தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

மோடி தனது செல்லப் பிள்ளையாக வளர்த்துவிட்ட அதானி, இப்போது தனது சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் வகையில் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (மோடி – அதானியை வளர்த்த கதையை வேறு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம்)

2017ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆய்வு செய்ய உருவான அமெரிக்க நிறுவனமே ஹிண்டன்பர்க். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி குழும நடவடிக்கைகளை ஆய்வு செய்தது; குழுமத்தின் முன்னாள் அதிகாரிகளை நேர்காணல் செய்தது. அதனடிப்படையில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்வு அலைகளை உருவாக்கியது. உலக பில்லியனர் இடத்தில் 3ஆவது இடத்தில் இருந்த அதானி (சொத்து மதிப்பு 11 இலட்சம் கோடி), இப்போது 7ஆம் இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார்.

அதானி குழுமத்தில் அதிவேக வளர்ச்சியில் அதன் நிறுவனப் பங்குகளைப் பெரும் தொகைக் கொடுத்து வாங்கினர். அரசு பொதுத் துறை நிறுவனங்களும் முதலீடு செய்தன. ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.அய்.சி., ரூ.77,000 கோடியை அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதோடு, பொதுத் துறை வங்கிகள் கடன்களை வாரி வழங்கியுள்ளன.

அதானி செய்த மோசடி என்ன? நிதிநிலை சிறப்பாக இருப்பதாக சித்தரித்து பங்குச் சந்தையை ஏமாற்றியுள்ளது.

  • அதன் 7 நிறுவனங்களில் பங்குகள் விலை மூன்று ஆண்டுகளில் 8.20 இலட்சம் கோடி அதிகரித்தது. இதைக் காட்டி வங்கிகளிடம் கடன் வாங்கியது (2 இலட்சம் கோடி கடன் பெற்றுள்ளது). அதன் நிதிநிலை 85 சதவீதத்துக்கும் அதிகமாக ஊதிப் பெருக்கிக் காட்டிப்பட்டிருக்கிறது.
  • மொரிஷியஸ், அய்க்கிய அரபு அமீரகம் கரிபியன் தீவுகள் ஆகிய நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கியது. காரணம் இந்த நாடுகளில் வரிவிதிப்பு கிடையாது. இங்கே தொடங்கப்பட்ட நிறுவனங் களுக்கு, பணியாளர்களோ, நடவடிக்கை களோ, முகவரியோ, தொலைத் தொடர்பு எண்களோ இல்லை. ஆனாலும் பல பில்லியன் டாலர்கள் – செயல்படாத இந் நிறுவனங்களின் சார்பில் கணக்கில் எழுதப்பட்டுள்ளன.
  • பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங் களில் 25 சதவீத பங்குகள் – குழும நிறுவனர்களை சாராதவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நான்கு நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப் படவில்லை.

இப்படி எண்ணற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறது ஹிண்டன்பர்க். அதானி குழுமம் மறுக்கிறது. மறுத்து சவால் விடுகிறது அமெரிக்க நிறுவனம். “எங்கள் அறிக்கையில் நாங்கள் கேட்ட 88 கேள்விகளுக்கு பதில் இல்லை; வேண்டுமானால் எங்கள் மீது அமெரிக்காவிலேயே வழக்கு தொடரட்டும்; அமெரிக்க நீதிமன்றம் வழியாகவே மோசடி களை அம்பலப்படுத்துகிறோம்” என்கிறது அமெரிக்க நிறுவனம்.

முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளன. அத்தனையும் மக்கள் பணம். தான் வளர்த்து விட்ட செல்லப் பிள்ளையால் நாட்டின் பொருளாதாரமே பாதிப்புக்குள்ளாகி யிருப்பதைப் பார்த்து மோடி மவுனம் சாதிக்கிறார்.

இது குஜராத்திகள் பாசமா? அல்லது இந்தியப் பொருளாதார மய்யத்தை தனி மனிதனிடம் குவிந்து விட்டால் நாட்டை இந்துராஷ்டிர மாக்கிவிட முடியும் என்ற சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியா? நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

பெரியார் முழக்கம் 02022023 இதழ்

 

 

You may also like...