செயலூக்கம் தந்த மாவட்ட கலந்துரையாடல்கள்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் நான்காம் கட்டப் பயணம் ஆகஸ்டு 18ஆம் தேதி சிவகங்கையிலிருந்து தொடங்கியது. சிவகங்கை பி.என்.ஆர். விடுதியில் பகல் 11 மணியளவில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கழகத்தின் பரப்புரைப் பயணம், கழக ஏட்டிற்கு சந்தா சேர்த்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து கழகத் தோழர்கள் நா. முத்துக்குமார், பெரியார் முத்து, சி.முத்துக்குமார், தமிழ் மாறன் உள்ளிட்ட தோழர்கள் பேசினர்.

சிவகங்கை மாவட்டத்தில் பல கிராமங்களில் ‘பேய்’ மூட நம்பிக்கைகள் மக்களிடம் ஆழமாக ஊடுருவியிருப்பதையும், அதை எதிர்த்து மக்களிடையே உளவியல் நிபுணர்களைப் பயன்படுத்தி, அறிவியல் விழிப்புணர்வுப் பரப்புரை நடத்த வேண்டும் என்றும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே பேய் விரட்டுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்த சில சாமியார்கள் மோசடிகளை எடுத்துக் கூறி பாதிக்கப்பட்டோரிடம் உளவியல் அடிப்படையில் கருத்துகளை எடுத்துக் கூறி கழகத் தோழர்கள் நல்வழிப்படுத்தி வரும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். கழகத் தோழர்களுடன் கலந்து ஆலோசித்து, கழகப் பொதுச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்தார். முதல் நாள் 17ஆம் தேதி திருச்செந்தூரில் ஜாதி வெறியன் யுவராஜைக் கைது செய்யக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டதால் சிவகங்கை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்துக்கு கழகத்தலைவர், அமைப்பு செயலாளர், பொருளாளர் பங்கேற்க இயலவில்லை.

மதுரையில் : ஆகஸ்டு 19ஆம் தேதி மதுரை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் மாலை 5 மணியளவில் மதுரை ‘பி.அண்ட்.டி’ நகரில் பொறியாளர் தளபதி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. கொடுமுடி பாண்டியன், திலீபன் செந்தில், மா.பா. மணிகண்டன், மாப்பிள்ளை சாமி, முருசேகசன் மற்றும் தேனியிலிருந்து வந்திருந்த தோழர்கள் க.சரவணன், பா. குமரேசன் கருத்தினைத் தெரிவித்தனர். கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் பேசியதைத் தொடர்ந்து, கழகத் தலைவர், மாவட்டப் பொறுப்பாளர்களை அறிவித்தார்.

விருது நகர் : ஆகஸ்டு 19ஆம் தேதி பகல் 11 மணியளவில் விருதுநகர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தோழர் கணேச மூர்த்தி இல்லத்தில் கடவுள்-ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. கணேசமூர்த்தி வரவேற்புரையாற்றினார். தோழர்கள் மாப்பிள்ளைசாமி, தெப்புலங்கன்பட்டி ஜெகதீசுவரன், வீரபாண்டியன், வடமலைக்குறிச்சி ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கராஜ், ராமன், பால் சரவணகுமார், ரமேசு ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர் கணேசமூர்த்தி, வாரந்தோறும் 50 பெரியார் முழக்கம் இதழ்களை தமது சொந்தப் பொறுப்பில் வாங்கி, தோழர்களிடம் தொடர்ந்து வழங்கி வந்தார். இதன் வழியாக, பெரியார் கொள்கை வழியை நோக்கி இளைஞர்களைக் கொண்டு வர முடிந்தது என்று கணேச மூர்த்தி குறிப்பிட்டார். நிகழ்வில் பேசிய இளைஞர்கள், கடவுள் மறுப்பு-ஜாதி எதிர்ப்புக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை கவலையுடனும் உணர்வுபூர்வமாகவும் கூறியது நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். மனு சாஸ்திர சுலோகங்களை அப்படியே அலைபேசியில் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி, அதன் மனித விரோத கொள்கைக்களை பரப்பி வருவதாக தோழர் மாணிக்கராஜ் கூறினார்.

“சேஷ சமுத்திரம் கிராமத்தில், தலித் மக்கள் தேர் ஊர்வலத்தை பொது வீதிகளில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த ஜாதி வெறியர்கள், இந்துக் கடவுளின் தேர் மீதே வெடிகுண்டு வீசியிருக்கும்போது, இதை பா.ஜ.க.வினரோ, ஆர்.எ.ஸ்.எஸ்.காரர் களோ ஏன் கண்டிக்கவில்லை?” என்று ஜெயக்குமார் அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பினார்.

“சுயமரியாதைக்காகப் போராடிய தலைவர் பெரியார். அவர் காண விரும்பியது சுயமரியாதை தேசம். மொழி, பண்பாடு, அனைத்திலும் பெரியாரின் பார்வை சுயமரியாதைக் கண்ணோட்டத்திலேயே இருந்தது. பெரியார் கொள்கை பரப்பும் நூல்களை வாங்கி இளைஞர்களிடம் தந்து படிக்கச் செய்வதிலும், அவர்களுடன் நடத்தும் விவாதங்களின் வழியாகவும் புதிய இளைஞர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றி வருகிறேன். பல இளைஞர்களை வென்றெடுக்க முடிந்திருக்கிறது. இது நாம் கொண்டு சென்ற பெரியார் கருத்துகளுக்குக் கிடைத்த வெற்றி” என்றார் தோழர் கணேசமூர்த்தி. கழகப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். தோழர் கணேசமூர்த்தி இல்லத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி: விருதுநகரிலிருந்து கழகப் பொறுப்பாளர்கள் தூத்துக்குடிக்கு பயண மானார்கள். பாளையங்கோட்டை சாலையிலுள்ள அழகப்பா பல்கலைக்கழக படிப்பு மய்யத்தில் மாலை 5 மணியளவில் தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்களின் கலந்துரையாடல், கடவுள், ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சில மாதங்களுக்கு முன் முடிவெய்திய கழகத்தின் மாவட்ட செயலாளர் மதன் உருவப்படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.  கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தொடக்க உரையாற்றினார். தோழர்கள் பால்ராஜ், பாலசுப்பிரமணியன், அன்பரசு, உதயகுமார், காசி ராஜா, குமார், அன்பு ரோசு, செல்லத்துரை, பால்வண்ணன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, அமைப்புச் செயலாளர், பொருளாளர், பொதுச் செயலாளர், மற்றும் தலைவர் உரையாற்றினர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply