செட்டியார் சொன்னதாக எழுதி யிருக்கிறது. “மித்திரன்” நிரூபர் எழுதியதில் எவ்வளவு புரட்டு பித்தலாட்டம் இருக்கும் என்பதை மறந்து, ‘மித்திரன்’ கூற்றை அப்படியே எடுத்துக் கொண்டு பார்ப்போம்.
திரு. இராமலிங்கம் செட்டியார் சுயராஜ்யக் கட்சியை விட்டு விலகி விட்டதாக திரு. செட்டியார் சொன்னார் என்று ‘குடி அரசு’ நிரூபரிடம் திரு. வெரிவாட செட்டியார் கூறியதாக ‘குடி அரசு’ எழுதுகிறது. ஆனால் திரு. இராமலிங்கம் செட்டியார் தான் ஒரு நாளும் சுயராஜ்யக் கட்சியில் சேரவே யில்லை என்று சொன்னதாக மித்திரன் நிரூபர் எழுதியிருப்பதாக ‘மித்திரன்’ பிரசுரித்திருக்கிறது. இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? பின்னும் திரு. செட்டியார் சொன்னதிலிருந்து இதுவரை சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர்கள் தங்கள் கட்சியில் திரு. இராமலிங்கம் செட்டியார், திரு. வெள்ளியங்கிரி கவுண்டர் முதலியவர்கள் சேர்ந்திருப்பதாய் சொல்லிக்கொண்டது முழுப் பொய்யென்று இப்போது விளங்குகிறது. கோபியில் திரு. நாயக்கர் பேசும் போது சுயராஜ்யக் கட்சியில் வகுப்பு நன்மையைக் கவனிக்காத யோக்கிய மான பார்ப்பனரல்லாதார் யாராவது இருக்கிறார்களா என்று கேட்ட போது, உடனே ஒரு ஐயங்காரும் ஒரு ஐயரும் எழுந்து திரு. இராமலிங்கம் செட்டியார் இருக்கிறாரே அவர் யோக்கியமானவரல்லவா என்று கேட்டார் கள். அதற்கு திரு.நாயக்கரவர்கள் ‘‘உத்தியோகம் ஒப்புக் கொள்ளும் நிபந்தனையின் பேரிலேயேயிருக்கிறார்களேயல்லாமல் சுயராஜ்யக் கட்சி நிபந்தனையின்படி இல்லை” யென்றும் இதை செட்டியாரே தன்னிடம் கூறியிருப்பதாகவும் கூறினார். அதுவும் இப்போது ருஜுவாகி விட்டது.
தவிர திரு.இராமலிங்கம் செட்டியார் பார்ப்பனரல்லாதார் சார்பாய் சட்ட சபைக்கு நிற்கப் போவதாய்ச் சொன்னதாக அறிகிறோம் என்று ‘குடி அரசி’ல் எழுதியிருக்கிறது. அதற்குப் பதிலாக பார்ப்பனரல்லாதார் கட்சி என்று ஜஸ்டிஸ் கட்சியைச் சொல்லுவதானால் மாத்திரம் பார்ப்பனரல்லாதார் சார்பாய் தேர்தலுக்கு நிற்பதாய் சொல்லவில்லையென்றே சொல்லுகிறார். இதனால் ‘ஜஸ்டிஸ்கட்சி’யல்லாத பார்ப்பனரல்லாத கட்சியின் சார்பாக நிற்பதாய்ச் சொன்னதாக நன்றாய் வெளியாகிறது. ஒரு சமயம் தஞ்சையில் கூடிய தேசீயப் பார்ப்பனரல்லாதார் சார்பாக நிற்பதாய் வைத்துக் கொண்டா லும் ‘குடி அரசு’க்கு இது ‘மறுப்பு’ என்பதாய் எழுதக் காரணமேயில்லை.
திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியார் பார்ப்பனரல்லார் கட்சியின் சார் பாக நிற்பதாகவே திரு. வெரிவாட செட்டியார் ‘குடி அரசு’ பிரதிநிதியிடம் சொல்லியிருக்கிறாரே தவிர ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நிற்பதாகச் சொன்னார் என்று எழுதவேயில்லை.
தவிர திரு. சீனிவாசய்யங்கார் உடன்படிக்கைப்படி நடந்து கொள்வார் என்கிற நம்பிக்கை தனக்கு (டி.எ.இரா.செட்டியாருக்கு) இல்லை என்று சொன்ன தாக நமது பிரதிநிதி எழுதியிருக்கிறார். திரு. இராமலிங்கம் செட்டியாரும் அதை ஒப்புக் கொள்ளுகிறார். அதாவது நாட்டில் கட்சிகளின் நிலைமையும் தனிப்பட்ட நபர்களின் அபிப்பிராயமும் மாறி வருகின்றன. ஆதலால் தேசீய வாதிகளும் ( அதாவது தாங்களும்) தங்கள் நிலைமையை ஜாக்கிரதைப் படுத்திக் கொள்ள உரிமை உண்டு என்று சொன்னதாக நிரூபர் எழுதுகிறார் என்று ‘மித்திரன்’ எழுதுகிறது.
திரு.வெரிவாடச் செட்டியாரிடம் திரு. இராமலிங்கம் செட்டியார் “ஐயங் கார் ஒப்பந்தப்படி நடந்து கொள்ளுவார் என்று நம்ப முடியாமலிருப் பதால்” என்று சொன்னதாக ‘குடி அரசு’ பிரதிநிதி எழுதுகிறார். ஆனால் திரு. இராமலிங்கம் செட்டியார் ‘மித்திரன்’ நிரூபரிடம் “தனிப்பட்ட நபர் களின் அபிப்பிராயம் அடிக்கடி மாறி வருகின்றன” என்றே சொல்லி விட்டார். இதனால் ஐயங்கார் பேச்சுப்படி நடப்பார் என்று நம்பமுடிய வில்லை என்பதற்கும் ஐயங்கார் மாறிவிட்டார் என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பார்த்தால் திரு. இராமலிங்கம் செட்டியார் திரு. வெரிவாடச் செட்டியாரிடம் சொன்னதைப் பார்க்கிலும் ‘மித்திரன்’ நிரூபரி டம் இன்னும் கொஞ்சம் பலமாகவே சொல்லிவிட்டார்.
‘தனிப்பட்ட நபர்’ என்பது ஐயங்காரைக் குறிக்குமா என்பது கேள்வி. ஐயங்காரைத் தவிர வேறு தனிப்பட்ட நபரைப் பற்றி செட்டியார் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை. செட்டியாருக்கும் பொறுப் பான தனிப்பட்ட நபர் ஐயங்கார்தான். ஆதலால் “குடி அரசுக்கு மறுப்பு என்றும் “குடி அரசு” கட்டுக் கதை” யென்றும் பார்ப்பனப் பத்திரிகையான ‘மித்திரன்’ எழுதி பொது ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு அயோக்கியத் தன மென்பதை வாசகர் களே உணரும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.
ஆகவே திரு.இராமலிங்கம் செட்டியார் சுயராஜ்யக் கட்சியில் இல்லை யென்பதை “சுதேசமித்திர”னாலேயே உறுதி செய்யப்பட்டதற்கு வாசகர்கள் மகிழ்வார்களென்றும் திரு.இராமலிங்கம் செட்டியராவர்களிடம் பார்ப்பன ரல்லாதாருக்கிருந்த அதிருப்தி மாறியிருக்கு மென்றும் நினைக்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 04.07.1926