காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காயாம்பட்டியில் ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கண்ணன் எனும் இளைஞர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது – காயாம்பட்டியை சார்ந்த ஆதிக்க ஜாதி வெறியர்கள் 7 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி “நீயெல்லாம் வண்டில வேகமா போறியா” என சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரை நிர்வாணப்படுத்தி அவரது மனைவி மீதும் பாலியல் சீண்டல் செய்திருக்கின்றனர்.
இத் தகவலை அறிந்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் மக்களை சந்தித்து உண்மை தகவலை அறிந்து பாதிக்கப்பட்ட சமூக மக்கள் 26 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடந்து 27-1-23 அன்று தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும் – பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தும் ஜாதி வெறியர்களையும் கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் – மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மா.பா. மணிஅமுதன் தலைமை தாங்கினார். தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த. பாண்டியன், அதிமமுக பொதுச் செயலாளர் பசும் பொன் பாண்டியன், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மகஇக மண்டல பொறுப்பாளர் சிவகாமு உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினார்கள்.
பெரியார் முழக்கம் 02022023 இதழ்