கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்களின் முன்னேற்றமும் அவசியமான படியால் அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும் அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு ஒவ்வொரு தொழிலும் கிடைக்கும் இலாபத்தில் அந்தந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது. இது மாநாட்டுத் தீர்மானம்.

இதை கடைசி வரைக்கும் பெரியார் வலி யுறுத்தி வந்தார். “நீங்கள் பணம் போட்டால் நான் என் உழைப்பைப் போடுகிறேன். நாம் இரண்டு பேரும் பங்காளிகள் என்று எப்போதாவது கம்யூனிஸ்டுகள் சொல்லி யிருக்கிறீர்களா” என்று பெரியார் கேட்டார். “அவர்களுக்கு இலாபத்தில் வரும் பங்கை பிரித்துக் கொடு” என்றார்.

பெரியாருக்கு பெரியார் என்று யார் பட்டம் கொடுத்தது என்று பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சமூக முன்னேற்றத்திற்கு சமூக விடுதலைக்கும் சுயமரியாதை இயக்க கர்த்தாவாகிய ஈ.வெ.ராமசாமிப் பெரியார் அவர்கள் ஆற்றிய பெரும் பணிக்கு நன்றி பாராட்டுவதுடன் அவர் இவ்வியக்கத்திற்கு தலைமையேற்று நடத்துவதை அவர்பால் பூரண நம்பிக்கை உண்டு என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது என்று செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே கடைசியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 1938இல் பெரியார் பட்டம் வழங்கப்பட்டது என்று கூறிக் கொள்கிறார்கள் ஆனால் 1929-லேயே ராமசாமிப் பெரியாருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

1927 டிசம்பர் கடைசி ‘குடிஅரசு’ இதழில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை நீக்கி ஈ.வெ.ராமசாமி என்று குறிப்பிடுகிறார். நாகர்கோயிலைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர் எம்எல்ஏவாக இருந்தவர். ஆலய நுழைவுப் பற்றி நூலை எழுதியவர். அவர்தான் முதல் முறையாக 1928 தொடக்கத்திலேயே பெரியாரை ராமசாமிப் பெரியார் என்று எழுதுகிறார்.

அதற்குப் பின்னால் 21.7.1929 திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் பெரியார் என்றே அழைத்தனர். 1932 திருச்சி மருத்துவர் குல சங்கத்தார் வழங்கிய உபச்சார பத்திரத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது திராவிடன் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. 1932 கொழும்பு நகரில் ஆதி திராவிடர் சங்கத்தார் வழங்கிய வரவேற்பில் ராமசாமிப் பெரியார் என்றும் கூறப்பட் டிருக்கிறது. எந்தெந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பெரியார் என கூறப்பட்டிருக்கிறது என்பதை ஆனைமுத்து அவர்கள் தனது நூலில் எழுதியுள்ளார்.

நவம்பர் 30ஆம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தான்  பெண்கள் மாநாடு நடைபெறுகிறது. அதில் பெரியார் சிறப்புரையாற்று கிறார். மற்ற பேச்சாளர்கள் எல்லாம் பெண் கள் மட்டும் தான். அப்பொழுது மட்டுமில்லை, பெரியார் நடத்திய அனைத்து பெண்கள் மாநாடுகளிலும் பெண்கள் தான் பேசு வார்கள். பெரியார் இயக்கத்தில் அதைப்பற்றி மட்டுமே தனியாக சொல்ல வேண்டும். கொடி யேற்றி வைப்பது எப்போதும் பெண்ணாகத் தான் இருப்பார், மாநாட்டுத் தொடக்கவுரை எப்போதும் பெண்களாகத்தான் இருப்பார்கள். சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் இப்படித்தான் நடந்தது.

“இந்தியாவில் இதுவரை தோன்றிய தலைவர்கள் செய்யாமல் போன வேலைகள் இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி செய்து வருவதாலும். தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் இல்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்று சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டும் என்று இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள் கிறது”. இதுதான் பெண்கள் மாநாட்டுத்  தீர்மானம். இதைத் தான் அந்த மாநாட்டில் பெரியார்  பட்டம் கொடுத்தார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடர் இயக்கத்தினுடைய தொடக்கம் பண்பாட்டு அமைப்பாக சுயமரியாதை இயக்கமும். அரசியல் அமைப்பாக நீதிக் கட்சியும் இருந்தது. அவர்கள் கொள்கைப் பிரகடனம் என்ற ஒன்றை அறிவித்தார்கள். அதில் ஜாதி என்பது கூடாது என்பதை கூறுகின்றார்கள். பழங்காலம் தொட்டு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் இந்துக்களிடையே உயர்ந்த ஜாதி என்று கருதும் தன்மை, நிலையான நம்பிக்கை இவற்றை நூல் வழியாகவும். வாய்மொழியாகச் சொல்லி தாங்களே ஏனையோரை விட உயர்ந்தவர்கள். தாங்களே கடவுளின் பிரஜைகள் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர்.

