திண்ணைப் பிரசாரம்

ஸ்ரீமான் ஊ.ஏ. வெங்கிட்டரமணய்யங்காரின் தேர்தல் சூழ்ச்சிகளைப் பற்றியும் அது சம்பந்தமான அவரது தரும விளம்பரத்தைப்பற்றியும் பல விஷயங்கள் “குடி அரசில்” தோன்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். ஸ்ரீமான் அய்யங்காருக்கு பொது ஜனங்கள் திருப்தி அடையதக்கவண்ணம் இவைகளுக்கு பதில் சொல்ல கொஞ்சமும் சக்தியில்லாமல் போய்விட்ட தால் பிராமண தந்திரத்தை உபயோகித்து பொது ஜனங்களை ஏமாற்றப் பார்க்கிறார். அய்யங்கார் தென்னை மரத்தில் கள்ளு இறக்கப்படுகிறது என்று எழுதியதற்கு நாளதுவரை அய்யங்கார் திருவாக்கால் யாதொரு தகவலும் இல்லவே இல்லை. கூலிக்கு ஆள்களைப்பிடித்து, தென்னை மரத்தில் இப்போது கள்ளு முட்டிகள் இல்லை என்றும், இந்த ஒரு வருஷத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தோப்பில் கள்ளு கலயம் கட்டியதை ரூபிப்போருக்கு 100 ரூபாய் இனாம் கொடுக்கப்படும் என்றும் அய்யங்காரின் நடத்தைக்கு பொறுப்பில்லாத யாரையோ பிடித்து எழுதச்சொல்லுகிறாரே தவிற, ‘எனது தோப்புகளில் நான் கள்ளுக்கு மரம் விடவில்லை’ ‘அவற்றில் ஒன்றிலும் முட்டி கட்டினதில்லை’ என்று இதுவரை சொல்லவே இல்லை. அவரது தர்ம விளம்பரத்தைப் பற்றி நாம் எழுதியதற்கும் இதுபோலவே கூலி ஆள் களைப் பிடித்து தன்னை ‘தர்மப்பிரபு’ வென்றும், ‘கலியுக கர்ணன்’ என்றும், ‘தமிழ்நாட்டு தர்மமூர்த்தி’ என்றும்எழுதச் சொல்லுவதோடு தனது தர்மத்தின் இரகசியத்தைப் பற்றி வெளியிட்டது குற்றமென்றும் எழுதச் சொல்லுகிறாரே யொழிய, இன்ன-இன்ன சொத்து இவ்வளவு ரூபாய் பொறுமானது, இன்ன-இன்ன தர்மத்திற்காக ஒதுக்கி வைத்து, இன்ன – இன்னாரை பரிபாலகராக நியமித்து, இன்ன முறையில் நடக்கும்படி, இன்ன தேதியில் தர்மசாசனம் எழுதி வைத்திருக் கிறது என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல், வீணாக பத்திரிகை காரர்களுக்குப் பணம்கொடுத்து தனது படத்தைப் போடச்சொல்லுவதும், இதன் இரகசியத்தை வெளியிட்டவர்களை திட்டச் சொல்லுவதும் ‘அசோசியேடட் பிரசு’க்கு தந்தி கொடுப்பதுமான காரியத் தில், ஏமாற்றப் பார்ப்பதில் பயன் என்ன? இதோடுமாத்திரம் இல்லாமல் “குடி அரசு” பத்திரி கைக்கு எதிர்ப்பிரசாரமும் அதன் ஆசிரியர் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மீது பழி சுமத்தும் பிரசாரமும் செய்வ தில் என்ன பலன் அடையக் கூடும்? ஸ்ரீமான் நாயக்கர் மீது பழி சுமத்துவதினாலேயே ஸ்ரீமான் அய்யங் காரின் நடவடிக்கைகள் யோக்கியமானதாகிவிடுமா? இதைப்பற்றி பொது ஜனங்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அறியாமலேயே விஷயப் பிரசாரம் நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது இரண்டொ ருவருக்குப்பணம் கொடுத்து துண்டு பிரசுரங்கள் போடச் செய்தது. அத் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விஷயத்தில் முக்கியமானவைகளுக்கு சமாதானம் சொல்வோம்.

முனிசிபல் நிர்வாகம்
முதலாவதாக நாயக்கர் சேர்மேனாகயிருந்த காலத்தில் ஒரு குளத்துக் கட்டிட கல்லுகளை தனது சினேகிதர் பெயருக்கு கொடுத்து தான் உபயோகப் படுத்திக் கொண்டார் என்பது, – இது சுத்தப் பொய்யான விஷயம். அந்த குளத்தை மூடவும் அதற்காக அதிலுள்ள கல்லுகளை பிரித்துக்கொள்ள வுமான ஒப்பந்தத்தின் பேரில் ஒருவருக்கு முனிசிபல் கவுன்சில் தீர்மானப் படி கன்றாக்ட்டு கொடுக்கப்பட்டது. அந்த கன்றாக்ட்டு நிறைவேறுவதற்கு இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் முனிசிபாலிட்டி மீது கோர்ட்டில் வழக் கைத் தொடரவே அது நின்றுபோய் 5, 6-வருஷம் பொறுத்து இப்போது அந்த குளம் முனிசிபாலிட்டிக்கு சம்பந்தப்பட்டதல்ல, சர்க்காருக்கு சம்பந் தப்பட்டதல்லது என்று ஏற்பட்டு அந்த கல்லுகளை நாயக்கர் நிர்வாகத்திற்குட் பட்ட ஈரோடு தேவஸ்தானத்திற்காக ஜில்லா கலெக்டர் 25-ரூபாயுக்குக் கொடுத்து விட்டார். இப்போதுதான் அவைகள் எடுக்கப்பட்டு தேவஸ்தானத் தில் 2,000 ரூபாய் செலவு செய்து கட்டிடம் ஆகிறது. அந்த கல் பிரித்த குளத்தை முனிசிபாலிடி யார் சொந்த செலவில் மூடிவருகிறார்கள். இன்ன மும் அவ்விரண்டு வேலைகளும் நடந்து வருகின்றன. ஆனால் நாயக்கர் கவுன்சில் தீர்மானப்படி ஒருவருக்கு கன்றாக்ட்டுக்குக் கொடுத்தது சுமார் 350 ரூபாய் பொறுமான மண் கொண்டுவந்து கொட்டி குளத்தை மூடும்படியான பொறுப்புக்கு பதிலாகத் தான் கொடுத்ததே தவிற சும்மா கொடுத்ததல்ல. அது நின்றுபட்டுபோய் விட்டதால் முனிசிபாலிட்டிக்குதான் இப்போது நஷ்டம்.

இரண்டாவது, தனது தமயனார் மரக்கடையில் மரம் வாங்கும் கண்டி ஷன் பேரில் முனிசிபல் வேலைகளை ஒரு கன்றாக்டருக்கு கொடுத்ததாய் குறிப்பிட்டிருக்கிறது. இதுவும் உண்மையல்ல. இந்தப்பழி சம்பந்தப்பட்ட வேலையின் மரத்தின் மதிப்பு சுமார் ஐநூறு ரூபாய் இருக்கும். இதில் பல கடைகளில் கன்றாக்ட்டர் மரம் வாங்கினார். நாயக்கர் சிபார்சு பேரில் சிலர் மரம் கொடுத்ததுண்டு. அந்த மரக்கடைக்காரருக்கு பணங்கூட கொடுக்காமல் கன்றாக்ட்டுதார் கடன் கொடுக்கச் சக்தியற்றவராய்விட்டார். இதில் நாயக்கர் தமயனாருக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.

மூன்றாவது, முனிசிபாலிட்டியில் ஒரு கட்டடம் பிரித்த பழய சாமான் களை தன் மைத்துனர் பேருக்கு ஏலத்தில் எடுத்து தன் சொந்த உபயோகப் படுத்திக் கொண்டார் என்பது – இதுவும் உண்மையல்ல. இது ஒரு பக்கத்து கிராமத்து முதலியாருக்காக அவர் கூட்டாளியாயிருந்த நாயக்கரின் மைத்துனர் கவுன்சிலின் பகிரங்க ஏலத்தில் எடுத்துப்பிரித்து கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. கட்டிடத்தின் பேரில் இருந்த பழய சாமான்களை மதிப்புத் தெரியாமல் போட்டியில் 300ரூபாய்க்கு ஏலத்தில் கூறி ஏமாந்து விட்டார்கள். ஆதலால் இதில் நாயக்கருக்கு எவ்வித சம்பாத்தியமும் இல்லை.

