பெண்கள், தலித் – பழங்குடியினருக்கு அர்ச்சகர் பதவிகள் : காங்கிரஸ் ஆட்சியின் மகத்தான சாதனை
அனைத்து ஜாதியினருக்கும் ஆண்டவரிடம் நெருங்கி அர்ச்சகர் தொழிலை செய்யும் உரிமை வேண்டும் என்று தமிழ்நாட்டில் எழுந்த குரல் இன்றைக்கு வடமாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின், அம்மாநில காங்கிரஸ் கட்சியினுடைய முதல்வர் அசோக் கெலட் மிகப்பெரும் சமூகப் புரட்சி ஒன்றை செய்திருக்கிறார். ராஜஸ்தானில் தேவஸ்தான் என்னும் பெயரில் அறநிலையத்துறை அங்கு செயல்படுகிறது. கோவில் நிர்வாகங்கள் இந்த தேவஸ்தான் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இதில் அர்ச்சகர் பதவிக்கான நியமனத்திற்கான விண்ணப்பங்கள் 2014 ஆம் ஆண்டு கோரப்பட்டன. ஒன்பது வருடங்களுக்குப்பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதற்கப்பிறகு தற்போது காங்கிரஸ் ஆட்சி 17 அர்ச்சகர்களை நியமித்து இருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்று சொன்னால், அந்த 17 அர்ச்சகர்களில் 8 பேர் பெண்கள் தலித் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான். பெண்களும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை ராஜஸ்தான் மாநில ஆட்சி செய்துகாட்டி இருக்கிறது. தலித் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகியிருக்கிறார்கள். இதற்கு அம்மாநில பார்ப்பனர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் உருவாகியிருக்கிறது. சர்வ பிராமண மகாசபையின் தலைவரான முனேஷ் சர்மா இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டி இருக்கிறார்.
பார்ப்பனர்களின் மற்றொரு அமைப்பான விப்ரா பவுண்டேஷன் என்னும் அமைப்பு ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.
இதற்கெல்லாம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் பணிந்து போகத் தயாரில்லை, தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார். அரசு விதிமுறைகளின்படி சமஸ்கிருதம் அறிந்தவர்களை அர்ச்சகர்கள் ஆக்கியிருக்கிறோம். சமஸ்கிருதம் அறிந்தவர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களும் இருக்கிறார்கள், பெண்களும் இருக்கிறார்கள் எனவே அவர்களை அர்ச்சகர்கள் ஆக்கியிருக்கிறோம். இதில் என்ன தவறு என்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார்.
ராஜஸ்தானில் அரசர்களின் ஆட்சிகாலத்தில் ஆம்பர் கோட்டையில் ஒரு துர்கா கோவில் இருந்திருக்கிறது. அங்கே ஒரு பெண் அர்ச்சகர் இருந்திருக்கிறார். ஆனால், தலித் சமுதாயத்தில் இதுவரை யாரும் அர்ச்சகராக ஆக்கப்படவில்லை. இப்போது ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி தலித் மக்களையும், பெண்களையும் அர்ச்சகர்கள் ஆக்கி ஒரு பெரும் புரட்சியை செய்து முடித்து இருக்கிறது. ராஜஸ்தான் ஆட்சியை பாராட்டுவோம்.
பெரியார் முழக்கம் 06072023 இதழ்