தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம்

11822991_1619357585010599_1584758672818351743_o“கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் என்பவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. நடந்தது ஒரு சாதாரண கொலைதான், இதற்கு ஏன் காவல்துறை இப்படி பெரிதுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறையால் தன்னை நெருங்க முடியாது என்றும், தனது ஜாதிக்காரர்களிடம் ‘வாட்ஸ் அப்’ வழியாக யுவராஜ் பேசி, அந்த பேச்சு பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு ஒரு கொலை வழக்காக இருந்தால் தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை அவரது குடும்பத்தினரைக் கைது செய்து குற்றவாளியை சரணடைய வைத்திருப் பார்கள். ஆனால், இந்த யுவராஜை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 17ஆம் தேதி ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, திருச்செங் கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார்.

தொடர்ந்து மதுவிலக்கு பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முழுமையான மதுவிலக்கு சாத்தியமில்லை; அப்போது கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும் காவல்துறைக்கும் இரகசிய ஒப்பந்தம் உருவாகும். இளைஞர்கள் வேறு போதைப் பொருள்களை தேடிச் செல்லும் ஆபத்துகளுக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில் மதுவிலக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஒரு காலத்தில், சில தனிப்பட்டவர்களின் பழக்கம் என்று இருந்த ‘குடி’, இப்போது சமூகத்தையே பாதிக்கும் நிலைக்கு சமூகப்பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த ஆபத்தான போக்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். மதுவிற்பனைக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது; நேரத்தைக் குறைப்பது; பள்ளி, மருத்துவமனை, மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை மூடுவது; புகை எதிர்ப்புப் பிரச்சாரம்போல், மது எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வது போன்ற நடவடிக்கைகள் வழியாக மதுப் பழக்கத்தை படிப்படியாகக் குறைக்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இப்போது தமிழகம் முழுதும் மதுக்கடைகளை மூடக் கோரி நடத்தப்படும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்த அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கழகத் தலைவர் கூறினார்

பெரியார் முழக்கம் 13082015 இதழ்

You may also like...

Leave a Reply