நான்காவது, நாயக்கர் சேர்மனாயிருக்கும்போது குரங்குடாப்புக்கும் (முன்தாள்வாரம்) சுண்ணாம்பு சூளைக்கும் குப்பை கொட்டி வைப்பதற்கும் மிட்டாய் கடைக்கும் , ஆப்பக்காரி, புட்டுக்காரிகளுக்கும் வரி விதித்தார் என்பது, குரங்குடாப்பு, சுண்ணாம்புச்சூளை, குப்பை சேகரிப்பு, மிட்டாய்க் கடை முதலியவைகள் முனிசிபல் சட்டப்படி வரி கொடுக்கக் கடைமைப் பட்டதேயல்லாமல் நாயக்கர் இஷ்டத்தைப் பொறுத்ததல்ல. ஆப்பக் காரிக் கும், புட்டுக்காரிக்கும் வரி போடப்பட்டது என்பது உண்மையல்ல.

ஐந்தாவது, ஸ்பெஷல் ஆபிசை வைத்து முனிசிபாலிடியில் வரி போட்டது என்பது வாஸ்தவந்தான். அதனால் யாருக்கும் நஷ்டமில்லை. கவுன்சிலர்கள் ஓட்டர்களிடம் உள்ள விருப்பு வெறுப்புக்களால் சில சமயங் களில் தவறி நடந்ததாக ஜனங்கள் கருதுவதுண்டு. இது எங்கும் சகஜம்தான். ஆதலால் அதற்கு ஒரு தனி நபரை கவுன்சில் சாங்ஷன் பேரில் ஏற்படுத்திய துண்டு. ஆனால் அதற்கடுத்த தடைவையில் கவுன்சிலர்களே வரி போட்டதில் முன்பு போட்டதைவிட உயர்த்தினார்களே ஒழிய ஒன்றையும் குறைத்து விடவில்லை.

ஆறாவது, நாயக்கர் பேரில் சில குற்றம் ஏற்பட்டதால் கலெக்டர் விசாரணைக்கு வரும் சமயம் பார்த்து ராஜீனாமா கொடுத்தார் என்பது,- இது வேண்டுமென்றெ சொல்லும் பொய். நாயக்கருடைய ராஜீனாமாவில் காரணம் சொல்லியிருக்கிறது. அதாவது முனிசிபல் நிர்வாகத்தில் சேர்மெ னின் தீர்ப்பை கலெக்டர் மாற்றியதற்காகவே ராஜீநாமா செய்யப்பட்டது. அந்த ராஜீநாமாவில் சுயமரியாதை உள்ள எவனும் இனி முனிசிபல் சேர்மனா யிருக்க முடியாதென்றே எழுதப்பட்டது. நாயக்கர் தன் ராஜீநாமாவை பின்வாங்கி கொள்ளும்படி கலெக்டரும், நிர்வாகசபை மெம்பரும் எவ்வள வோ நல்ல வார்த்தை சொன்னார்கள். அதுசமயம் நாயக்கருக்கு சர்க்காரால் பட்டம் தர சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அப்படி இருந்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. நாயக்கரின் ராஜீனாமா காரண மாகவே முனிசிபாலிடிகளில் கலெக்டர்களுக்கு உள்ள அதிகாரங்களை பிடிங்கிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு பிடுங்குவதற்காக டாக்டர் நாயரும் ஸ்ரீமான் எம்.சம்பந்தமுதலியாரும் பி.வி.நரசிம்மஅய்யரும் அதிகமாய் வாதாடியிருக்கிறார்கள். அக்காலத்திய “இந்து” “சுதேசமித்திரன்” “தேச பத்தன்” முதலிய பத்திரிகைகள்கூட தலையங்கம் எழுதியிருக்கின்றன.

