சைவம் – வைணவம்
சைவம், சிவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்கிற வார்த்தைகளும் ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழக்கை சுலபத்தில் தள்ளிவிட முடியாது மற்றும் சைவக் கடவுள்கள் பெயரும் கடவுளின் பெண் சாதிப் பிள்ளைகளின் பெயரும் அனேகமாய் முழுதும் ஆரிய மொழிப் பெயர்களே தவிர வேறில்லை. மற்றும் அப்பெயர்களுக்கு ஏற்ற காரணங்களும் அக் காரணங்களுக்கு ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட கதைகள் தாம் ஆதாரமேயொழிய வேறில்லை மற்றும் அப் பெயர்களுக்கும் கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பதும் பெரிதும் ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்த்ததாக சொல்லப்படுபவைகளை அல்லாமல் வேறு இல்லை.
சைவம் என்கிற பெயரும், சிவன் என்றால் அன்பு என்கின்ற வியாக்கியானமும் கூட ஆரிய கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங்களையும், வேள்விக் கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும் ஒழிக்கவும் வந்த புத்த இயக்கத்தை எதிர்த்து அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்ட தே தவிர மற்றபடி அச் சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளுக்கும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கோ எவ்விதச் சம்பந்தமும் இருப்பதாகவோ இதுவரை எவ்வித ஆதாரமும் வெளிப்படுத்தபடவில்லை.
பெரியார் முழக்கம் 08062023 இதழ்