ஆதினங்களின் பல்லக்கு சவாரியை தடை செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது
சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக சைவ மதங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதீனங்கள் இன்றைக்கு அந்த பணியை விட்டுவிட்டு இந்துத்துவாவின் தூதர்களாக மாறிப் போய் இருக்கிறார்கள். மோடிக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நேரு சென்று செங்கோல் ஒன்றை ஆதீனங்கள் பரிசாக அளித்து இருக்கின்றன. அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாக தரப்பட்டது என்று ஒன்றிய ஆட்சியும், அமித்ஷாவும் கட்டிவிட்ட கற்பனைகளை திருவாடுதுறை ஆதீனம் இந்து நாளேட்டில் அளித்த பேட்டியில் மறுத்துவிட்டார். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும், எதற்காக மவுண்ட் பேட்டனிடம் போய் செங்கோலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆக பாஜகவின் பொய்யான கதை வசனம் கிழிந்து தொங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்த மடாதிபதிகள் மோடியின் ஆட்சி தான் இந்த காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும் என்று அரசியலும் பேசி இந்துத்துவாவின் பரப்புரையாளர்களாக மாறிப்போய் இருப்பதோடு தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் என்ற தன்னை பல்லக்கில் வைத்து சுமக்கின்ற ஒரு நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. பல்லக்கில் ஆதீனம் உட்கார்ந்திருப்பார், அவரை தோளில் சுமந்து மனிதர்கள் தெருத்தெருவாக போக வேண்டும். மனிதனை மனிதர்கள் சுமக்கின்ற இந்த இழிவிற்கு பல அமைப்புகள், பிற்போக்குவாதிகள், இடதுசாரிகள் ஆதரவு தருகிறார்கள்.
ஆனால் இந்த மடாதிபதிகள் தங்களை தோளில் சுமந்த கொண்டு போக வேண்டும் எதிர்பார்ப்பது என்பது மனித உரிமைக்கு மனித சமத்துவத்திற்கு மனித சுயமரியாதைக்கு எதிரான ஒன்றாகும்.
வள்ளுவர் கூறுகிறார்,
அறுத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
ஒருவன் பல்லக்கில் அமர்ந்து கொண்டிருப்பதும், மற்றவர்கள் அவர்களை சுமந்து கொண்டிருப்பது தான் அறம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், இது திருக்குறளில் திருவள்ளுவர் எழுதி வைத்த கல்வெட்டு போன்ற மனித உரிமை சாசனம்.
தமிழைப் பரப்புகின்ற சைவ மடாதிபதிகள் குறைந்தது பல்லக்கு சவாரியை தவிர்க்க வேண்டாமா?
தருமபுரம் மடத்தின் ஆதீனம் நடத்தும் மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கும் இழிவான நடவடிக்கையை, மனித உரிமை மீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (10.6.23) சனி மாலை 6.00 மணியளவில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் அனைத்து கட்சிகளின் சார்பாக நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம். ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் P.சீனிவாசன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் இணை செயலாளர் S.துரைராஜ், தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் AITUC யின் மாவட்ட செயலாளர் ராமர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் வழக்குரைஞர் வேலு.குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் இணை அமைப்பாளர் சந்திரசேகர், தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் இரா.முரளிதரன் உள்ளிட்டோர் ஆதீனத்தின் போக்கை கண்டித்து உரையாற்றினார்கள்.
தமிழக அரசு தருமபுரம் ஆதீனம் கடைப்பிடித்து வரும் மனித உரிமை மீறலை தடை செய்ய வேண்டும் என்றும் தர்மபுரம் ஆதீனம் வசம் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்து மக்களிடம் வழங்க வேண்டும் என்றும், ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் கடைப்பிடித்து வரும் சனாதன கொள்கையை அமல்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றது என்றும் கண்டன உரையாற்றினார். 50 தோழர்கள் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறையில் இருந்து சுமார் 10 கிமீ தூரம் உள்ள குத்தாலம் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு நள்ளிரவு இரண்டு மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 15062023 இதழ்