தாலியைப் பற்றி அம்பேத்கர்
சென்னைஅரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்:
மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை, “தாலி கட்டுத் திருமணம்” என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது; புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் ‘சம்பந்தம்’ என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் ‘தாலி கட்டும் திருமணம்’ என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட “பிராமணர்கள்” ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள்.
(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய ‘காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன?’ என்ற நூலின் பக்.205-206 (தொகுதி, பக்.101))
ஏப்ரல் 14, புரட்சியாளர் பிறந்த நாள்!
பெரியார் முழக்கம் 09042015 இதழ்