ஸ்ரீமான் சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின் தர்ம விளம்பரம் – சித்திரபுத்திரன்

சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் வர வர அபேக்ஷகர்கள் அதிக மாய் விளம்பரமாகும்படி செய்து கொள்வது எங்கும் சகஜமானது. இதில் அபேக்ஷகர்கள் முன் செய்த வேலைகளையும் பின் செய்யப் போகிற வேலைகளையும் சொல்லுவதும் இயற்கை. ஆனால், நமது ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் அந்த இரண்டுமல்லாத புதிய ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். அதென்னவெனில்:-

ஒரு பெரிய தர்ம விளம்பரம். அதாவது, தான் 2 லக்ஷம் ரூபாய் தனது சொத்திலிருந்து தர்மம் செய்ய இருப்பதாகவும், அந்த தர்மங்கள் இன்ன இன்னாருக்கு உபயோகப்படத்தகுந்தது என்றும் சில ஓட்டர்களுக்கும் வோட்டுத் தரகர்களுக்கும் வாயில் தண்ணீர் ஊரும்படி வாய்பறை, பத்திரிகை பறையடிப்பதோடு நில்லாமல் திறப்பு விழாப் பறையும் அடித்தாகிவிட்டது.

ஆனால், நடந்த விஷயந்தான் என்ன? “தர்ம பிரபு” ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் திறப்புவிழா ஆரம்பத்தில் தனது தர்மத்தின் பெருமையைப்பற்றி பேசியவைகளின் சுருக்கம் இதில் குறிப்பிடுகிறோம். இதிலிருந்தே பல விஷயம் தெரிந்து கொள்ளலாம். இது 14.4.26 -ம் தேதி “சுதேசமித்திரன்” 6-வது பக்கம் 2-வது 3-வது கலங்களில் காணப்படு கிறதாவது:-

1. “எனது நண்பர்களும் பொது ஜனங்களும் என்னை முனிசிபல்
கவுன்சிலர் பதவிக்கும் தாலூகா போர்டு பதவிக்கும் தெரிந்
தெடுத்தனர். சேர்மெனாகவும் தெரிந்தெடுக்கப்பட்டேன். சென்னை
சட்டசபைக்கும் தெரிந்தெடுக்கப்பட்டேன். 1923 -ம் வருஷம்
இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டேன்.

( இது உண்மையல்ல – ப-ர். )

பொது ஜனங்கள் என்னிடம் நடந்து கொண்ட அன்பைப் பார்த்ததும்
என்னுடைய வருவாயில் ஒரு குறிப்பிட்ட பாகத்தை தர்மத்திற்காகச் சிலவிடத் தீர்மானித்தேன். என்னுடைய சொத்தில் ஒரு பகுதியை
தர்மத்திற்காக ஒதுக்கிவைக்க வேண்டுமென்றும் தீர்மானித்தேன்.

2. 1924 – ல் இதனை பகிரங்கப்படுத்த ஆதியில் உத்தேசித்தேன்.
அப்பொழுது எனக்குப் பெரும் பொருள் நஷ்டமானதால் நான்
இதை பகிரங்கப்படுத்துவதை ஒதுக்கி வைக்க நேர்ந்தது. 1925 – ல்
முன் வருஷத்தை விட அதிக நஷ்டம் ஏற்பட்டதால் இவ்வருஷத்
தில்தான் எனது எண்ணத்தை பஹிரங்கப்படுத்த முடிந்தது.
இவ்வருஷத்திலும் எனது செல்வ நிலை சீர்பெற்று விட்டதாகக் கூற
முடியாவிட்டாலும் நான் எனது எண்ணத்தை பஹிரங்கப்படுத்து
வதை ஒத்தி வைத்துக்கொண்டு போக விரும்பவில்லை. இன்று
எனது தர்மத்தின் அங்குரார்ப்பண விழா நடைபெறும் பொழுது
அதற்கு ஆசி கூற நீங்கள் எனது வேண்டுகோளுக்கிணங்கி
வந்திருக்கிறீர்கள்.

3. தர்மத்திற்காக ஒதுக்கி வைக்கத் தீர்மானித்திருக்கும் நிலத்தின்
மதிப்பு 2 லக்ஷம் ரூபாய் பெறுமென்று கருதுகிறேன். இந்
நிலங்களுடன் கொஞ்சம் ரொக்கமும் ஒரு வீடும் தர்மத்திற்காக
ஒதுக்கி வைக்கலாமென்று உத்தேசித்திருக்கிறேன். இதனைப்
பதிவு செய்ய 2000 ரூபாய்க்கு மேல் சிலவாகும். ஆனாலும்,
சீக்கிரம் சாஸனம் பதிவு செய்யப்படும்.

4. அந்த சாஸனப்படி இந்த சொத்தில் கிடைக்கும் வருஷ வரும்படி
10,000 ரூபாயைக் கொண்டு அடுத்த வருஷம் சிலவு செய்யப்
படவேண்டியிருக்கும்.

5. முதல் வருடமான இவ்வருடச் சிலவுக்காக 10,000 ரூபாய் ரொக்க
மாய்ச் சிலவு செய்திருக்கிறேன்.

6. (அ) தர்ம சொத்தின் மொத்த வரும்படியில் கால்பங்கு
கோவில்களுக்கும், மதக் காரியங்களுக்கும் சாதாரண
நிலைமையில் சிலவிடப்படும்.
(ஆ) மற்றொரு கால்பங்கு, கீழ்த்தர வகுப்பிலுள்ள ஏழை
களுக்காக சிலவிடப்படும்.
(இ) மற்றொரு கால்பங்கு, இந்த ஜில்லா கிராமங்களிலுள்ளவர்
களின் உதவிக்காக சிலவு செய்யப்படும்.
(ஈ) மற்றொரு கால்பங்கு, கல்விக்கும், கைத்தொழில்
கல்விக்கும் சிலவிடப்படும்.
(உ) இப்பணத்தை எவ்வெவ்வழிகளில் சிலவிடப்படும்
என்பதை டிரஸ்டிகளே நிர்ணயிப்பார்கள்.
(ஊ) டிரஸ்டிகள் பதவிக்கு பல வகுப்பினரும் தெரிந்தெடுப்
பார்கள். எனது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் டிரஸ்டிகள்
பதவி வகிப்பார்கள்.(டிரஸ்டிகளைப் பற்றி “சுதேச மித்திர
னில்” மேற்கண்டபடி கண்டிருக்கிறது. 15.4.26 – ன்
“சுயராஜ்யா” வில் “ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்
யங்கார், அவரது மனைவி, அவர் குமாரன் காயமான
மெம்பர்களாவார்கள்” என்று கண்டிருக்கிறது. (ப-ர்.) )

7. பின்வரும் வருவாயை எப்படி சிலவிடவேண்டுமென்று தற்பொழுது
சொல்ல எவராலும் முடியாது என்று நான் சொல்லுவதை நீங்கள்
ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், இது டிரஸ்டி
களால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம்.

8. தற்பொழுது பல தர்ம காரியங்களுக்கு பணம் உதவப்படுவதுடன் 6
இராப் பள்ளிக்கூடம்,ஒரு இலவச வாசகசாலை, ஒரு பெண் பள்ளிக் கூடம், ஒரு பெண் பாடசாலை முதலியவற்றை நடத்தவும் ஏழைக
ளுக்கு அடிக்கடி அன்னமளிக்கவும் ஏற்பாடு செய்ய உத்தேசித்
திருக்கிறேன்.

9. இத்துடன் தேசீய வேலை செய்யும் பல தமிழ் பத்திரிகைகளுக்கு
பொருளுதவி செய்ய நான் உத்தேசித்திருக்கிறேன்.

10. அல்லாமலும் கிராமத்தில் உருவான வேலை செய்ய உத்தேசித்
திருக்கிறேன். ஆனால், சிலவுக்கு மாத்திரம் பணம் வாங்கிக்
கொண்டு முணுமுணுக்காமல் வேலை செய்ய முன் வருபவர்களைப்
பொருத்தே இக்காரியம் நடைபெற வேண்டியிருக்கிறது. சுப்பிரியின்
ஊழியம் எனக்குக் கிடைத்திருப்பது பற்றி சந்தோஷிக்கின்றேன்.
ஆனால், இன்னும் அவர் போன்றவர்கள் இன்னும் சிலர்வேண்டும்.”

