இந்து மகாசபையின் பலனும் கிலாபத்தும்
டில்லியில் கூடிய கிலாபத் மகாநாட்டில் மௌலானா மலிக் ஒரு தீர்மானத்தின் பேரில் பேசுகையில் “எங்காவது இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டால் தற்காப்பிற்கான வழியை மாத்திரம் இத்தீர்மானம் கூறுவதாயிருக் கிறது. ஆனால் இந்து சகோதரருடன் ஒற்றுமை ஏற்படுத்த முடியும் என்று இன்னமும் தாம் நம்புவதால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சபையோர்கள் கூச்சலிட்டு ‘இந்துக்களை சகோதரர் என்று சொன்னது தப்பு’ என்றும் அதை வாப்பீசு வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோபாவேசத் துடன் கூறினார்களாம். கடைசியாக மௌலானா ஷவுகத்தலி பலதடவை கெஞ்சிக்கேட்டுக் கொண்டதன் பேரில் கூச்சல் அடங்கிற்றாம். இதைப்பற்றி கூச்சல் போட்டவர்கள் பேரில் நமக்கு ஒன்றும் அதிருப்தியும் ஆச்சரியமும் இல்லை; ஆனால் இதிலிருந்து மகமதிய சகோதரர்களின் மனோபாவம் எது வரை பாய்ந்திருக்கிறது என்று இப்போதாவது இந்துக்கள் தெரிந்து கொள் ளலாம். இவ்வித மனோபாவம் ஏற்படக் காரணமென்ன?
நம் தேசத்து வைதீகப் பிராமணர்களின் இந்து மகாசபை செய்த பழிக்கு இந்து சமூகத்தார் அனைவருமே மகமதியரின் இவ்விதத் துவேஷத்திற்கு ஆளாகிறார்கள்.
இதுபோலவே சுயமரியாதை உள்ள ஒரு இந்து பிராமணரல்லாதவன் மனுதர்ம சாஸ்திரத்தைப் படித்துப் பார்த்தால் பிராமணர்களை சகோதரர்கள் என்று சொல்ல மனம் வருமா? “சூத்திரன் என்பவன் பிராமணனின் வைப் பாட்டி மகன்; பிராமணனுக்கு வேலை செய்யவே பிறந்தவன்; அவன் சொத்து வைத்திருக்க உரிமையில்லை; உரிமை மீறி வைத்திருந்தாலும் பிராமணர்கள் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம்; பிராமணரல்லாத இந்துக்கள் எல்லாம் ‘சூத்திர’ர்கள்; சூத்திர ஸ்திரீகள் பிராமணர்களுக்கு உரியவர்கள்; பிராமண ஸ்திரீகளை ‘சூத்திரர்’கள் மனதில் நினைத்தாலே அவனது உயிர் நிலையை அறுத்துவிட வேண்டும்” என இம்மாதிரி இன்னும் பலவாறாக எழுதி வைத் திருப்பதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமாயிருக்கிறது. அதுபோலவே மகமதி யர்கள் விஷயத்திலும் “மகமதியர் என்றால் மிலேச்சர்கள், அவர்களைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டிவிட வேண்டும்” என இம்மாதிரி எழுதி வைத்துக்கொண்டு இருப்பதோடல்லாமல் அவர்களை எதிர்ப்பதற்கும் வருணாசிரமம் நிலைப்பதற்கும் என்றே இந்து மகாசபை என்ற ஒரு சபை யையும் வைத்துக்கொண்டு அதில் மகமதியர் மசூதிகளுக்கு முன் (மகமதி யர்கள் மனம் புண்படும்படி) இந்துக்கள் மேளம் அடித்துக்கொண்டு போக வேண்டும் என்றும், இதற்கு மகமதியர்கள் ஆnக்ஷபித்தால் கவர்ன்மெண் டார் பிரவேசித்து மகமதியர்களை அடக்கி தங்களுக்கு மேளம் அடிக்க வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கவர்மெண்டைக் கெஞ்சுவதாகவும் ஒரு தீர்மானம் செய்து கொண்டு, மகமதியர்களை வலிய வம்புக்கிழுத்தால் அவர் கள் எப்படி நம்மை சகோதரர்கள் என்று கூப்பிட சம்மதிப்பார்கள். மேளம் அடிப்பது என்பது இந்துக்களது கொண்டாட்டத்தின் அறிகுறி. மகமதியர்கள் ஆnக்ஷபிப்பது என்பது அவர்கள் மதக்கட்டளையாகிய குரான் என்னும் வேதத்தின் பேரால் என்கிறார்கள். பிராமணனாய்ப் பிறக்காதவன் எல்லாம் பிராமணனின் வைப்பாட்டி மகன் என்று சொல்லுகிற ஒரு சாஸ்திரத்தின் ஆதாரத்தின் கீழ் இந்துவாயிருக்கும் அவமானத்தை விட, மகமதியருடைய மதக்கட்டளைக்காக இந்துக்கள் தங்கள் கொண்டாட்டத்தையோ சந்தோஷத் தையோ கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்பது என்பது இந்து சமூகத்திற்கு பெரிய அவமானம் என்பதாக நாம் கருதவில்லை. மகமதியர்களாவது நமது நாட்டை பிராமணர்கள் காட்டிக் கொடுத்ததின் பலனாய் ஜெயித்து, இந்த பிராமணர் களையே மந்திரிகளாக வைத்து அரசாக்ஷி செய்த காலத்தில், இந்த பிராமணர் கள் உதவியைக் கொண்டே தங்களை உயர்ந்த ஜாதியராகவும் நம்மைத் தாழ்ந்த ஜாதியராகவும் கருத ஏற்பட்டு, அதன் பலனாய் அவர்கள் மதக்கட்ட ளையை நம் மீதும் நிறைவேற்ற சௌகரியம் செய்து கொண்டார்கள். இந்த பிராமணர்களோ நம்மிடம் பிச்சை வாங்கித்தின்று கொண்டே அவர்கள் உண்மையாய் நம்பாததும், வேண்டுமென்றே நம்மைத் தலைமுறை தலை முறையாய் தாழ்த்திவைத்து நோகாமல் – நகத்தில் அழுக்குப்படாமல் பிழைப் பதற்காக வேண்டி வஞ்சக எண்ணத்தோடு நிரந்தர சூழ்ச்சி செய்து நம்மை அவர்கள் கண்ணில் தென்படக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கிட்ட வரக் கூடாது, பேசக்கூடாது, தொடக்கூடாது, கோயிலுக்குள் போகக் கூடாது, “வேதத்தை” படிக்கக்கூடாது என்கிற கொடுமைகளை செய்து வைத்திருக் கிறார்கள் .
இதை மாற்ற நம்மால் முடியுமானால், கண்டிப்பாய் நமது மத சம்பந்த மான ஊர்வலத்தில் மேளம் அடிப்பதை ஒருக்காலும் மகமதியர்களால் நிறுத்த முடியவே முடியாது. அல்லாமலும் எப்படியாவது நாமும் அவர்களும் ராஜிக்கு வந்துவிடுவோம். அப்படிக்கில்லாமல் பிராமண இந்து மகாசபை, பிராமணரல்லாதார் தலையில் ஒரு காலும், மகமதியர் தலையில் ஒரு காலும் வைத்து இருவரையும் அழுத்தி நசுக்கப் பார்த்தால் இந்த பிராமணர்களை இருவரும் எப்படி உண்மையான சகோதரர்கள் என்று கூப்பிட மனம் வரும்? போலித்தனத்திற்கு ‘சகோதரர்கள்’ என்று 1000 தடவை வேண்டுமானாலும் ஏமாற்றுவதற்காக சொல்லலாம். ஆனால், அதனால் ஒரு பலனும் உண்டா காது. இந்த கொடுமைகளின் பலனாய் ஏற்பட்ட துவேஷங்கள் நீங்கி, உண்மையான சகோதரத்துவம் ஏற்படாமல், காங்கிரஸ்- சுயராஜ்யம்- உரிமை- விடுதலை என்று பேசுவதெல்லாம் பிராமணர்கள் உத்தியோகம் பெறத்தான் உதவுமேயல்லாமல் மக்கள் உண்மை சுயராஜ்யம் பெற உதவவே உதவாது.
குடி அரசு – கட்டுரை – 16.05.1926