பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி
‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, பீகார் குறித்து ஒளிபரப்பிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தை பார்ப்பனர்கள் ஆட்டிப் படைத்த கொடூரமான வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த நிகழ்வில் பேட்டி அளித்த லல்லு பிரசாத், பார்ப்பனக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் அரசியலுக்கு வந்ததாக கூறினார். அந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தித் தொகுப்பு.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மாட்டுக்குப் பதிலாக கழுத்தில் ஏர் பூட்டிக் கொடுமைப்படுத்திய பார்ப்பன உயர் ஜாதிக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான குரலைக் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்காக எங்கள் ஆட்சிச் சக்கரம் சுழன்ற நிலையில், எங்கள் ஆட்சியைக் காட்டாட்சி (ஜங்கள்ராஜ்) என்று வருணிக்கிறார் – ஆனால், மோடியோ உயர்ஜாதி யினருக்கான கருவி என்றார் லாலுபிரசாத்.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வடக்கே மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் தவிர்த்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பனீய கட்டுக்குள் சென்றுவிட்டன. மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே, சாவித்திரி பாய் புலே, சாகுமகராஜ் போன்றோரால் உருவாக்கப்பட்ட சமூகநீதி நெருப்பின் வெப்பம் தாளாமல் ஓடி ஒளிந்துகொண்ட பார்ப்பனீயம் சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு மைனாரிட்டி பாஜக ஆட்சி மற்றும் மத்தியில் உள்ள மோடியின் ஆதரவோடு மெல்ல தலையை எட்டிப் பார்க்கிறது.
பார்ப்பனீய சக்திகளின் பிடியில் பீகார்
பீகார் மாநிலம், வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது, ஆண்டு முழுவதும் வற்றாத கங்கை, கோஷி போன்ற பேராறுகளும் சுமார் 60 சிற்றாறுகளும் பாயும் வளமான பூமி. சுதந்திரம் பெறும் வரை பீகார் மக்கள் வேலை, கூலி என்று வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு பீகார் உருவான போதே முழுக்க முழுக்க பார்ப்பனீய சக்திகளின் பிடியில் வந்து விட்டது.
60களின் துவக்கத்திலேயே மெல்ல மெல்ல அரசமைப்புச் சட்டம் கொடுத்த அனைத்து உரிமைகளும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன. மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு கொடூரமும் வெளியே தெரியாதவாறு பார்ப்பனீய ஊடகங்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருந்தன. அவரவர் குலத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற அச்சில் ஏறாத சட்டம் அங்கே இருந்தது. ஆசிரியர்களின் மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும் மாணவர்கள்
லாலு பிரசாத் நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “எங்கள் பெற்றோர் எங்களை பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளி அசம்பிளி யிலேயே அந்தந்த ஜாதி மாணவர்கள் பிரிக்கப்படு வார்கள். யாதவ மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு மாடுகளை கவனிக்க அனுப்பப்படுவார்கள். நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும். பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படித்தான் அந்தந்த ஜாதி மாணவர்கள் அவரவர் குலத் தொழிலைச் செய்ய வேண்டும். இந்தியா எங்கும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டோம். அப்போ தெல்லாம் ஆசிரியர் மேசையில் இருக்கும் பத்திரிகை யைத் தொட்டாலே காது கிழிந்து விடும் அளவிற்கு திருகிவிடுவார்” என்று தன்னுடைய மாணவர் பருவ அனுபவத்தைக் கூறியுள்ளார் – லாலு பிரசாத்.
நாடோடிகளின் நிலை இதைவிடக் கொடூரம்
பீகார் மக்களின் கடந்தகால வாழ்க்கைக் குறித்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் ‘என்.டி.டி.’ தொலைக்காட்சி செய்தியை பீகாரில் எலி பிடிக்கும் நாடோடிகளின் வாழ்க்கைப் பற்றி ரவீஷ் குமார் என்ற செய்தியாளர் அதைத் தயாரித்திருந்தார். சுதந்திரத் திற்கு முன்பு, இந்த மக்கள் வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினர். கூலியாக நெல், கோதுமை, கடுகு, கடலை போன்றவை கிடைக்கும். ஆனால், ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இவர்களின் வாழ்க்கையில் கொடூர மாற்றம் ஏற்பட்டது. இவர்கள் வயலில் இறங்குவதால் வயல் தீட்டுப்படுகிறது என்று கூறி உயர்ஜாதியினர் இவர்களை ஊரைவிட்டுத் துரத்தினர். ஏதாவது வேலை கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலையில், மாடுகளுக்குப் பதிலாக இந்த மக்களில் ஆண், பெண் என்று பாராமல் அவர்களின் கழுத்தில் ஏர் பூட்டப்பட்டது. எல்லா வற்றையும்விடக் கொடூரம் அவர்களுக்குக் கூலியாக சாணி கொடுக்கப்பட்டது. ஆமாம் மாடுகளின் வயிற்றில் இருந்து செரிக்காமல் வெளியே வந்த கோதுமைகளை இவர்கள் கழுவி எடுத்துச் செல்லவேண்டும். அதுதான் அவர்களது உணவு!
இதே நிகழ்ச்சியில் சுதன்மான்ஜி என்ற 80 வயது முதியவர் தன்னுடைய அனுபவத்தை பற்றிக் கூறும்போது: “அம்மா கூடை நிறைய சாணியை அள்ளி வருவார்கள் அதைக் கழுவினால் ஒரு கைப்பிடி கோதுமைகூட கிடைக்காது. சில நேரங்களில் அந்தச் சாணிக் கூடையில் மனிதக் கழிவுகளும் கலந்திருக்கும்” என்று தெரிவித்தார்.
கூலி கேட்பவர்களைக் கொலை செய்ய கூலிப்படை
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் போன்றோர்களிடம் இருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டன. விவசாயக் கூலியைக் கேட்கிறார்கள் என்பதற்காக கேட்பவர்களை கொல்லுவதற்கென்றே உயர்ஜாதியினர் அடியாள்களை நியமித்திருந்தனர். இது பின்னாள்களில் ‘ரன்வீர் சேனா’ என்ற பெயரில் செயல்பட்டது. 1980 முதல் 1999ஆம் ஆண்டு வரை சுமார் ஆறாயிரம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை கொலை செய்திருக்கின்றனர் என்று அரசுப் பதிவேடு கூறுகிறது. ஆனால், இது இலட்சத்தையும் தாண்டியிருக்கும் என்று லாலு பிரசாத் போன்ற தலைவர்கள் கூறுகின்றனர்.
மிசா சிறை கொடுத்த மாற்றம்
இந்தக் கொடூர அடக்குமுறைக்கு எதிராக பீகாரில் சில தலைவர்கள் உருவா யினர். ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலில் செயல் பட ஆரம்பிக்கும்போது நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது தனித்தனியாக செயல்பட்ட இளைஞர்களை ஒன்றிணைத்தது. லாலு பிரசாத் தனது மிசா சிறை அனுபவம் குறித்துக் கூறும் போது, “பீகாரில் பிற்படுத்தப்பட் டோர், தலித்துக்கள் 70 விழுக்காடு; ஆனால் வெறும் 3 விழுக்காடு கொண்ட பார்ப்பனர்கள் சிறையில் உள்ள அனைத்துப் பதவிகளிலும் நிறைந்திருந்தனர். சிறை வார்டன் முதல் எழுத்தர், கணக்கர், பொருட்கள் மேற்பார்வையாளர் என அனைத்துப் பணியிலும் பார்ப்பனர்கள் தான், இதர அனைத்து உடல் உழைப்பு வேலைகளையும் அந்தந்த ஜாதி சிறைக் கைதிகள் பார்க்கவேண்டும், வரும் ஒரு சில பார்ப்பன கைதிகள் சில நாள்களில் வெளியே சென்றுவிடுவார்கள், கைதிகளில் பார்ப்பனர்கள் இருந்தால் அவர்களை செல்லுக்குள் வைக்கமாட்டார்கள். அவர்களை வார்டன் அறையிலேயே தங்கவைத்து பிறகு அனுப்பி விடுவார்கள் இந்தச் சம்பவங்கள் எங்களை மேலும் ஆவேசப்படுத்தி விட்டது. இந்தப் பார்ப்பனீயக் கொடுமையை ஒழிக்காமல் விடமாட்டோம், அரசியல் அதிகாரத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த முடியும் என்ற கொள்கையில் நாங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டோம்.
அவசர நிலை ஆட்சி ஒழிந்தது; மத்தியில் ஆட்சி மாற்றம் எங்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது, நாங்கள் முன்பைவிடத் தீவிரமாக எங்கள் அரசியல் பணியைத் துவக்கினோம்; எங்களை மிகவும் எளிதில் கலவரக்காரர்கள்(தற்போது நக்சலைட்) என்று கூறி அரசுப் படைகள் கொலை செய்துவிட முடியும். ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்கவில்லை. பாபாசாகிப் அம்பேத்கர் வழியில் சமூக நீதியை மீட்டெடுக்க அரசியல் உரிமையை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆகையால் மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நின்றோம், நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் பாபாசாகிப் அம்பேத்கரின் வாக்கு உண்மையானது, பீகாரில் சமூக நீதி வென்றது.
மோடி அவரது குஜராத்தில் நடத்தியது காட்டாட்சி (ஜங்கள்ராஜ்). எங்கள் ஆட்சியில் நடந்தது நல்லாட்சி (மங்கள்ராஜ்). மோடிக்கு இந்த வித்தியாசம் தெரியவில்லை, இது குஜராத் அல்ல பீகார். இங்கு காவிகளின் சூழ்ச்சிகள் பலிக்காது” என்று அந்த தொலைக்காட்சி நிகழ்வில் லல்லு கூறினார்.
பெரியார் முழக்கம் 04112015 இதழ்