1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டின் புரட்சி
1929 டிசம்பர் 17, 18 தேதிகளில் செங்கல் பட்டில் நடந்த “முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு” குறித்து ‘குடிஅரசு’ வெளியிட்ட தகவல்களின் தொகுப்பை இளைய தலைமுறையினர் பார்வைக்கு முன் வைக்கி றோம்.
• சுயமரியாதை மாநாடு – பார்ப்பன வெறுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதாகவும், அரசாங்க ஆதரவோடு நடத்தப்படுவதாகவும் – ‘போல்விஷம்’ எனும் மார்க்சிய சிந்தனையை பரப்புவதற்கான மாநாடு என்றும், ஆளுநருக்கு எதிரிகள் புகார் கடிதங்களை அனுப்பினார்கள். ஆனாலும், இது குறித்து கவலை இல்லை என்றும், உயிரையும் கொடுத்து பெறவேண்டியதே ‘சுயமரியாதை’ அது விலை மதிப்பற்றது என்றும் பெரியார் எழுதினார்.
• எதிரிகள் நினைப்பதுபோல் சுயமரியாதை இயக் கம் தளர்ந்துவிடாது என்று எழுதிய ‘குடிஅரசு’ (13.1.1929) – “இப்போது எந்தவிதமான மாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்று சுட்டிக் காட்டியது.
• சுயமரியாதை இயக்கத்துக்கு ருஷ்யா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கானி°தானம் போன்ற நாடுகள், வழிகாட்டி வருவதாகவும் ‘குடிஅரசு’ குறிப்பிட்டது. ‘சுயமரியாதை இயக்கம்’ உலகக் கண்ணோட்டத்தில் தொடங்கப் பட்டிருப்பதை இது உணர்த்துகிறது.
• ‘திராவிடர்’ என்ற சொல்லை முன்வைத்து இப்போது சில குழப்பவாதிகள், பெரியார் இயக்கத்தையே சிறுமைப்படுத்த நினைப்பது போல் ‘சுயமரியாதை’ என்ற பெயருக்கும் அப்போது குழப்பவாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, ‘குடிஅரசு’ இவ்வாறு பதில் எழுதியது. “சுயமரியாதை இயக்கம் என்றால் சுயமரியாதை இல்லாதவர்களின் இயக்கம் என்று பிறர் கருத மாட்டார்களா?” என்கிறார்கள். அப்படியானால் நாம் அவர்களை “சன்மார்க்க இயக்கம் என்றால் அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா சைவ சித்தாந்த இயக்கம் என்பது “அசைவர்களின் கூட்டமாகி விடுமா? அதுபோலவே ‘ஜ°டி°’ இயக்கம் என்பது ‘இன்ஜ°டி°’காரர்கள் இயக்கம் என்றாகி விடுமா?” – என்று கேட்கிறோம் என்று ‘குடிஅரசு’ பதிலளித்தது. (17.2.1929)
• 36 மைல் நீள ஊர்வலம் சென்னையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டை அடைந்தது. மாநாட் டுத் தலைவர்கள் மோட்டார் கார்களில் அணி வகுக்க வழி நெடுக – மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர் மலர் பொழிதல் – ஒலி முழக்கங்களுடன் காலை 8.30 மணிக்கு சென்னை தியாகராயர் மண்டபத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.
• வழி நெடுக மேளதாளங்களோடு வரவேற்று, வரவேற்புப் பத்திரங்களை வாசித்து சிற்றுண்டி களை வழங்கினார்கள். மாகாணத்தின் முதல்வர் டாக்டர் சுப்பராயன், அமைச்சர் சேதுரத்தின மய்யர், முத்தையா முதலியார், தாலுக்கா போர்டு தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பெரியார் ஈ.வெ.ராமசாமி, சவுந்தரபாண்டியன் என ஏராளமான தலைவர்கள் மோட்டார் காரில் ஊர்வலமாக வந்தனர்.
• மாநாட்டு பந்தலில் 20,000 பேர் திரண்டிருந்தனர். மாநாட்டு முகப்பு, மிகப் பெரும் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு அரங்கிற் குள் வீட்டுப் பொருள் காட்சிகள், தொழில் கண்காட்சிகள், சிற்றுண்டி சாலைகள், ஆங்கில முறை ஓட்டல்கள், விவசாய கண்காட்சிகள், எந்திர கண்காட்சிகள், வாசக சாலைகள், இடை இடையே தலைவர்கள் உருவச் சிலைகள், பூந் தோட்டங்கள், 2000 தோரண விளக்குகள், ‘சுயமரி யாதையே பிறப்புரிமை’ என்று பொறிக்கப்பட்ட காந்த விளக்குகள் என எழில் குலுங்கியது மாநாடு அரங்கு. 4, 5 இடங்களில் ‘லவுட் °பீக்கர்’ எனும் ஒலிக் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன.
