தபோல்கர் படுகொலை: குற்றவாளிகளுக்கு பா.ஜ.க. அடைக்கலம்!

மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடையே பகுத்தறிவைப் பரப்பி வந்த மருத்துவர் தபோல்கர், பூனேயில் நடைப்பயிற்சி சென்றபோது 2013, ஆக. 20ஆம் தேதி மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பம்பாய் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காத நிலையில், பம்பாய் உயர்நீதிமன்றம், 2014 மே மாதம் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சி விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர முன் வரவில்லை. மாநில காவல்துறையிலிருந்து 6 அதிகாரிகளை சி.பி.அய். விசாரணைக்கு ஒதுக்கித் தருமாறு ஜூலை முதல் வாரம் ஒரு கடிதமும், மீண்டும் ஆகஸ்டு முதல் வாரத்தில் இரண்டாவது கடிதமும் மாநில உள்துறைக்கு சி.பி.அய். எழுதிய கடிதங்களை உள்துறை கண்டு கொள்ளவே இல்லை. இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று சி.பி.அய். அதிகாரிகள் கூறியதாக ‘இந்து’ ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனாலும், விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர அரசு தயாராக இருப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிங் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் பூனே காவல்துறை திரட்டிய தகவல்கள்தான் அடிப்படை ஆதாரங்களாகும். அவை மராத்தி மொழியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதால் சி.பி.அய். அதிகாரிகள் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த வழக்கை புலனாய்வு செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பூனே காவல்துறை 22 குழுக்களை அமைத்தது. ஆனால், இப்போது சி.பி.அய்.யில் 22 அதிகாரிகள்கூட இல்லாத நிலையில் தடுமாறுகிறது. இதற்கிடையே பத்திரிகையில் செய்தி வந்த பிறகு, மகாராஷ்டிர முதல்வர், சில காவல்துறை அதிகாரிகளை சி.பி.அய்.க்கு உதவ ஒதுக்கியுள்ளார். ஆனாலும், குற்றவாளிகள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் இருப்பதால் அவர்களைப் பிடிக்க முடியாது என்று மாநில முன்னாள் முதல்வர் நாராயணன் ரானே குற்றம் சாட்டியுள்ளார். தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க., மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது, நாடு முழுதும் அதிர்வலைகளை உருவாக்கிய வழக்கு இது.

மாநில அரசு சி.பி.அய்.க்கு காவல்துறை அதிகாரிகளை ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி தந்தாலும், அதற்கான முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை என்று தபோல்கர் குடும்பத்தினர் கவலையுடன் கூறுகிறார்கள்.

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply