சட்டசபையை விட்டு வெளிவந்த ‘வீரர்’களின் செய்கை
சட்டசபையில் ஒரு பலனும் இல்லை என்றும், சட்டசபையிலிருந்து கொண்டு சர்க்காரை எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியும் சர்க்கார் மனம் கொஞ்ச மாவது இளகவில்லை என்றும், ஆதலால் இனி சட்ட சபையிலிருப்பது அவ மானம் என்றும், இந்த சர்க்காரின் யோக்கியதையை எடுத்து வெளியில் சொல்லப் போகிறோம் என்றும் வீரப்பிரதாபம் பேசிவிட்டு வெளியில் வந்த ‘வீரர்கள், என்ன செய்கிறார்களென்று பார்த்தால், மறுபடியும் சட்டசபைக்குப் போக ஓட்டர்களிடம் போய் எங்களை சட்டசபைக்கு அனுப்பினால் நாங்கள் உங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று ஓட்டுப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிகிறார்கள்.
இம்மட்டோடு நிற்கிறார்களா வென்று பார்த்தால், வீரப்பிரதாபம் பேசி, விட்டு விட்டு வந்த சட்டசபைக்கு அடுத்த கூட்டத்திற்கே போகிறார்கள். ஒரு கூட்டத்தின் பிரயாணப் படியை வாங்காமல் இருப்பதற்கு நமது ‘வீரர்(?)’ களுக்கு மனம் வரவில்லை. இதை அறிந்து “அகில இந்திய ஒப்பற்ற தலைவர்(?)” திரு. சீனிவாசய்யங்கார் போகும்படி உத்திரவு கொடுத்துவிட்டார்; அகில இந்திய காங்கிரஸ் காரியதரிசி திரு. எ.ரெங்கசாமி ஐயங்கார் மேல் ஒப்பம் போட்டு விட்டார்; ஆகையால் சென்னை, கல்கத்தா, பஞ்சாப், அஸ் ஸாம் முதலிய மாகாண சட்ட சபைகளுக்குப் போய்த்தீர வேண்டும். அங்கு போய் செய்ய வேண்டிய பல முக்கியமான வேலைகள் இருக்கின்றன. நாங்கள் போகா விட்டால் அநேக காரியம் கெட்டுப் போகும். போகாமல் நின்றுவிட்டால் ஓட்டர்களை ஏமாற்றி மோசம் செய்தது போலாகிவிடும். ஆதலால் போகிறோம் என்ற நொண்டிச் சமாதானத்துடன் சட்ட சபைக்கும் செல்லுகின்றார்கள்.
இதில் ஏதாவது கடுகளவாவது நாணயமேனும் யோக்கியப் பொறுப் பேனும் இருக்கிறதா? சட்டசபையில் இவர்கள் போய் செய்ய வேண்டியவை பல வேலைகளிருக்குமானால், ஏன் அதில் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளியில் வரவேண்டும்? சர்க்காரைக் கெஞ்சியும் கூத்தாடியும் கேட்டும் ஒன்றும் செய்ய முடியாத காரியத்தை சர்க்காருடன் கோபித்துக்கொண்டு வீரப்பிரதாபம் பேசி வந்துவிட்டுத் திரும்பவும் போனால் சர்க்கார் இவர் களை எப்படி மதிப்பார்கள்? இவர்கள் கோருவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சட்டசபையை விட்டு வெளியில் வந்த பிறகு கல்கத்தா சட்ட சபைக்கு, அவசரச் சட்டத்தைத் தடுக்க வேண்டும் என்கிற முகாந்தரத்தின் பேரில், போய்ப் பார்த்தார்களே! அவசரச் சட்டத்தை தடுக்க முடிந்ததா என்று கவனித் தார்களா? கவனித்திருந்தால் மறுபடியும் சட்டசபைகளுக்குள் எந்தக் காரியம் செய்ய முடியும் என்பதை உணர்வார்களல்லவா? சட்டசபை யில் மெஜாரிட்டி பலம் பெற்ற வங்காள மாகாண சட்டசபையிலேயே ஒன்றும் செய்ய முடியவில்லையென்றால் மெஜாரிட்டி இல்லாததும் மதிக்கத்தகுந்த மைனாரிட்டி கூட இல்லாததுமான சென்னை சட்டசபையில் என்ன காரியம் செய்ய முடியும்? இதை யெல்லாம் பொது ஜனங்கள் அறிய மாட்டார்களா? அறிந் தால் தங்களை எப்படி மதிப்பார்கள் என்றுகூட நினைக்க முடியாத அவ்வளவு மானங் கெட்டத் தன்மையும் முட்டாள் தனமும் உள்ள ‘வீரர்’களால் தேசத்திற்கு என்ன நன்மை விளையும்?
ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களுக்கும் சுயராஜ்யக் கட்சி மெம்பர்களுக் கும் ஜஸ்டிஸ் கட்சியை விட்டுப் புதிதாய் சுயராஜ்யக் கட்சியில் ‘ஞானஸ் நானம்’ பெற்ற மெம்பர்களுக்கும் என்ன வித்தியாசமென்று பார்ப்போமா னால் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களுக்கு சுயமரியாதை இருக்கிறது ; அதாவது இன்றைக்கு ஓட்டர்களை ஏமாற்றுவதற்காக பொய் வீரம் பேசி வெளியே போய் விட்டால் நாளைக்கு எந்த முகத்தைக் கொண்டு சட்டசபைக்குள் நுழைந்து அங்குள்ளவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்றும்; அங்கு ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்ட பிறகு எந்த முகத்தைக் கொண்டு மறுபடியும் ஓட்டர்களிடம் போய் ஓட்டுக் கேட்கிறது என்றும் நினைத்து தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஆதியில் ஓட்டர்களிடம் என்ன சொல்லி சட்ட சபைக்குப் போனார்களோ அந்த வார்த்தையிலேயே இன்னும் நிற்கிறார்கள்.
சுயராஜ்யக் கட்சியாரோ சுயமரியாதை, மானம், வெட்கம் ஆகிய எல்லாவற்றையும் உதிர்த்து விட்ட ‘‘மாசில்லா பரிசுத்த’’ வான்களாதலால் என்ன வேண்டுமானாலும் செய்யவும் எதை வேண்டுமானாலும் பேசவும் தயாராயிருக்கிறார்கள். இன்னும் இருக்கப் போகிறார்கள். இவைதான் ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரஸோடு இரண்டறக் கலந்த சுயராஜ்யக் கட்சிக்கும் உள்ளன வித்தியாசம் .
இந்தியாவின் விடுதலைக்கு – சுயமரியாதைக்கு – சுயராஜ்யத்திற்கு -கையெழுத்துகூடப் போடத் தெரியாத மக்களை 100- க்கு 90 பேராக உடைய பாரதத் தாயின் கற்பைக் காப்பதற்கு திரு.சீனிவாசய்யங்கார் ‘தலைவ’ ராகவும் திரு. எ. ரெங்கசாமி ஐயங்கார் ‘காரியதரிசி’யாகவும் அடையப் பெற்ற இந்தியாவே! உனது பாக்கியமே பாக்கியம்!! ஜப்பானுக்கு வந்த பூகம்பம் உன்னை ஏன் மறந்து விட்டதோ தெரியவில்லை !!!
குடி அரசு – கட்டுரை – 04.07.1926