ஏழாவது, நாயக்கர் ஒத்துழையா இயக்கத்தில் தலைவராயிருந்தபோது தனது இனத்தாருக்குப் பல நன்மைகள் செய்ததினிமித்தம் ஒத்துழையா தாரிடம் செல்வாக்கில்லாமல் போய்விட்ட காரணத்தால் இப்போது ஜஸ்டிஸ் கட்சியில் சேரப்பார்க்கிறார் என்பது, நாயக்கர் ஒத்துழையாமையில் தலைவரா யிருந்தபோது தனது இனத்தாருக்கு நன்மை செய்ததானது எல்லாரையும் ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனதைத் தவிற வேறு உதவி ஒன்றும் செய்யவில்லை. ஈரோட்டிலிருந்து ஜெயிலுக்குப்போன 40 தொண்டர்களில் 13 பேர் நாயக்கர் இனத்தவர்கள். அல்லாமலும் இது விஷயமும், ஜஸ்டிஸ் கட்சியில் நாயக்கர் சேர்ந்து வாரிக்கொள்ளும் விஷயமும், நோட்டீஸ் வினி யோகம் செய்யும் ஸ்ரீமான் அய்யங்காரைவிட பொதுஜனங்களுக்கு அதிக மாய்த் தெரியும். ஆதலால் இதைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

ஜஸ்டிஸ் கக்ஷிப் பணமா?
மற்றபடி திண்ணைப் பிரசாரமாக, நாயக்கர் பனகால் ராஜாவிடம் பணம் வாங்கி கொண்டார் என்பதும், பனகால் ராஜா மோட்டார்வண்டி கொடுத்தார் என்பதும், ஜஸ்டிஸ்கட்சி மோட்டார் சவாரி என்பதும், ஜஸ்டிஸ் கட்சி அச்சுக் கூடம் என்பதும் அவர்கள் காகிதம் வாங்கித் தருகிறார்கள் என்பதுமான சில விஷயங்கள் – பனகால் ராஜா பணம் கொடுக்கவும் நாயக் கர் வாங்கவுமான யோக்கியதையில் நாயக்கரை கடவுள் வைக்கவில்லை. பனகால் ராஜா மோட்டாரில் நாயக்கர் போகிறார் என்பதும், அய்யங்கா ரோடு இன்னும் சில பிராமணர்கள் சேர்ந்து கட்டிவிட்ட கட்டு. இது உண்மையா என்று கும்பகோணம், குடியாத்தம், மதுரை முதலிய இடங்களில் இருந்து இது விஷயமாய் நமக்கு கடிதங்களும் வந்தன. இது தங்கள் பணம் கொடுத்து பிரசாரம் செய்வதையும் தங்கள் மோட்டாரில் பிரசாரர்களை கூட்டிக்கொண்டு போய் கிராமப் பிரசாரம் செய்வதையும் நாயக்கர் பலமாய்க் கண்டிப்பதால் அதற்குப் பதிலாக கட்டி விட்ட பொய் கட்டு.

இந்தக் கட்டை பிராமணர்களிடம் பணம் வாங்கிப்பிழைக்கிறவர் களும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். ஏனென்றால் ‘நாயக்கரே பணம் வாங்கிக்கொண்டு பிரசாரம் செய்யும்போது நான் வாங்கினால் என்ன, என்று சொல்லிக்கொள்வதற்கு அனுகூலமாயிருப்பதற்காகவே அல்லாமல் வேறில்லை. அதைப்பற்றி நாயக்கருக்குக் கவலையில்லை.

ஜஸ்டிஸ் கட்சியார் அச்சுக்கூடம் என்பதும் அவர்கள் காகிதம் வாங்கித்தருகிறார்கள் என்பதும் மிகவும் அக்கிரமமான பொய்க்கட்டு. இதற்கு பதில் சொல்லவேண்டியதேயில்லை. இது அய்யங்கார் பணம் கொடுத்து பத்திரிகை நடத்துவதிலிருந்தும் அய்யங்காரிடம் பணம் வாங்கிக்கொண்டு நடத்துவதிலிருந்தும் பிறருடைய பழிக்குத் தப்பித்துக் கொள்வதற்கென்றே கற்பனை செய்து கொண்டதல்லாமல் வேறில்லை.

தவிற மே மாதம் 6-ந்தேதி தமிழ் “சுயராஜ்யா”வில் ஒரு கந்தசாமி நாயக்கர் என்பவர் பெயரால் எழுதப்பட்ட விஷயங்களைப்படித்தால் எழுதின விஷயம் முழுதும் பத்திரிக்கையில் போடப்பட்டதாய் நினைக்க முடிய வில்லை. நாயக்கருக்கு அனுகூலமானதான சிலதையோ, அல்லது அதிக குற்றமானதான சிலதையோ, மத்தியில். மத்தியில் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது. அதில் வெளியானவைகளில் முக்கியமான சிலவற்றிற்கு மாத் திரம் சமாதானம் சொல்லவேண்டியது அவசியம் என்று நினைக்கிறோம்.

சத்திர நிர்வாகம்
அதாவது, நாயக்கர் தகப்பனார் மாதம் 1-க்கு 1000ரூ. வரும்படியான சொத்துக்கள் தர்மத்திற்கு விட்டிருப்பதாகவும், இந்த தர்மம் நாயக்கர் பார்வைக்கு வந்ததில் தகப்பனார் இஷ்டப்படி சாதுக்களுக்கு சதாவிர்த்தியும், சுவாமி அபிஷேகமும் நடந்து வருகிறதா என்று கேட்கிறார். சாப்பாடும் பூஜையும் நடந்து வருவதோடு வேறு பல தர்மங்களும் நடந்துதான் வருகின்றன.

இவ்வளவு தர்மம் செய்யக்கூடியவர் சேர்மெனாயிருந்த காலத்தில் ஆப்பக்காரிக்கு வரி போடலாமா என்பது ஆப்பக்காரி எவருக்கும் வரி போடவில்லை. மற்றும் சட்டத்திற்கு விரோதமாயாவதும் நியாயத்திற்கு விரோதமாயாவது எவருக்கும் வரி போடவில்லை. வைக்கத்தில் தீண்டாதார் பொது தெருவில் நடக்க சம்சார சகிதமாக போய் சத்தியாகிரகம் செய்தவர் தனது தகப்பனாரால் கட்டப்பட்ட பொது சத்திரத்திலும், பொது விநாயக ரிடத்திலும், பொது கிணற்றிலும் தீண்டாதார் போகக்கூடாது என்ற சத்தியாக் கிரகம் செய்துவருவது உண்மையா என்பது. இது உண்மையல்ல. சத்திரம் பொது சத்திரமல்லவானாலும் இந்துக்களுக்கென்றே கட்டப்பட்டதானாலும் ஜாதி,மதம், தீண்டாத வகுப்பு என்கிற காரணத்தால் யாருக்கும் அதில் பிரவே சிக்க ஆnக்ஷபணை கிடையாது. சுகாதார விதியை அனுசரித்து மாத்திரம் ஆnக்ஷபனை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் விதியாய் மாத்திரம் இருக்கிறதே தவிற அமுலில் இல்லை.

மேற்படி சத்திரத்தில் உள்ள இரண்டு பாகங்களில் ஒன்று “பிரமாண ருக்கு” மற்றொன்று “சூத்திரருக்கு” என்று எழுதியிருப்பதற்கு இவர் என்ன பதில் சொல்லுகிறார் என்பது – இதுவெகுகாலத்திற்கு முன் நாயக்கர் தகப்பனாரால் ஒரு பலகையில் எழுதிவிக்கப்பட்டதாகும். இப்பொழுது மறைந்துபோயிருப்பது வாஸ்தவம், ஆனால் கவனமாய் படித்தால் தெரியும் படியாகத் தான் இருக்கிறது. இதை இதுவரை நாயக்கர் அவ்வளவு முக்கிய மானதாய்க் கவனிக்கவில்லை. இதைப்பற்றி பத்திரிகையில் பார்த்ததும், இதற்கு சமாதானம் எழுதிவிட்டு, இப்படி எழுதியிருப்பது சுத்தமாய் மறைந்து போகும்படி அழித்துவிட தீர்மானித்து விட்டார்; அழித்துமாகி விட்டது. ஆனாலும் இந்தப்பிரிவுகள் இந்தப்படி அமுலில்லை. யார் வேண்டுமானா லும் எந்த பாகத்திலும் இறங்கலாம். இது வெகுகாலமாய் நடந்து வருகிறது. ஆனால் ஒரு கட்டுப்பாடுண்டு. அதென்னவென்றால் ஒரு பாகம் சைவ உணவுக்காரருக்கும் மற்றபாகம் மாமிச உணவுக்காரருக்கும் என்று அங் குள்ள சத்திர மேற்பார்வைகாரனால் பிரயாணிகளுக்குச் சொல்லப்படும். இது தான் கட்டுப் பாடாகும்.

