அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்
ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர்.
திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி.
பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன.
பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா.
பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன. கொளத்தூர் மணி உரையாற்றினார். உடுமலையில் பரப்புரைக் கூட்டம் நடந்தது.
பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரை ஆத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ். பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன.
மார்ச்: நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் தபசி குமரன், உமாபதி ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
கோவை மாவட்டக் கழக சார்பில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேசினார். முழக்கத்துக்கு ரூ.75,000/- சந்தா வழங்கினர்.
நங்கவள்ளி கழகக் கூட்டம் பரபரப்புடன் நடந்தது. கலவரம் செய்ய முயன்ற சங்கிகள் விரட்டியடிக்கப்பட்டனர். காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி. கொளத்தூர் மணி சிறப்புரை. (மார்ச் 5)
கடலூர் மாவட்டம் மங்களூரில் கழகப் பரப்புரை; கொளத்தூர் மணி சிறப்புரை. மதுரை புதூரில் பரப்புரைக் கூட்டம்; கொளத்தூர் மணி சிறப்புரை (மார்ச் 9)
சென்னையில் தலைமை அலுவலகத்தில் மகளிர் நாள் மற்றும் மணியம்மையார் பிறந்தநாள் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. ஆசிரியர் சிவகாமி சிறப்பு அழைப்பாளர் ( மார்ச் 10)
கள்ளக்குறிச்சி, மதுரை, ஆத்தூரில் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. தஞ்சை கூட்டத்தில் பால்.பிரபாகரன் சிறப்புரை.
ஏப்ரல்: பா.ஜ.க. வேட்பாளர் திருப்பூரில் ஓட்டு கேட்க வந்த போது ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி கேட்ட கழகத் தோழர் சங்கீதாவைத் கடையில் புகுந்து பா.ஜ.க.வினர் ஆபாசமாகப் பேசி தாக்கினார்கள். அய்ந்து சங்கிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு முதல்வர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை விடுத்தனர்.
சென்னையில் மறைந்த களப்போராளி பத்ரி நாராயணன் நினைவுநாளில் தோழர்கள் உறுதி ஏற்பு. (ஏப்ரல் 30)
மே: தாரமங்கலத்தில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா நகரக் கழக சார்பில் நடந்தது. கொளத்தூர் மணி சிறப்புரை (மே 25)
தீவட்டிப்பட்டி கோயில் திருவிழாவில் ஜாதி வன்முறைக் கலவரம்; உண்மை அறியும் குழுவில் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி உள்ளிட்டத் தோழர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டனர். (மே2)
சென்னை தலைமைக் கழகத்தில் நிமிர்வோம் வாசகர் வட்டத்தில், சுகுணா திவாகர், ரவிபாரதி சிறப்புரையாற்றினர். (மே 19)
பார்ப்பன எச்சில் இலையில் உருளும் கோயில் சடங்கை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கிய பார்ப்பன நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கொளத்தூர் மணி கடிதம் எழுதினார்.
சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகத்தை இராம.இளங்கோவன் திறந்து வைத்தார். (மே26)
மடத்துக்குளத்தில் கழக பயிலரங்கம், இரண்டுநாள் சிறப்புடன் நடந்தது. (மே 21,22)
ஜூன்: திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. சிறப்புரை : கொளத்தூர்மணி, பால்.பிரபாகரன், கலைச்செல்வன். (ஜூன் 11,12)
பாளையங்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஜாதி மறுப்பு இணையருக்கு அடைக்கலம் தந்ததற்காக ஜாதி வெறியர்கள், கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர். கொளத்தூர் மணி கழக சார்பில் கண்டனம் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான துணைவேந்தரைப் பணி நீக்கம்செய்ய வேண்டும் என்று கொளத்தூர் மணி அறிக்கை விடுத்தார்.
