தலையங்கம் – ராமரை புறக்கணித்த தமிழ்நாடு!

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதால் ராமராஜ்ஜியமே அமைத்துவிட்டதைப் போல சங்கிகள் மிதக்கிறார்கள். ராமர் கோயில் குடமுழுக்கு நடந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றுங்கள், வழிபடுங்கள் என்றெல்லாம் பாஜகவினர் நாடு முழுக்க மக்களிடையே பரப்புரை செய்தார்கள். நாடு முழுக்க ராமரை வைத்து அரங்கேறிய கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாடு முழுக்க பல இடங்களில் அன்றைய தினம் கோயில்களுக்கு சென்ற பக்தர்களின் கைகளில் ராமர் படங்களையும், அயோத்தி பிரசாதம் என்ற பெயரில் ஒன்றையும் வலிந்து திணித்திருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் அரைநாள் விடுமுறை அளித்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அன்று அரசு விடுமுறை. உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று, இந்துக்கள் யாராவது இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டது. போர்க்காலங்களில் கூட உலகில் எங்கும் மருத்துவமனைகள் மூடப்படுவதில்லை. ஆனால் ராமர் கோயில் திறப்புக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் அரைநாள் விடுமுறை என அறிவித்து, மக்களிடம் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அம்முடிவை கைவிட்டனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே விடுமுறையில்தான் இருப்பதால் இங்கே எந்த சர்ச்சையும் எழவில்லை.

ராமர் கோயிலுக்காகவும், பிரசாதம் தயாரிப்பதற்காகவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பெறப்பட்ட நன்கொடையை திருப்பிக் கொடுத்த அவலமும் சில மாநிலங்களில் நடந்திருக்கிறது. இந்தியா முழுவதும் ராமர்… ராமர் என்று ஒலித்துக்கொண்டிருக்க,  தமிழ்நாடு மட்டும் அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதுபோல் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலும் கூட 90% காட்சி ஊடகங்களில் அன்றைக்கு அயோத்தி அவலத்தை நேரலை செய்துகொண்டிருந்தார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை, எல்.முருகன் என பெரிய பட்டாளமே ராமரை வழிபடுங்கள் என்றெல்லாம் கூவிக் கூவி இந்துத்துவ வியாபாரம் செய்து பார்த்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் நேரலைகளையும் கண்டுகொள்ளவில்லை, நேரில் கூவியவர்களையும் பொருட்படுத்தவில்லை.

பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் ஒருபோதும் இந்துக்களின் வழிபாட்டுச் சின்னம் ஆகாது, அது அவமானச் சின்னம் என்ற புரிதல் தமிழ்நாட்டு மக்களிடம் அப்பட்டமாக வெளிப்பட்டதைக் கண்டு சங்கிகள் மனம் புண்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இந்தியா முழுமைக்கும் ராமர் கடவுளாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அவரை வைத்திருக்கும் இடமே வேறு. அதை மீண்டுமொரு பாஜகவிற்கும் பாஜகவுக்கு துணைபோகும் தமிழ்நாட்டு செய்தி ஊடகங்களுக்கும் அடித்துச் சொல்லியிருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்றால், பார்ப்பனர்கள் ஆகமத்தை தூக்கிக்கொண்டு வருவார்கள். ஆனால் அயோத்தியில் கட்டி முடிக்கப்படாத கோயிலை எப்படித் திறக்கலாம்? கோபுரம் இல்லை, கலசம் இல்லை…ஆகமத்துக்கு அடுக்குமா என்று எந்த பார்ப்பனரும் கேட்கவில்லை. அவர்களுக்கு நன்றாகத் தெரியும், அயோத்தி ராமர் கோயில் என்பது பாஜகவின் அரசியல் முதலீடு. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுக்கு இருக்கும் ஒற்றை ஆயுதம் அயோத்தி ராமர் கோயில்.

 

10 ஆண்டுகால ஆட்சியில் சாதனை, சரித்திரம் என்று மக்களிடம் பேசுவதற்கு எதுவுமே இல்லாத கையறு நிலையில் இருக்கும் நரேந்திர மோடி, இந்துக்களே இதோ பாருங்கள்… ராமர் கோயிலை எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டியிருக்கிறோம் என்று சொல்லியாவது வாக்கு கேட்கலாம் என்ற முயற்சிதான் இது. அதனால்தான் சங்கராச்சாரிகள் சூத்திரரான மோடி எப்படி ராமர் சிலையை நிறுவலாம்? நாட்டுக்கே பெருங்கேடு விளையும் என்று இழிவுபடுத்தியபோதும் நரேந்திர மோடி மவுனம் காத்தார்.

சங்கராச்சாரிகளின் எதிர்ப்புக்கு அடிபணிந்து, ராமர் கோயில் அறக்கட்டளையும் திறப்பு விழாவுக்கு 4 நாட்கள் முன்னதாகவே குழந்தை ராமர் சிலையை அவசர அவசரமாக கருவறைக்குள் நிறுவி, 4 மணி நேரம் பூஜை, புனஸ்காரங்களையும் செய்துவிட்டனர். ராமர் சிலையின் கண்களை மட்டும் துணியால் கட்டிவைத்து, ஜனவரி 22-ஆம் தேதி நரேந்திர மோடியை வைத்து துணியை மட்டும் திறந்துவிட்டனர். அதற்கு உயிரூட்டும் நிகழ்வு என்றும் பெயர் சூட்டினர்.

மராட்டிய மாநிலம் புனேவில் பாபர் மசூதியை நினைவுகூறும் விதமாக அன்றைய தினம் மாணவர்கள் அமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது. அந்த போராட்டத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் பதாகையை எரித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள். ஆவணப் படம் திரையிட கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ராமர் கோயிலுக்கு எதிராகப் பேசுவதோ, போராட்டத்தில் ஈடுபடுவதோ கூடாது என்று சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றன. ராமர் கோயில் திறப்புக்கே இத்தனை அடக்குமுறைகள் என்றால், ராமராஜ்ஜியம் என்னென்ன அடக்குமுறைகளை கொண்டிருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஏற்கெனவே நரேந்திர மோடி ஆட்சியும் ஒரு மினி ராமராஜ்ஜியமாகத்தான் 10 ஆண்டுகளை கழித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒன்றிய அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கு அஞ்சி, ராஜஸ்தானின் கோட்டா நகரில் கடந்த ஓராண்டில் மட்டும் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மணிப்பூர் கலவரத்தில் 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர் வன்கொடுமைகள், கொலைகளுக்கெல்லாம் கணக்கே இல்லை.

அதுமட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் என மோடி ஆட்சியில் மக்களுக்கு இழப்புகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதையெல்லாம் அயோத்தி கோயில் பூர்த்திசெய்துவிடாது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல, மக்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது அயோத்தி ராமர் கோயில். அதை மக்கள் வெகுவிரைவில் உணர்த்தத்தான் போகிறார்கள்.

பெரியார் முழக்கம் 25012024 இதழ்

You may also like...