நாயக்கர் தனது தகப்பனாருக்கு திவசம் செய்கிறார் என்பதும் பார்ப்ப னரை அதற்காக அழைக்கிறார் என்பதும் – இது உண்மையல்ல. திவசம் மாத்திரமல்ல, வைதீக சடங்கு ஒன்றையும் நாயக்கர் செய்து கொள்வதே கிடையாது. நாயக்கர் தகப்பனாருக்கு நாயக்கர் தமயனார் திவசம் செய்வதா யிருந்தாலும் அவர் ஸ்ரீரங்கத்திற்கு போய்ச் செய்வார், அல்லது வேறு வீட்டில் செய்வார். திவச தினத்திலெல்லாம் நாயக்கர் தனது வீட்டில் மாமிசம் பக்குவம் செய்து தகப்பனார் இறந்த தினத்தைத் தனது சினேகிதர்களுடன் கொண்டா டுவார். ஏனென்றால் நாயக்கர் தகப்பனார் மாமிசத்தில் அதிகப் பிரியமுள்ளவர் என்பதுதான்.

கண்டிப்பது குற்றமா?
மகாத்மா முதல் எல்லா தேசபக்தர்களையும் பத்திரிகையில் திட்டு கிறார் என்பது- நாயக்கர் திட்ட வேண்டுமென்று யாரையும் திட்டுவதில்லை. குற்றமென்று தனக்குபட்டால் அதை தாக்ஷண்யமில்லாமல் கண்டிக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொள்ளுகிறார். அதில் ஒன்றும் பெரிய பாவமிருப் பதாய் அவர் கருதவில்லை. அம்மாதிரி தைரியமாய் மனதில்பட்டதை வெளியில் சொல்லாமல் மூடிவைக்க வேண்டுமென்றால் பத்திரிகையே நடத்த வேண்டியதில்லை. “குடி அரசு” வயிற்று பிழைப்பிற்கு நடத்தப்படும் பத்திரிகையல்ல. எந்த தனிக்குடும்பத்தின் ஜீவனத்திற்கும் “குடி அரசு” நடத்தப்படுவதில்லை. உண்மையை தனது மனதுக்குப் பட்டதை வெளியில் எழுதக்கூடாது என்கிற நிர்ப்பந்தம் வரும்போது “குடி அரசு” தானாகவே மறைந்துவிடும்; நாயக்கரும் ஜெயிலில் இருப்பார்.

காங்கிரசில் சேர்ந்தவர்கள் ஜெயிலுக்குப் போனவர்கள், சோம்பேறி கள், திருடர்கள், வக்கீல்கள் வரும்படியில்லாததால் ஜெயிலுக்குப் போனார் கள் என்று நாயக்கர் எல்லாரையும் தூஷிக்கிறார் என்பது. எல்லாரையும் அப்படித் தூஷிப்பதில்லை. அப்படியானால் நாயக்கரும் அதில் சேர்ந்தவர் தான் என்று ஆகுமல்லவா? ஒத்துழையாமை சமயத்தில் உள்ள வேகமானது, உண்மையானவர்கள் பலரையும் அப்படிப்பட்டவர்கள் பலரையும் சேர்த்துத் தான் ஜெயிலுக்குள் தள்ளிற்று. வெளியில் வந்தபிறகு அவரவர்கள் யோக்கி யதை ஒருவரும் சொல்லாமலேதான் வெளிப்பட்டு வருகிறது. ஜெயிலுக்குப் போன பல தலைவர்கள் சங்கதியும், பல தொண்டர்கள் சங்கதியும், பல தேச பக்தர்கள் சங்கதியும் உலகம் அறிந்ததுதான். இதில் ஒன்றும் இரகசியமில்லை.

