வழக்கறிஞர்கள் சமூக நீதி போராட்டத்தை ஒடுக்க பார்ப்பனர்கள் திரைமறைவு சதி!

உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 7 பார்ப்பனர் நீதிபதிகளாக தங்கள் விகிதாச்சாரத்துக்கு அதிகமாக உள்ள நிலையில் தலைமை நீதிபதியாக வந்துள்ள காஷ்மீர் பார்ப்பனர் – மேலும் பார்ப்பனர், முதலியார், கவுண்டர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கே கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கி, முதல் பட்டியலை அனுப்பியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூகநீதிக்குப் போராடும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக நீதி அமைப்புகளின் கோரிக்கைகளை திசை திருப்பிட பார்ப்பன ஆதிக்க சக்திகள் தீவிரம் காட்டி வருகின்றன. முற்றுகைப் போராட்டம் நடக்கவிருந்த 16ஆம் தேதி அன்று ‘தமிழ் இந்து’, ‘ஆங்கில இந்து’ நாளேடுகளில் போராட்டத்துக்கு எதிரான கட்டுரைகளை முன்னாள் நீதிபதி சந்துரு எழுதியிருந்தார். வழமைக்கு மாறாக ஆங்கிலம், தமிழ் என்ற தனது இரண்டு இதழ் களிலும் ஒருவரே எழுதிய கட்டுரையை ஒரே நாளில் வெளியிட்டு சமூக நீதிப் போராட்டத்துக்கு ‘இந்து’ தனது எதிர்ப்பைக் காட்டியது. நீதிபதிகள் தேர்வு பட்டியலுக்கு எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி இராமசுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதலாக பார்ப்பனர்களை நியமிக்கக் கூடாது என்ற வழக்கை பார்ப்பன நீதிபதி ஒருவரே விசாரிக்கக் கூடாது என்றும், அதுவும், நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்று ஒப்புதல் வழங்கிய நீதிபதியாக இராமசுப்ரமணியம் இருக்கிறார் என்றும் வழக்கறிஞர் சங்க சார்பில் வாதாடிய வழக்கறிஞர், எதிர்ப்பு மனு தாக்கல் செய்திருந்தார். எதிர்ப்பு வந்தால் விசாரணையிலிருந்து விலகிக் கொள்ளும் மரபுகளுக்கு மாறாக நீதிபதி இராமசுப்ர மணியன், இந்த வழக்கைத் தானே விசாரிக்கப் போவதாக அறிவித்து, விசாரணையின்போது கடுமையான கருத்துகளையும் முன் வைத்தார். வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு எதிராக ‘தந்தி’ தொலைக்காட்சி நடத்திய ‘ஆயுத எழுத்து’ விவாத நிகழ்ச்சியை நீதிமன்றத்திலேயே நீதிபதி பாராட்டினார்.
இது தொடர்பாக, ‘தமிழ்நாடு பார் கவுன்சில்’ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழக்கறிஞர் சங்கம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புக்கான மக்கள் இலவச சட்ட ஆலோசனை மய்ய தொடக்க விழா, மார்ச் 9 ஆம் தேதி பார் கவுன்சில் வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினர் நீதிபதி இராமசுப்பிரமணியன், வரவேற்புரையாற்றிய அம்பேத்கர் வழக்கறிஞர் சங்கத்தைச்
சேர்ந்த கலைச்செல்வன், நீதிபதி இராமசுப்பிரமணியத்தை
புகழ்ந்து தள்ளினார்.
“மாண்புமிகு நீதிபதி இராமசுப்பிரமணியன் மிகவும் நல்லவர்; வல்லவர்; அவரது பெயரிலேயே இராமனும், சுப்பிரமணியனும் இடம் பெற்றுள்ளனர். அவதாரப் புருஷரான இராமன்
சிறந்த நீதிமான். சுப்பிரமணியன் தமிழர்களின் கடவுள்
இருவர் பெயரையும் தனது பெயரில் வைத்துள்ளார் நீதிபதி.
இந்த கடவுள்கள் காட்டிய வழியில் நீதி வழங்குகிறார்.
தமிழ் இலக்கியத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர் நீதியரசர்” என்று பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான சாந்த குமாரி பேச அழைக்கப்பட்டார். நீதிபதியை இராமனோடு ஒப்பிட்டுப் பேசியதை அவர் ஒரு பிடிபிடித்தார். “இராமனைப் போல் அநீதி செய்த ஒருவனைப் பார்க்க முடியாது. தனது மனைவி சீதை குறித்து, எவனோ ஒரு மூன்றாம் மனிதன் எழுப்பிய சந்தேகத்தை நம்பி, சீதையை தீக்குளிக்க வைத்து துன்புறுத்தலைச் செய்தவன் இராமன். இத்தகைய மோசமான “இராமனை” நீதிபதி வழிகாட்டியாகக் கொள்ளக் கூடாது. இராமன் வழியிலான நீதி, அநீதிதான்” என்று ஆவேசமாக பதிலடி தந்தார்.
இதற்கிடையே வழக்கறிஞர் சமூக நீதிப் போராட்டத்தை உடைக்க வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையிலான ஒரு வழக்கறிஞர் சங்கத்துக்கு, பார் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி இராமசுப்பிரமணியனுக்கு ஆதரவாக சங்கராச்சாரி வழிகாட்டலில் இந்த அமைப்பு செயல்படுவதாக கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரபாகரனும் பங்கேற்றுப் பேசினார். அப்போது தனக்கு காஞ்சி ஜெயேந்திரன், விஜயேந்தினுடன் உள்ள தொடர்புகளை
பெருமையுடன் குறிப்பிட்டார்.
“அண்மையில் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் ஜன கல்யாண் அமைப்பின் சார்பில் இலவச சட்ட சேவை மய்யம் தொடங்கப் பட்டது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் – அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம் உரியவர்களிடம் சென்று அடைய வழக்கறிஞர்களாகிய நீங்கள் பாடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதாக பதிவு செய்தார். போட்டி பிராபாகரன் சங்கத்துக்கு பார் கவுன்சில் தந்துள்ள அங்கீகாரமும், இவர் தனக்கும் காஞ்சி மடத்துக்கும் உள்ள நெருக்கத்தை பெருமையாக குறிப்பிட்டதும், நீதிபதிகள் நியமனத்தில் காஞ்சி சங்கர மடத் தலையீடு இருக்குமோ என்று கூட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் பேசிக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 26032015 இதழ்

You may also like...

Leave a Reply