வினாக்கள்… விடைகள்…!
திருவெண்ணெய் நல்லூர் அருகே முருகன் கோயில் ‘வேல்’ மீது குத்தியிருந்த எலுமிச்சம் பழம் ரூ. 24 ஆயிரத்துக்கு ஏலம் போனது. – செய்தி
அப்படியா! இந்த செய்தி, முருகனை முப்பாட்டனாக ஏற்றுள்ள கட்சிக்கு தெரியுமா? தெரிஞ்சிருந்தா அவுக ரூ. 24 இலட்சத்துகே ஏலம் எடுத்திருப்பாக!
ஜெயலலிதா, ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற புதுக்கோட்டை கோயில்களில் யானைகள், குதிரைகள், பசுக்களுடன் கலெக்டர் முன்னிலையில் புரோகிதர்கள் ‘கஜபூஜை’ யாகம். – செய்தி
அப்படியே அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் அதுல சேர்த்துக்குங்க… எதுக்கு அவருக்காக ஒரு தனிச் செலவு!
இந்திய ரூபாய் நோட்டுக்களை இனி இந்திய காகிதங்களிலேயே அச்சிட வேண்டும். – பிரதமர் மோடி
ஏற்கெனவே நிறைய பேர் அப்படித்தான் அச்சிட்டுகிட்டு இருக்காங்க… நீங்கதான் அவர்களை ‘கள்ள நோட்டு பேர்வழிகள்’ன்னு ஏத்துக்க மாட்டேங்குறீங்க!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக நிதியமைச்சகத்திலிருந்து வெளியான ஆணையை நம்பவேண்டாம்; அது போலி ஆணை. – நிதியமைச்சகம் அறிவிப்பு
அப்ப, நிதியமைச்சகத்தை நிர்வாக வசதிக்காக ‘போலி – உண்மை’ன்னு இரண்டாக பிரிச்சி வச்சிருக்காங்களா? நல்லாத்தான் இருக்கு!
பசு மாடுகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். – மகாராஷ்டிர காவல்துறை அறிவிப்பு
ஆதார் அட்டை, மான்யமெல்லாம் கொடுத்து வங்கியில் பணம் போடுவாங்க போலிருக்கு!
திருப்பதியில் வேற்று மதப் பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – மத்திய அமைச்சர் தத்தாத்ரேயா
ஆனா, மாற்று மதக்காரன் கண்டுபிடிச்ச கணினி, இணையதளம், கண்காணிப்புக் காமிராக்களை எல்லாம் ஏத்துப்பீங்க…
இராஜீவ் காந்தி ஒரு நைஜிரியா நாட்டுப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை காங்கிரஸ் கட்சித்லைவராக ஏற்றிருக்குமா? – மத்திய அமைச்சர் கிரிராஜ்
‘அறை போட்டு’ இப்படி எல்லாம் சிந்திக்குற அளவுக்கு மோடியின் அமைச்சர்கள் எந்த வேலையுமே இல்லாம இருக்குறாங்க போலிருக்கு!
பெரியார் முழக்கம் 09042015 இதழ்