தாரமங்கலத்தில் கழகப் பொதுக்கூட்டம், கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார். கழகத் தலைவரின் பிறந்தநாளை ஒட்டி சென்னை, திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் 30 பேர் ‘உடற்கொடை’ அறிவித்தனர். தங்கள் இறப்புக்குப் பிறகு உடலை மருத்துவமனைக்கு அளிக்க முன்வந்தனர். (ஜூன் 20)
பாளையங்கோட்டை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து ராசிபுரம் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொளத்தூரில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா கழகக் குடும்ப விழாவாகக் கொண்டாடப்ப்பட்டது. (ஜூன் 23)
அஞ்சல் சலுகை ரத்துக் காரணமாக ஜுலை 14 முதல் செப்டம்பர் 07 வரை புரட்சிப் பெரியார் முழக்கம் அச்சிதழாக வெளிவரவில்லை. இணைய இதழாக வெளிவந்தது.
ஜூலை: கோவை மாவட்டக் கழக சார்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு; கொளத்தூர் மணி, பால்.பிரபாகரன், சிற்பி இராசன் பங்கேற்பு. (ஜூலை 14)
விருதுநகர் அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம். பால்.பிரபாகரன், மணிஅமுதன் சிறப்புரை. (ஜூலை 15)
கழகத் தலைமைக்குழு சென்னையில் கூடியது. (ஜூலை 19)
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லம் சென்று கொளத்தூர் மணி ஆறுதல். (ஜூலை 20)
ஆகஸ்ட் : தலைமைக்குழு தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை உருவாக்கியது. அதன்படி கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஆகஸ்ட் 04 தொடங்கி 24ஆம் தேதிவரை மாவட்டம் தோறும் கழக நிர்வாகிகளைச் சந்தித்தனர். சென்னையில் தொடங்கி தூத்துக்குடியில் நிறைவடைந்தது.
செப்டம்பர் : மேட்டுப்பாளையத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கூட்டம். சிற்பி இராசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தினார். பொருளாளர் துரைசாமி சிறப்புரை.
நிமிர்வோம் வாசகர் வட்டம் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் நடந்தது. குன்றக்குடி அடிகளார் நினைவு உரையை விடுதலை இராசேந்திரன் நிகழ்த்தினார். ஜெயப்பிரகாசு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு உரை நிகழ்த்தினார். (செப் 29)
மேட்டூரில் காவல்துறையைக் கண்டித்து கழகப் பொதுக்கூட்டம் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் திருமூர்த்தி கண்டன உரை. (செப் 4)
கல்வி உரிமைக் கோரி சேலத்தில் கழக மாணவரணி – இளைஞரணி இணைந்து ஆர்ப்பாட்டம், கொளத்தூர் மணி சிறப்புரை (செப் 10)
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாவட்டக் கழக – மாணவரணி – இளைஞரணி ஆர்ப்பாட்டம். (செப் 10) விடுதலை இராசேந்திரன், பிரின்சு கஜேந்திரபாபு சிறப்புரை.
தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் கழகம் புதியக் கல்விக் கொள்கைத் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
சென்னையில் ‘பெரியார் அன்றே எச்சரித்தார்! என்ற தலைப்பில் திருவல்லிக்கேணியில் நடந்தக் கூட்டத்தில் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரை (செப் 21)
குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் – வாகனப் பேரணி. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி, கொளத்தூர் மணி சிறப்புரை.
அக்டோபர் : சேலம் அருகே பூசநாயக்கனூரில் வன்னிய ஜாதிவெறியர்கள் அருந்ததியர்கள் வீட்டைச் சூறையாடினர். கழகத் தோழர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய்து அறிக்கை விடுத்தனர்.