செங்கல்பட்டு மாநாட்டில் மற்றொரு தீர்மானம் போட்டார்கள். தாய்மொழி மற்றும் அரசு மொழியான ஆங்கிலம் ஆகிய இரண்டுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்றும் பிறமொழிக்காக அரசு எந்த செலவும் செய்யக் கூடாது என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

அதைத் தொடர்ந்து பல மாநாடுகள் நடக்கிறது. சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் சங்கீத மாநாடு என்று ஒன்று நடக்கிறது. இந்த மாநாடு பார்ப்பனரல்லாத இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நடைபெற்றது. அவர்களுக்கு தனியாகவும் சில நேரம் ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. அதில் சங்கீத மாநாடு என்ற ஒன்றை அறிவிக்கிறார். பார்ப்பனரல்லாத இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பாட வேண்டும் என்று ஒரு வேண்டுகோள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருந்த ஒருவரின் தலைமையில் அந்த மாநாடு நடைபெறுகிறது. அப்போது குடிஅரசு இதழ் தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோளைத் தொடர்ந்து வைத்துக் கொண்டு வருகிறது.

தயவுசெய்து உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கச்சேரி வைத்தால் நம் ஆட்கள் கீழ்கண்ட துறைகளில் இருக்கிறார்கள் அவர்களின் பெயர்ப் பட்டியலைப் போட்டு இவர்களை அழையுங்கள் என்று கூறுகிறார். அவர் களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறார், நீங்கள் பாட்டுப் பாடும் போது எல்லோரையும் எழுந்து நின்று கும்பிட்டு விட்டு பாட்டு பாடக் கூடாது. அமர்ந்தே பாட வேண்டும்.

பார்ப்பான், பார்ப்பனரல்லாத கலைஞர்கள் பாடினால் சொல்லுவான் பாட்டில் சுதி கொஞ்சம் குறைவாக உள்ளது என்று சொல்லுவான்; பார்ப்பனராக இருந்தால் ஒன்றும் பாடவில்லை என்றாலும் பேஷ் பேஷ் என்று தலை ஆட்டுவான். நீங்கள் துணிச்சலாக இருங்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள் சுயமரியாதையுடன் இருங்கள் வருகிறவனுக்கெல்லாம் எழுந்து நின்று வணக்கம் சொல்லாதீர்கள். குறிப்பாக இடுப்பில் துண்டை கட்டாதீர்கள் என்று சொல்லிவிட்டு தோளில் துண்டை போட்டுக் கொள் என்கிறார்.

தோளில் துண்டை போடுவதற்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது.

கானாடுகாத்தான் என்ற பகுதியில் சண்முகம் என்கிறவர் ஒரு பெரிய பணக்காரர். நாட்டுக் கோட்டை செட்டியார். சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளரும் அவர்தான். சேரன்மாதேவி குருகுலத்தை தொடங்குவதற்காக 31 ஏக்கர் நிலத்தை தனி ஒருவராக வாங்கிக் கொடுத்தவர். அந்த அளவு ஒரு பணக்காரர். அவர் வீட்டில் தான் அடிக்கடி சந்திப்புகள் நடக்கும். அவர் ஒரு மராட்டியப் பெண்மணியை சுயமரியாதை திருமணம் செய்தார்.

புரோகித ஒழிப்பு இயக்கம் என்ற ஒன்றை பெரியார் தொடங்கினார் அதில் அவரும் ஒரு உறுப்பினர். அவருடைய மகள் தான், மேடையில் திருமணம் நடக்கும் பொழுது தாலி கட்ட வருகிற மாப்பிள்ளையைப் பார்த்து “கட்டாதே நிறுத்து, நான் தாலி கட்டிக் கொள்ள மாட்டேன், மாலையை மட்டும் மாற்றிக் கொள்” என்கிறார்.

சபாஷ் பார்வதி என்று பாராட்டி பெரியார் எழுதியிருப்பார். அவர் சொல்கிறார் ஒன்று தாலி கட்டக்கூடாது, இல்லையேல் நானும் ஒரு தாலி கட்டுவேன் என்று கூறுகிறார் இது நடந்தது 1935 ஆம் ஆண்டு. வைசு சண்முகம் செட்டியார் அவர்களின் மகள் தான் அவர்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

 

You may also like...