அஹிம்சைக்கு விரோதமா.
அஹிம்சா தர்மத்தைப் பற்றி பிரசங்கம் செய்பவர் மாமிசம் சாப்பிட லாமா என்பது- ஆம், உள்ளூரில் தினமும், வெளியூர்களில் கிடைக்கிற இடத்திலும் நாயக்கர் மாமிசம் சாப்பிடுவதுண்டு. அஹிம்சா தர்மம் என்பது மாமிசம் சாப்பிடுவதால் கெட்டுப்போகாது. கத்திரிக்காய் சாப்பிடுவதற்கும் பால், தயிர் சாப்பிடுவதற்கும் கோழிமுட்டை சாப்பிடுவதற்கும், ஆடு, மாடு சாப்பிடுவதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை என்பது நாயக்கரின் கொள்கை. அஹிம்சா தர்மம் என்பது ஜீவன்களை ஹிம்சைப் படுத்தக் கூடாது என்பதேயாகும். இதில் ஜீவன்கள் என்று சொல்லி விட்டால் எறும்பை மிதிக்காமல் இருக்க முடியாது, பாம்பை அடிக்காமல் இருக்க முடியாது, குதி ரையை ஓடும்படி அடிக்காமல் முடியாது, மாட்டை பாரம் வைத்து இழுக்கச் செய்யாமலும் ஏர் உழுகச் செய்யாமலும் முடியாது. எந்த ஜீவனையும் கழுத் தில் கயிறு கட்டி தொழுவத்தில் கட்டுவதே ஹிம்சையாய்த்தான் முடியும். திருடனுக்கு நமது வீட்டுக் கதவை தாளிட்டு விட்டால் கஷ்டமாகத்தான் இருக்கும். அயோக்கியர்களுக்கு அவர்கள் குற்றத்தை எடுத்துச் சொன்னால் அவர்கள் மனம் வேதனைப்படத்தான் செய்யும். ஏமாற்றுகிறவனுக்கு ஜனங்கள் ஏமாறாவிட்டால் அது அவனுக்கு ஹிம்சையாகத்தான் இருக்கும். குற்றவாளிகளைத் தண்டித்தால் அது அவர்களுக்கு கொடுமையாகத்தான் இருக்கும். எதை ஹிம்சை என்பது? எதை ஹிம்சை அல்லாதது என்பது ஆதலால் நம்மைப்போல் பகுத்தறிவுள்ள மக்களை நியாயமற்ற முறையில் ஹிம்சிப்பதும் கொடுமைப்படுத்துவதும் நமது நியாயமற்ற முறையால் நம்மைப்போன்ற ஜீவன்கள் மனம் கஷ்டப்படுவதும், நமது பேராசையின் பொருட்டு மற்றவர்களை மனம் பதைக்கச் செய்வதும், நமது வாழ்வின் பொருட்டு மற்ற ஜீவன்களை தாழ்மையாய்க் கருதி அதன் உரிமையை அடையவொட்டாமல் தடுப்பதும் ஹிம்சையின் வகைகளாகும். மாமிசம் சாப்பிடுவது ஹிம்சை என்று சொல்லி விட்டால் உலகத்தில் 100க்கு 99பேர் மாமிசம் சாப்பிடுபவர்களாய்த்தான் இருக்கிறார்கள். மக்களல்லாத ஜீவன் களில் 100க்கு 99 ஜீவன்களும் மாமிசம் சாப்பிடுவதாய்தான் இருக்கின்றன.

இயற்கையின் தத்துவமே ஒரு ஜீவன் அடையும் ஹிம்சையால்தான் மற்றொரு ஜீவன் வாழ்கின்றது. ஆதலால் மக்களைப் பொறுத்தவரை அஹிம் சைக்கு லக்ஷனம் கற்பிப்பதில் அது பிற மக்களுக்கு முறையற்ற ஹிம்சையாய் இருக்கக்கூடாது என்கிற வரையில்தான் அஹிம்சையை அநுஷ்டிக்க முடியும். அப்படியல்லவென்றால் மாமிசம் சாப்பிடாதவர்களை எல்லாம் அதனாலேயே அஹிம்சா தர்ம முடையவர்கள் என்று சொல்ல முடியுமா?

