பெண்ணுரிமையை மறுப்பதில் கைகோர்க்கும் மதங்கள்
பார்ப்பன சனாதன மத சக்திகள், இஸ்லாமி யர்களை எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்களை தேச விரோதிகளைப்போல சித்தரிக்கிறார்கள். தங்களின் மதவாத அரசியலைக் கட்டமைக்க ஏதேனும் ஒரு எதிரியை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இவைகள் அரங்கேற்றப் படுகின்றன. ஆனால், பெண்கள் பிரச்சினையில் இவர்களின் குரல் பல நேரங்களில் ஒன்றாகவே ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. சென்னையில் காதலர் தின எதிர்ப்பில் இந்து மகாசபைக்காரர்களோடு சில இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து கொண்டன. அவர்கள் காதலர் நாளுக்கு எதிராக ஒட்டிய சுவரொட்டிகளைக் காண முடிந்தது. இஸ்லாமிய மக்கள் கல்வி, வேலை, பொருளாதார வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக, அவர்கள் வாழ்நிலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு நியாயமான குரல் கொடுக்க வேண்டிய அதே நேரத்தில் மதம் சார்ந்த பல பிற்போக்கு கொள்கைகளை நாம் சுட்டிக்காட்டி எதிர்க்க வேண்டியதும் அவசியமாகிறது. இது தொடர்பாக ஒரு செய்தியை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
பம்பாயிலிருந்து வெளிவரும் ‘அவதான்மா’ என்ற உருது நாளிதழின் ஆசிரியர் சிரின்தால்வி. இந்தியா வில் ஒரு நாளிதழின் ஆசிரியராக இருக்கும் ஒரே மு°லிம் பெண்ணும் இவர்தான். இவர், இப்போது ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மத உணர்வை புண்படுத்தியதாக அடுக்கடுக்கான வழக்குகளுக்கு உள்ளாகி, உயிருக்கு அச்சுறுத்துதல் காரணமாக தலைமறைவாக இருக்கிறார். அப்படி அவர் செய்த ‘குற்றம்’ என்ன? பாரீஸ் நகரத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’, அல்லாவைப் பற்றிய கேலிச் சித்திரம் வெளியிட்டதற்காக அந்த அலுவலகத்தில் மதத் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொலை செய்தது உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அது குறித்து ‘அவதான்மா’ நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதிய சிரின்தால்வி, பாரீ° நாளேடு வெளியிட்ட கார்ட்டூன் படத்தை வெளியிட்டு விளக்கமளித்திருந் தார். இத்தனைக்கும், அந்த கார்ட்டூன் வெளி யிட்டதை விமர்சித்து எழுதப்பட்டதே அக்கட்டுரை. கருத்து விளக்கத்திற்காக அந்த ‘கார்ட்டூனை’ வெளி யிட்டாலும், அது எதிர்விளைவுகளை உண்டாக்கி விடக் கூடும் என்று பின்னர் அவரே உணர்ந்த காரணத்தால், அடுத்த நாள் இதழிலேயே முதல் பக்கத்தில் அதற்கு வாசகர்களிடம் மன்னிப்பும் கோரி இருந்தார். இவ்வளவுக்குப் பிறகு, பம்பாய் மதத் தீவிரவாதக் குழுவினர் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மத உணர்வுகளுக்கு எதிராக உள் நோக்கத்தோடு செயல்பட்டதாக இந்திய தண்டனை சட்டம் ‘295ஏ’ பிரிவின் கீழ் மகாராஷ்டி ராவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அவர் மீது காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன.
இதே கார்ட்டூனை மும்பையில் வேறு பல ஏடுகள் வெளியிட்டாலும், இவர் ஒரு பெண் என்பதால் இவரை மட்டுமே குறி வைத்து மிரட்டப்படுவதாக வும், இஸ்லாமிய மதத்துக்குள்ளே தாராளமான சிந்தனையாளர்களிடமிருந்தோ ‘மத சகிப்புத் தன்மை’ வேண்டும் என்று பேசுவோரிடமிருந்தோ ஒருவர்கூட இந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. அவர் தனித்து விடப்பட்டார். ஜன.17 ஆம் தேதி கார்ட்டூன் வெளியிடப்பட்டது; ஜனவரி 18ஆம் தேதி இவர் மன்னிப்பும் கேட்டு விட்டார்; ஜனவரி 19ஆம் தேதி நாளிதழ் வெளியிடுவதே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பம்பாய் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் தல்வி. தனது வீட்டைப் பூட்டிவிட்டு, மாறுவேடங்களில் தலை மறைவாக பதுங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட் டிருப்பதாக வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன் மீது பதியப்பட்ட அத்தனை வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், மாநில அரசு தன்மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண் டுள்ளார். ஆனால், மகாராஷ்டிரா அரசின் வழக் கறிஞர் சந்திப் ஷிண்டே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று வாதிட் டுள்ளார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சங்பரிவாரங்கள் மதசகிப்புத் தன்மையற்றவர்கள் குற்றச்சாட்டு, இவர்களுக்கும் பொருந்தாதா என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. இ°லாமிய தீவிரவாதத்துக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா ஆட்சியும் செயல்படுகிறது.
பெரியார் முழக்கம் 02042015 இதழ்