பசுவதை: காஞ்சி சங்கராச்சாரி ஆதரவு
பா.ஜ.க. ஆட்சிகள் பசுவை வெட்டுவதற்கு தடைச் சட்டங்கள் போட்டு வருகின்றன. பசு இந்துக்களின் புனித தெய்வம் என்கிறார்கள். இதுகுறித்து விரிவான கட்டுரையை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளியிடப்பட் டிருந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் யாகங்களில் பசுவை பலி கொடுத்ததை வேதங்கள் கூறுகின்றன. இப்போதும் யாகங்களில் பசுக்கள் கொண்டு வந்து நிறுத்தப்படு கின்றன. ஆனால், பலியிடப்படுவது இல்லை. அண்மையில் ஜெயலலிதா, ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற புதுக்கோட்டை மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் 108 பார்ப்பனர்களைக் கொண்டு நடத்திய யாகத்தில் ‘பசு மாடுகள்’ கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியே பசுக்களை பலியிடுவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார். ‘தெய்வத்தின் குரல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அவரது கருத்துகளடங்கிய நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார்:
“தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக் கொள்ளவில்லையா? அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை.”
“பிராமணர்கள்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அசுவமேத யாகத்துக்குக்கூட 100 பசுக்கள் தான் சொல்லியிருக்கிறது.” (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி)
இப்படி – காஞ்சி சங்கராச்சாரியே பசுவதையை நியாயப்படுத்துகிறார். சங்பரிவாரங்கள் சங்கராச்சாரியை இந்து விரோதி என்று கூறுவார்களா?
பெரியார் முழக்கம் 16042015 இதழ்