• காலை நிகழ்ச்சிகளாக பனகல் அரசர் படத்தை அரசு சட்டசபை உறுப்பினர் எம்.கிருஷ்ண நாயர் திறந்து வைத்தார். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முதல் நாள் பிற்பகல் தலைவர் உரை, பிரதிநிதிகள் உரை, இரவு சாப்பாடு.
• இரண்டாம் நாள் வாலிபர் மாநாட்டுடன் தொடங்கியது. தலைவர் மாநாட்டுத் தலைவர் சுரேந்திரநாத் ஆரியா. தமிழ்நாடு முழுதும் கிராமம் கிராமமாகச் சுற்றி சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வது என்றும், பிரச்சாரத்துக்கு பனகல் அரசர் பெயர் சூட்டுவது என்றும் தலைவர் அனுமதியோடு பெரியார் இராமசாமி அறிவித்தார். உற்சாகத்தோடு வரவேற்ற இளைஞர்கள் – அதே நிகழ்வில் பிரச்சாரத்துக்கு தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.
• மாநாட்டுச் செலவுக்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. உண்டியலில் வசூலான தொகை ரூ.3000 (1929இல் இத்தொகையின் மதிப்பு மிகப் பெரிது; பவுன் விலை ரூ.7 விற்ற காலம்)
• இரண்டாம் நாள் மாநாட்டின் இறுதியில் நன்றி கூறிய பெரியார் இராமசாமி குறிப்பாக பெண்களுக்கு முதல் நன்றியை கூறினார். மகாநாடு நடத்த ஒத்துழைத்தவர்களாக ஜமீன்தார் அப்பாசாமி, வள்ளலார் வேதாசலம், ராவ் பகதூர் கிருஷ்ணசாமி, கண்ணப்பர் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்ட பெரியார் இராமசாமி, தனது விருப்பப்படி செயல்பட்டு, எல்லா வகையிலும் உதவிய வாழ்க்கைத் துணைவியர் நாகம்மையாருக்கும் நன்றி கூறினார்.
• இதன் பிறகு – இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடந்தது. மாநாட்டில் இருந்த பெண்களைவிட, பொதுக் கூட்டத்துக்கு வந்த பெண்களின் எண்ணிக்கை அதிகம். பொதுக் கூட்டத் தலைவர் தஞ்சை அய். குமாரசாமி, மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி, பொதுக் கூட்டத்துக்கு தலைமையேற்ற பெரியார் இராமசாமி, செ. முருகப்பா, அய்யாசாமி, தண்டபாணி, பொன்னம்பலனார், லிங்கம், அழகிரிசாமி பேசினார்கள். இரவு 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் விடியற்காலை 5 மணிக்கு வரை நடந்தது.
• மாநாட்டுக்கு வெளி மாகாணங்களிலிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தனர். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் கதர் உடைகளுடனும், காங்கிர° கட்சியின் மிதவாத, தீவிரவாதப் பிரிவினரும் அன்னிபெசன்ட் ஆதரவாளர்கள், ஜ°டி° கட்சியினர், பார்ப்பனர்கள், மகமதியர்கள், கிறி°தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சைவ சமாஜக்காரர்கள், வைணவ சமயக்காரர்கள், பிரம்மஞான சபையினர், வெள்ளைக்காரர், வெள்ளைக்கார பாதிரியார்கள், பண்டிதர்கள், புராண பிரச்சாரகர்கள், சன்யாசிகள், சாமியார்கள், கோயில் டிர°டிகள், குருமார்கள், அர்ச்சகர்கள், சர்க்கார் அதிகாரிகள், பதவியிலுள்ள மாஜி°திரேட்டுகள், நீதிபதிகள், கலெக்டர்கள், குடியானவர்கள், கூலி வேலை செய்வோர், திருமணமான பெண்கள், விதவைகள், தாசிகள் என்று அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றார்கள் என்று ‘குடிஅரசு’ பதிவு செய்கிறது. மாநாட்டுக்கு முன் ‘குடிஅரசு’ விடுத்த அழைப்பில் “தனிப்பட்ட °திரீகளும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அவசியம் வரவேண்டும்” என்று ‘குடிஅரசு’ அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
• தென்னிந்தியாவிலேயே இவ்வளவு பெரிய மாநாடு நடந்தது இல்லை என்கிறது, ‘குடிஅரசு’ பதிவு.
(செய்திகளுக்கு ஆதாரம்: ‘குடிஅரசு’ 1929 இதழ்கள்)
பெரியார் முழக்கம் 12032015 இதழ்