சுவரெழுத்துப் பணியில் உற்சாக மூட்டிய நிகழ்வு

15.3.2023 மதியம் சூலூர் வழி பல்லடம் சாலையில் ஒரு சுவரில் சுவரெழுத்து விளம்பரம் எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள்  சென்று கொண்டே இருந்தன. அப்படிச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் சுவரெழுத்து விளம்பரத்தைக் கடந்து சென்றது.  மீண்டும் திரும்பி வந்தது. நீங்கள் திக வா என்றார்; திவிக என்றோம்.

“ஓகே ஓகே நீங்கள் எங்கள் அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமைக்காக தொடர்ந்து போராடறீங்க; துணை நிற்கறீங்க; கொஞ்ச நாளுக்கு முன்னால் கூட உங்க  சென்னை தோழர்கள் எங்கள் பொறுப்பாளர் அரங்கநாதனை மேடையில் ஏற்றி பாராட்டுனாங்க. ஆர்ப்பாட்டத்திற்கு கூப்பிட்டு பேச வைத்தீர்கள்; தொடர்ந்து எங்களுக்காக போராட்டங்களை நடத்துறீங்க. உங்கள் இதழில் எங்கள் உரிமைகளைப் பற்றி எழுதறீங்க; எனக்கும் இதழ் அனுப்புங்க; சந்தா தருகின்றேன்” பெருமிதத்துடன் கூறினார்.

“நான் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவன். இப்போ 2 அர்ச்சகரை நீக்கம் பண்ணியிருக்காங்க, கொடுமை. ஆனா அந்த வழக்கில் நாங்க தான் ஜெயிப்போம். முதல்வர் ஸ்டாலின்  உறுதியாக உள்ளார்” என்று பேசிவிட்டுச் சென்றவர் மீண்டும் திரும்பி வந்தார்.

சுவரெழுத்தாளர் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் தமிழ்ச்செல்வி, உக்கடம் கிருஷ்ணன், நிர்மல் குமாரை உரிமையுடன் அழைத்துச் சென்று இளநீர் குடிங்க என்று வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இரண்டு நாட்களாக கடும் வெயிலில் சுவரெழுத்துப் பணி நடந்து வருகிறது; வெயில் சுட்டது; சோர்வும் அவ்வப்போது வந்தது. ஆனால் தோழர் வாங்கிக் கொடுத்த இளநீர் குளிர்ச்சியைக் கொடுத்தது; புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

தகவல் : நிர்மல்

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...