சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ‘சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தத் திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டுக் கடந்த பிப்.10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறியும் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து சேலம் ஜலகண்டபுரம் காவல்துறை அந்த மனுவை நிராகரித்தது.

இதை எதிர்த்தும், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பிப்ரவரி  26 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, அடிப்படை போராட்ட உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வரும் மார்ச் 3ஆம் தேதி, சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி நேரில் ஆஜாராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி தானாபதியூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றவுள்ளார்.

பெரியார் முழக்கம் 29022024

You may also like...