பாஜகவின் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்
ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் நாட்டுக்காக பதக்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்பதை தங்களது இலக்காக கொண்டு விளையாடி வருகின்றனர். அதற்காக பல்வேறு தியாகங்களையும் விலையையும் கொடுத்து போராடுகின்றனர். ஒலிம்பிக்கில் தங்களது நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்று சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உலக நாடுகள் பல ஆயிரம் கோடியை செலவு செய்து வருகிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என்பது மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு. இவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளில் 7 பேர் இவர் மீது டெல்லி கண்ணா ப்ளேஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாஜக எம்பி என்பதால் வழக்கம்போல் புகாரைக் கிடப்பில் போட்டது டெல்லி காவல்துறை. நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரின் முன்பு அமர்ந்து ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் சாக்சி மாலிக், தினேஷ் போகத், சங்கீதா போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் முன்னின்று நடத்தினர். இவர்களது தலைமையின் கீழ் மல்யுத்த வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு போராடினர்.
கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவின்போது, ஜந்தர் மந்தரில் இருந்து மல்யுத்த வீரர்கள் கூட்டமாக புறப்பட்டு நாடாளுமன்றத்தினை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். டெல்லி காவல்துறையினர் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்த விதம் நாடு முழுவதும் பதைபதைப்பை ஏற்படுத்தியது. பத்மஸ்ரீ என உயரிய விருதால் கவுரவிக்கப்பட்ட பஜ்ரங் பூனியாவை தரதரவென்று ரோட்டில் இழுத்துச் சென்று வேனில் தள்ளினர். அர்ஜுனா விருது முதல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வரை வாங்கிய மற்ற வீரர்களுக்கும் இதே நிலைதான். போராடியவர்கள் மீது உடனடியாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது டெல்லி காவல்துறை, ஆனால் பாலியல் குற்றசாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் மீது மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் போக்கு ஒரு புறம் தொடர்கிறது. அதனாலயே உலக அரங்கில் நமது நாட்டின் மானம் பஞ்சாய் பறக்கிறது. தற்போது உலக மல்யுத்தக் கூட்டமைப்பு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே எச்சரிக்கை விடுத்துள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் நியாயமானது என்று இந்த கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இது போராடும் வீராங்கனைகளுக்கு கிடைத்துள்ள தகுதியான அங்கீகாரம் என்று உலக நாடுகள் கருதுகின்றனர்.
மேசையில் உறங்கும் விசாரணை அறிக்கை;
வீரர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண்பது போல் ஒரு பிம்பத்தை ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உருவாக்கினார், பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து விசாரிக்க மேரிகோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. அதன் பிறகு அறிக்கையையும் விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கையின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அறிக்கை இன்று வரை அமைச்சகத்தின் மேசையில் தூங்கிக் கொண்டிருக்கிறது.
பெரியார் முழக்கம் 08062023 இதழ்