அரசு தொலைக்காட்சி நடத்திய இந்திமாத விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ‘திராவிட நல் திருநாடு’ வரிகள் தவிக்கப்பட்டதைக் கண்டித்து கண்டனங்கள் வெடித்தன. அந்த வரிகளை அஞ்சல் அட்டையில் அச்சடித்து ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தைக் கழகம் நடத்தியது. சென்னை, திருப்பூர், தேனி, மதுரையில் ‘அஞ்சல் அட்டைகள்’ ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. பொள்ளாச்சியில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒன்றிய ஆட்சியின் திட்டத்தை பரப்புரை செய்ய வந்த ஆளுநர் ரவியை எதிர்த்து சேலத்தில் கழக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
ஈரோட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க வேண்டும் என்று அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எடப்பாடியில் கழக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கூட்டம், கொளத்தூர் மணி சிறப்புரை. (அக் 23)
திருச்சியில் விடுதலை இராசேந்திரன், ஓவியா எழுதிய நூல்களை மலிவு விலைப் பதிப்பாக நன்செய் பதிப்பகம் வெளிட்டது. வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. சிறப்புரை கொளத்தூர் மணி.
கொடைக்கானலுக்கு வந்த ஆளுநர் ரவிக்கு திண்டுக்கல் மாவட்டக் கழகம் கருப்புக் கொடி. (அக் 23)
நவம்பர் : அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிலையங்களில் மதப்பிரச்சாரம் செய்வதை எதிர்த்து சென்னையில் முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு அளிக்க தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவெடுத்தது. திருவல்லிக்கேணி கழகப் படிப்பகத்தில் இருந்து மனுவை அஞ்சல் வழியாக அனுப்ப அஞ்சலகம் புறப்பட்ட கழக மாணவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் நாள் முழுவதும் அடைத்து வைத்து இரவு 8 மணிக்கு மேல் விடுதலை செய்தனர். (நவம்பர் 5)
பேராவூரணியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும், மாணவரணி கலந்துரையாடலும் நடந்தது. பால்.பிரபாகரன் சிறப்புரை.
1957 அரசியல் சட்ட எரிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் சென்னை, பழனி, சேலம், மேட்டூர் மற்றும் கோவையில் நடந்தது. (நவம்பர் 26)
கொளத்தூர் அருகே விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற புலியூரில் மாவீரர் நாள் எழுச்சியுடன் நடந்தது. தோழர் தியாகு, அற்புதம்மாள் சிறப்புரையாற்றினர். (நவ 27)
தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நங்கவள்ளியில் நடந்தது. (நவம்பர் 30) கொளத்தூர் மணி பங்கேற்றார். சென்னை, சேலம், பேராவூரணி, திருப்பூர், ஈரோடு, கோவை, தஞ்சையில் இருந்து மாணவர்கள் பங்கேற்பு.
டிசம்பர் : நங்கவள்ளியில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. கொளத்தூர் மணி, பிரபாகரன், சிவகாமி வகுப்புகளை எடுத்தனர். (டிசம்பர்
சட்ட எரிப்பு வீரர்களுக்கு வீரவணக்கக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. அய்யனார் சிறப்புரை (நவம்பர் 26)
சென்னை பல்லாவரத்தில் ஜாதி ஒழிப்பு – மாவீரர் நாள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. சிறப்புரை விடுதலை இராசேந்திரன். (டிசம்பர் 14)
டிசம்பர் 20 அன்று தலைமைக்குழுவும், 21 அன்று செயலவையும் மேட்டூரில் கூடியது.
கழகம் எதிர்ப்பு; நாமக்கல் வேட்பாளர் மாற்றப்பட்டார்
ஈரோட்டில் கழக செயலவைக் கூடி தி.மு.க. அணியை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. (மார்ச் 27) நாமக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி (கொ.ம.தே.க.) வேட்பாளரின் ஜாதிவெறிப் பேச்சைக் கழகம் கண்டித்து வேட்பாளரை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது. வேட்பாளர் உடனே மாற்றப்பட்டார். முதல் குரலைக் கழகமே கொடுத்தது.
புரட்சிப் பெரியார் முழக்கம் 02012025 இதழ்