சீனிவாசய்யங்கார் ஒரு சிறிய உபந்நியாசம் செய்தார். (அவர் இந்த விளம்பர தர்மப் புரட்டின் இரகசியத்தை ஜாடையாய் வெளியில் காட்டினார். அதனால் அதை இங்கு வெளியிடவில்லை.) இல்லா விட்டால் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் உபந்நியாசம் கூடவெளியிட முடியாமல் விட்டுவிட முடியுமா?

1. இத்தர்மம் செய்ய எண்ணுவதற்கு ஏற்பட்ட அவசியம் என்ன
என்பதை விளக்குகையில், தன்னை சில பதவிகளுக்கு ஜனங்கள்
தெரிந்தெடுத்ததினால் 1918-ல் தன்னிடம் ஜனங்களுக்கு அன்பு
இருப்பதாய் அறிந்து இத்தர்மம் செய்ய தீர்மானித்தாராம். அதாவது,
வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் இவரை தெரிந்தெடுக்கா
விட்டால் இவரிடம் ஜனங்கள் அன்பு வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணம் என்னவாகும்? அதனால் இத்தர்மம்
செய்ய நினைத்திருப்பது என்னவாகும் என்பதை வாசகர்கள்தான்
யோசிக்கவேண்டும்.

2. இதை வெளிப்படுத்தவே மூன்று வருஷமாயிற்றாம். காரணம்
1924-ல் நஷ்டம், 1925-ல் அதைவிட நஷ்டம், 1926 ஆரம்பத்திலேயே
அதாவது, நஷ்டம் ஈடேறாமல் இருக்கும் போதே இனியும் ஒத்தி
வைக்காமல் அதை வெளிப்படுத்திவிடவேண்டிய காரணம்
ஏற்பட்டுவிட்டது. அதென்னவென்றால் வரப்போகும் சட்டசபைத்
தேர்தல்களுக்காகவல்லாமல் வேறு என்ன காரணம் இருக்கக்
கூடும். அப்படியானால் ஒரு தேர்தலுக்கு தர்மம் செய்ய நினைத்து
மற்றொரு தேர்தலுக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று.
இதனின்று தர்மத்தின் தத்துவமறியலாம். இத்தர்மத்திற்காக ஒதுக்கி
வைக்கத் தீர்மானித்த சொத்தின் மதிப்பு 2 லக்ஷம் பெறுமாம். இதோடு
இன்னமும் கொஞ்சம் ரொக்கமும் ஒரு வீடும் ஒதுக்க உத்தேசமாம்.
சீக்கிரம் சாஸனம் பதிவு செய்யப்படுமாம். இதிலிருந்து எல்லாம்
தீர்மானம், உத்தேசம், பதிவு செய்யப்படும் என்கிற எதிர் காலத்தி
லிருக்கிறதே தவிர நடந்திருப்பது ஒன்றுமில்லை. ஆனால் அங்கு
ரார்ப்பணத் திருவிழா (ஆரம்பக்கொண்டாட்டம்) மாத்திரம் நடந்தாய்
விட்டது. “தமிழ்நாட்டுக் கர்ணன்” “பெரிய தர்மம்” “இரண்டு
தர்மங்கள்”“இந்தியாவின் தர்மம்” என்கிற தலைப்புகளுடன்
பிராமணப் பத்திரிகைகளும் பிரசாரகர்களும் தர்மத்தில் பங்குபெற
நினைக்கும் பிரசாரர்களும், பிராமணரல்லாத பத்திரிகைகளும்,
எழுத்துப் பறையும், பிரசங்கப் பறையும் ஆரம்பித்தாய் விட்டது.

4. அந்த சாஸனப்படி, எந்த சாஸனப்படி? இனி செய்யப் போகும்
சாஸனப்படி; விடப்போகும் சொத்தில் கிடைக்கப்போகும் வருஷ
வரும்படி ரூ. 10,000. இதை சிலவு செய்யப்போகும் காலம் அடுத்த
வருஷம்.

5. இந்த வருஷத்திற்கோ 10,000 சிலவு செய்தாகிவிட்டது.

6. எப்படி சிலவு செய்யப்பட்டிருக்கிறதென்றால்: –

(அ) கால்பங்கு கோவில்களுக்கும், மதக் காரியங்களுக்கும். அதாவது
யாவரும் போய் தரிசிக்க முடியாத கோவில்களுக்கும், பிராமணன் உயர்ந்தவன், அவரொழிந்த மற்றவர் சூத்திரர் – தீண்டாதவர் என்கிற
வர்ணாசிரமத்திற்கும் சிலவிடப்படும்.
(ஆ) மற்றொரு கால்பங்கு கீழ்த்தர வகுப்பிலுள்ள ஏழைகளுக்கு.
அது யாரோ! வோட்டுப் போடுகிறவர்களோ, வோட்டு வாங்கிக்
கொடுப்பவர்களோ, இதற்குப் பணம் வாங்குகிறவர்கள்தானே
கீழ்த்தர வகுப்பாயிருக்கமுடியும். அதுவும் செலவிடப்படுமாம்.
எப்பொழுது? இவ்வருஷத்திற்கு முன்னமே சிலவு செய்தாய்
விட்டது!!
(இ) மற்றொரு பகுதி இந்த ஜில்லா கிராமங்களில் உள்ளவர்களுக்கு
உதவி செய்யப்படும். அது எதற்காக? கிராமத்திலுள்ளவர்கள்
போட்டி போட்டுக் கொண்டு அய்யங்காருக்கு வோட்டுபோட
ஓடிவருவதற்கு! அதுவும் இவ் வருஷத்திற்கு செலவு செய்தாய்
விட்டது!!
(ஈ) மற்றொரு கால் பங்கு கல்விக்கும் கைத் தொழிலுக்கும். என்ன கல்வி,
என்ன கைத்தொழில். கடவுளுக்குத் தான் தெரியும். நூல் நூற்பதும்
நெசவு நெய்வதுமான தொழில் நம்ம அய்யங்காருக்கு ஆபத்து.
ஏனென்றால், அவரே கான்பூர் காங்கிரஸில் பேசும்போது தனது
பணம் 3 லக்ஷம் நூற்கிற மில்லிலும், நெய்கிற மில்லிலும் போடப்
பட்டிருப்பதாய் சொல்லியிருக்கிறார். ராட்டினமும், கைத்தறியும்
ஏற்படுத்திவிட்டால் 3 லக்ஷம் ரூபாய் போட்ட யந்திரத்தை
கொளுவடிப்பதா? கத்தி செய்வதா? ஆதலால் அதுவும் முடியாது.
ஆனாலும் இவ்வருஷத்துக்கு சிலவு செய்தாய்விட்டது!
(உ) இப்பணங்களை எவ்வெவ் வழிகளில் சிலவு செய்வது என்பதைப்
பற்றி டிரஸ்டிகளே நிர்ணயிப்பார்களாம். இதனால் மேலே சொன்ன
தெல்லாம் அடிபட்டுப் போய்விட்டது.
(ஊ) அந்த டிரஸ்டிகள் பதவிக்கோ இனிமேல் பல வகுப்பினரும்
தெரிந்தெடுப்பார்களாம். எந்த வகுப்பினர்? ஒரு சமயம் வடகலை
அய்யங்கார் வகுப்பினரும், தென்கலை அய்யங்கார் வகுப்பினராக
வுமிருக்கலாம். அதுவும் யார் தெரிந்தெடுப்பவர்கள்? தெரிந்தெடுப்
பை இன்னும் கொஞ்சம் விஸ்தரிக்க வேண்டுமானால் அய்யங்கார்
புதல்வியும் மாப்பிள்ளையும் சேரலாம். இது போதாதா? இதுவும்
போதாவிட்டால் “சுதேசமித்திரன்” பத்திராதிபரான தனது சம்பந்
தியை சேர்த்துக் கொள்வது. அடேயப்பா! விளங்குகிற தர்மத்திற்கு
இதுபோதாதா? இதற்கு ஆதாரம் “சுயராஜ்யா”விலேயே இருக்கிறது.

7. மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திலேறியதைப் போல்
பின்வரும் வருவாயை அதாவது தன்னுடைய தர்ம சொத்திலிருந்து
வரும்படியை எப்படி சிலவிட வேண்டுமென்று தற்பொழுதே
சொல்ல எவராலும் முடியாது. (இது தான் “இத்தர்மத்திற்கு” ஒரு
காப்புத் திரவியம். அதாவது பின்னால் தன்னிஷ்டப்படியெல்லாம் சொல்லிக் கொள்வதற்கு ஒரு சௌகரியமான செக்ஷன் -பிரிவு)
ஏனெனில் இனிமேல் (தெரிந்தெடுக்கப் போகும்) டிரஸ்டிகளால்
நிர்ணயிக்கப்படவேண்டிய விஷயம். போச்சு, போச்சு, இந்த
பிரிவினால் எல்லாம் போச்சுது. மேலெழுதியதையெல்லாம்
அடித்துவிடவேண்டியதுதான்.

இந்த சமயத்தில் ஒரு சின்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது ஓர் மாஜிஸ்ட்ரேட் கச்சேரிக்கு ஒரு அடிதடி பிராது வந்தது. அதில் ஒரு சாக்ஷியை விசாரிக்கும் போது அந்த சாக்ஷி பேரில் மாஜிஸ்ட்ரேட்டுக்கு கொஞ்சம் கண்ணுண்டு. (ஏனென்றால் அவன் அடிக்கடி இந்த மாதிரி சாக்ஷிக்கு வருகிறவன்) அவன் சாக்ஷி சொல்ல பெட்டிமேலேறியவுடன் ஊர், பெயர், தகப்பன் பெயர், ஜாதி, வயது முதலியவைகள் கேட்கப்பட்டவுடன் பிரமாணம் வாங்கப்பட்டது. அதாவது “சர்வ வல்லமையுள்ள தெய்வத்திற்கு முன்பாக நான் சொல்லுவதெல்லாம் நிஜம்; நிஜம் தவிர வேறொன்றுமில்லை” என்று சொன்னான். இது சொன்னவுடன் மாஜிஸ்ட்ரேட் சாக்ஷியைப் பார்த்து ‘உண்மை சொல்ல வேண்டும்’. பத்திரம். அப்புறம் தெரியுமா? என்று மிரட்டினார். சாக்ஷி பார்த்தான்; எஜமானரே காதில் கேட்டதை சொல்லட்டுமா, கண்ணில் பார்த்ததை சொல்லட்டுமா என்று மிகுந்த பயபக்தியோடு கேட் பவன் போல் கேட்டான். மாஜிஸ்ட்ரேட் அதிகார தோரணையில் கண்ணில் பார்த்ததைத்தான் சொல்லவேண்டும்; காதில் கேட்டதைப்பற்றி நமக்கு கவலை யில்லை. ஊரில் என்ன என்னமோ பேசிக் கொள்வார்கள்; அதையெல்லாம் நம்பி ஒரு காரியம் செய்ய முடியாது என்று சொன்னார். சாக்ஷி உடனே மாஜிஸ்ட்ரேட் காலில் விழுந்து எஜமானரே நான் முன்னே சொன்னதெல்லாம் தயவு செய்து அழித்துவிடுங்கள். என் தகப்பனார் யார் என்பதும் நான் கண்ணில் பார்த்ததில்லை; எந்த ஜாதியில் பிறந்தவன் என்பதும் கண்ணில் பார்த்ததில்லை; இதெல்லாம் பிறத்தியாரால் கேள்விப்பட்டதுதான் என்று கெஞ்சினான். மாஜிஸ்ட்ரேட் அதைப்பற்றி கவலையில்லை மற்றதைப் பற்றி சொல் என்றார். சாக்ஷி வேண்டாம், வேண்டாம் சர்வ வல்லமையுள்ள தெய்வத்திற்கு முன்பாக என்று சத்தியம் செய்தாய் விட்டது; கண்ணில் பாராத சங்கதியையும் நமக்கு முழுதும் நிஜம் என்று தெரியாத சங்கதிகளையும் சொல்ல முடியாது என்று வாதாடினான். கதையில் இன்னும் சில விஷயம் வரும். அது இந்த வியாசத்திற்கு சம்மந்தப்பட்டதல்ல. அது போல் நமது அய்யங்காரின் தர்ம சாஸனமும் அதாவது தன்னை நம்புவதாயிருந்தால் தான் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும். நம்பா விட்டால் டிரஸ்டிகளைத் தான் கேட்க வேண்டும். தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போலிருக்கிறது.