ஜஸ்டிஸ் கட்சி வண்டி
நாயக்கர் ஒரு மோட்டார் வாங்கி இருக்கிறார். அது கோயமுத்தூர் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரிடம் வாங்கியது. அது ஒரு பழய வண்டி, ஸ்ரீமான் முதலியாருக்கு 25ரூபாய்க்கு ஒரு லாட்டரி சீட்டில் வந்தது. சென்ற தேர்தலுக்கு அவர் உபயோகப்படுத்திக்கொண்டு அதை 500 ரூபாய்க்கு விற்கும்படி ஒரு கம்பெனிக்காரரிடம் விட்டிருந்தார். நாயக்கர் குறைந்த விலையில் ஒரு இரண்டாவது கைமாறிய மோட்டார் வாங்க பிரயத் தனப் பட்டத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் வண்டியைக்கூட பார்க்கப்பட்டு கடைசியில் ஸ்ரீமான் முதலியார் வண்டி பார்க்கப்பட்டது. இது ஐயங் காருக்கே தெரியும். அவரும் தனது வண்டியை கூட்டிக்கொண்டுபோய் காண்பித்தார். ஸ்ரீமான் முதலியார் வண்டியோ ரிப்பேர் தேவையானதினால் குறைந்த விலைக்கு அதாவது 300ரூபாய்க்குக் கிடைக்ககூடியதாகச் சொல்லப்பட்டது. அதை வாங்கி சுமார் 200ரூபாய் வரை இப்போது ரிப்பேர் செலவு செய்யப் பட்டிருக்கிறது. அதுவுமல்லாமல் தற்கால சௌகரியத்திற்கு இரண்டு டையர் டியூப் 240ரூபாய்க்கு சென்னைக்கு எழுதியிருக்கிறது. வண்டி ஈரோட்டிற்கு கொண்டுவந்து சுமார் 4 மாதமாகிறது. இன்னமும் ரிப்பேரில் தானிருக்கிறது. ஒரு நாளாவது அதில் ஏறி ஒரு பிரசாரத்திற்கும் போகவில்லை. ஸ்ரீமான் ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியாரிடம் வாங்கியதால் ஒரு சமயம் இந்த முகாந்திரங்களைக்கொண்டு ஸ்ரீமான் அய்யங்கார் திண்ணைப் பிரசாரத்தில் ‘பனகால் ராஜா வண்டி’ ‘ஜஸ்டிஸ் கட்சி வண்டி’ என்று சொல்கிறாரோ என்னமோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. சமாதானம் எழுத வேண்டியவைகள் இன்னம் சிலது இருக்கிறது. இவ்வாரம் வியாழன், சனி இரண்டு நாள் மாத்திரம்தான் ஸ்ரீமான் நாயக்கர் ஈரோட்டி லிருக்க முடிந்தது. ஆதலால் அதிகமாய் எழுத முடியவில்லை. மற்றொரு சமயம் விவரமாய் எழுதப்படும்.

முடிவு
இவ்வளவும் “தமிழ்நாட்டுக்கர்ணனான” ஸ்ரீமான் வெங்கிட்டரமணய் யங்கார் தர்மத்தின் திருவிளையாடல்களே. ஆனபோதிலும் நமக்கு கவலையில்லை. இந்த விஷயங்கள் திண்ணைப் பிரசாரங்களாய் இல்லாமல் துண்டு பிரசுரம் மூலமாகவும், பத்திரிகை பிரசார மூலமாகவும் நடத்தப் பட்டது. ஒரு வகையில் நமக்கு அதிக சந்தோஷமே. இதன் மூலமாகவாவது நாயக்கர் பேரில் உள்ள குற்றமென்ன? நாயக்கர் செய்த தப்பிதமென்ன? இவ்வளவு எதிரிகளும் சேர்ந்து நாயக்கர் பேரில் வலை போட்டு அரித்தும் கண்டுபிடிக்கப்பட்ட குற்றம்தான் என்ன என்பது பொது ஜனங்களுக்கு அறிய ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு நாம் மனப்பூர்வமான நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இம்மாதிரியான பழிகள் எவ்வளவு வந்தாலும் அதனால் எவ்வளவு கெட்டபெயர் வந்தாலும் இவைகளுக்குப் பயந்துகொண்டோ எந்தவிதமான நிர்பந்தங்களுக்கு பயந்து கொண்டோ நாயக்கர் தனது முயற்சியை விட்டு விடுவாரோ என்று வாசகர்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீமான் நாயக்கர் ஒத்துழையாமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராயிருக்கும்போது ஏற்பட்ட பழிகள் அநேகம். அவற்றை சாவகாச மாய் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 30.05.1926

You may also like...

Leave a Reply