8. டிரஸ்டிகளைத்தான் கேட்கவேண்டுமென்று முடிவாகச் சொல்லி விட்டால் தன்னிடம் யாரும் வராவிட்டால் என்ன செய்கிறது என்று அதற்காக மறுபடியும் தற்பொழுதும் பல தர்ம காரியங்களுக்கு பணம் உதவப்படும். அதாவது 6 இராப் பள்ளிக்கூடம், ஒரு பெண் பாடசாலை, ஒரு பெண் பள்ளிக்கூடம் (பாடசாலைக்கும் பள்ளிக்கூடத் திற்கும் என்ன வித்தியாசமோ; அது அய்யங்கார் அகராதியைத்தான் பார்க்கவேண்டும்) ஒரு இலவச வாசக சாலை ! அதற்கு வரும் பத்திரிகைகள் எல்லாம் அய்யங்கார் கோஷ்டியாரும், அய்யங்காரிடம் பணம் வாங்குபவர்களும் போடும் பத்திரிகைகள்தான் வரவேண்டும் என்கிற கருத்தோ என்னமோ. அப்புறம் ஏழைகளுக்கு அடிக்கடி அன்னமளிப்பது. வோட்டு சம்பாதிக்கும் கிராமப் பிரசாரகர்கள் கோய முத்தூர் வருவதால் அவர்களுக்கு சாப்பாடு போட வேண்டாமா? அதற்காக தனது வீட்டில் டிரஸ்ட்டிகள் உள்பட அன்னசத்திரம்.

9. இவ்வளவும் போதாமல் இன்னும் ஒரு பெரிய விளம்பரம், அதாவது தேசீய வேலை செய்யும் சில தமிழ் பத்திரிகைகளுக்கும் பொருளுதவி செய்ய உத்தேசங் கொண்டுள்ளேன் என்பது. இது எந்த முறையில், டிரஸ்டி முறையிலா? அப்படியானால் இவருக்கு அதிகார மேயில்லை. இந்த வருஷத்திற்கு செய்தும் ஆகிவிட்டது! ஒரு சமயம் சட்டசபை அபேக்ஷகர் முறையிலோ வென்றால் அது வேறே தர்மம். இதில் சொல்ல வேண்டியதில்லை. அந்த இரகசியம் நமக்கு சுலபத்தில் தெரியாது. இப்பொழுது அதைச் சொல்லவும் கூடாது. பத்திராதிபர் களின் விண்ணப்பங்கள் வந்தபின் மேல் பார்த்துக் கொள்ளலாம்.

10. இவ்வளவும் அல்லாமல் கிராமங்களில் சில உருவான வேலை களைச் செய்ய உத்தேசித்திருக்கிறார். அதற்கு பிரசாரகர்கள் யோக்கி யர்களாய் கிடைத்தால் மாத்திரம் பணம் கொடுக்கப்படுமாம். ஆனாலும் சுப்பிரி என்கிற ஒரு யோக்கியரின் ஊழியம் மாத்திரம் இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறதாம். கிராமத்தில் உருவான வேலை என்ன? அய்யங்கார் தர்மப் பிரபு, கலியுகக் கர்ணன், பஞ்ச நிவாரண வேலை செய்தவர், பருத்திச் செடி பிடுங்குவதை நிறுத்தின வர், ஓட்டு கொடுத்தால் அதற்குப் பதிலாக பெரியதர்மம் செய்வார், பாலங்கட்டிக் கொடுப்பார் என்று சொல்லக் கூடியவர்கள் வேண்டும். அதுவும் இரகசியம். விண்ணப்பங்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்ள லாம். இந்த கோலாகல திருநாளுக்கு வந்த ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங் கார் ஏமாந்து போனதையும் தான் வெட்கப்பட்டதையும் சுதேச மித்திரன் ரிப்போர்ட்டருக்கு எழுத முடியவில்லையோ, எழுதினதை பத்திரிகையில் போடவில்லையோ, விசாரித்து பாக்கி விஷயத்தையும் தெரிந்து, விட்டுப்போனதையும் சேர்த்து மறுபடி சாவகாசப்பட்டபோது எழுதுகிறேன்.

குடி அரசு – கட்டுரை – 25.04.1926

You may also like...

Leave a Reply