தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!
மே 4 ஆம் தேதி வெளிவந்த கூiஅநள டிக ஐனேயை நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். வழக்கமான உளறல்கள் தான் இந்த பேட்டியிலும் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டை சீண்டி பார்த்திருக்கிறார். திராவிட மாடல் என்ற ஒன்று கிடையாது. அது காலாவதியான தத்துவம், விரக்தியான மனநிலையில் இருக்கிறவர்கள் அது நீடிக்க வேண்டும் என்பதற்காக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் “ஒரே பாரதம் ஒரே இந்தியா” என்ற கொள்கையின் கீழ் வாழ்கிறவர்கள், இதற்கு எதிரானது தான் திராவிட மாடல். அது காலாவதியாகிவிட்டது என்று அவர் பேசியிருக்கிறார்.
திராவிட மாடலுக்கு எதிராக உருவான சனாதன தர்மத்தைத் தான் தனது கொள்கை என்று இந்த பேட்டியில் உயர்த்துப் பிடிக்கிறார் ஆளுநர் ரவி. ஆக திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது, ஆரிய மாடலான சனாதனம் தான் நமக்கான அடையாளம் என்று பச்சையாக ஆரியப் பெருமை பேசுகிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “காலாவதியானது திராவிடம் அல்ல; ஆரியம் – வர்ணாஸ்ரமத்தைக் காலாவதியாக்கியதுதான் திராவிடம்” என்று சரியான பதிலடி தந்திருக்கிறார்.
சனாதன தர்மம் என்பது ஆரியத்தின் கற்பனை. அவர்கள் சொல்லு கிறார்கள் இந்த உலகம் முழுவதும் சனாதன தர்மமாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகு தான் வெவ்வேறு மதங்களே வந்தன, இந்துக்களுடைய அடையாளம் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது என்றைக்குமே மாற்ற முடியாதது. அதற்கு முடிவும் இல்லை, அழிவும் இல்லை என்று பார்ப்பன பண்டிதர்களாலும், ஆர்எஸ்எஸ் குருக்களாலும் விளக்கம் சொல்லப்படுகிறது.
சனாதனம் என்பது வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. அது உலகின் மிக உயர்ந்த பண்பும் ஒழுக்கமும் கொண்ட ஆரிய இனத்துக்கு உரிமையுடையது என்று சனாதன தர்மம் குறித்து விளக்கும் தர்ம நூல்கள் கூறுகின்றன. அந்த ஆரியப் பெருமைப் பேசும் ஆளுநர் ரவி, சனாதன தர்மத்துக்கு புது விளக்கம் தருகிறார். “அது வர்ணாஸ்ரமத்தைக் குறிப்பது அல்ல; அனைத்து மதங்களையும் மதிப்பதே சனாதன தர்மம்” என்று பொருள் விளக்கம் தருகிறார். சனாதன தர்மம் மட்டுமே உலகம் முழுதும் இருந்தது. பிற மதங்கள் அதற்குப் பிறகு தான் தோன்றின என்று ஒரு பக்கம் கூறி விட்டு, வேறு மதங்கள் தோன்றாத காலத்தில் சனாதன தர்மம் அனைத்து மதங்களையும் மதிக்கச் செய்கிறது என்று கூறுவது பித்தலாட்டம் அல்லவா?
தமிழ்நாட்டு நூலகங்களில் தமிழ் ஆங்கில நூல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. பிற மொழி நூல்களை ஒதுக்கி, ‘மொழி ஒதுக்கல்’ செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். பீகார், குஜராத், உ.பி. மாநில நூலகங்களில் எல்லாம் தமிழ் நூல்கள் வாங்கப்படுகிறதா? தில்லை நடராஜன் கோயிலுக்குள் தேவாரம் பாடுவதையே எதிர்த்த தீட்சதர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் ஆளுநர், அங்கே நடக்கும் தமிழ் மொழி ஒதுக்கலை ஏன் கண்டிக்கவில்லை? கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும் என்று திமிர் பேசும் பார்ப்பனர்களின் மொழி ஒதுக்கலை எதிர்த்து ஏன் பேசவில்லை? கோயில் கோயிலாகச் சுற்றும் ஆளுநர் ரவி, சமஸ்கிருதத்தில் மட்டும் நடக்கும் வழிபாடுகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரே; அதற்கு என்ன பதில்?
தீட்சதர்கள் ‘பால்ய விவாகத்தை’க் காலம் காலமாக தங்கள் குடும்பத்துக்குள் நடத்துவதை சட்ட விரோதம் என்று பேசத் தயாராக இல்லை. மாறாக, தீட்சதர் குடும்ப சிறுமிகளுக்கு இரட்டை விரல் கன்னித் தன்மை சோதனை நடத்தப்பட்டதாக ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அரசு மறுத்து ஆளுநருக்கு கடிதம் எழுதியப் பிறகும், பச்சையாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பேட்டியில் பொய் சொல்கிறார். மயிலாடுதுறை வந்தபோது தனக்கு எதிராகக் கருப்புக் கொடிக் காட்டியவர்கள் தனது கார் மீது கல்லெறிந்ததாகவும் பச்சையாக நான்காம்தர அரசியல்வாதி போல் பேசுகிறார். அவரது பாதுகாப்பு வாகனம் மீது ஒரு கருப்புக் கொடி வந்து விழுந்தது என்பதே உண்மை; இதற்கு வீடியோ பதிவுகள் இருக்கின்றன.
பிரிட்டிஷ் ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சனாதனத்தை சிவாஜி மன்னன்தான் மீட்டெடுத்தான் என்று அபத்தமாக வரலாறு தெரியாமல் உளறியிருக்கிறார். மராத்திய மன்னன் சிவாஜி, 1680 பிப்ரவரி மாதம் 3ஆம் தேதியே இறந்து விடுகிறார். 1773இல் பிரிட்டிஷ் ஒழுங்கு முறைச் சட்டம் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி வந்ததோ 1858இல். தனது மரணத்துக்குப் பின் வந்த பிரிட்டிஷ் ஆட்சியின் சனாதன சீர்குலைவுகளை இறந்து போன சிவாஜி ‘ஆவியாக’ வந்து சரி செய்தார் என்று கூறுகிறாரா?
என்றைக்குமே மாறாத ஒரு கோட்பாடு நிலைத்து நிற்கிற ஒரு கோட்பாடு, முடிவோ அழிவோ இல்லாத ஒரு கோட்பாடு என்ற ஒன்று இருக்க முடியுமா? இது அறிவியலுக்கு உகந்தது தானா? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவரை ஆளுநராக நாம் பெற்று இருக்கிறோமே என்பதற்காக நாம் வெட்கி தலைகுனிய வேண்டி இருக்கிறது.
ஆளுநர்களே உங்கள் உளறல் மூட்டைகளை தமிழ்நாட்டில் அவிழ்த்து விட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும் முகத்தில் கரியை பூசிக் கொள்ளாதீர்கள். திராவிட மாடல் உங்களது கேள்விகளை எதிர்கொள்ளும்! பதிலடி கொடுக்கும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெற்ற திராவிடத்தை – ஆளுநர் பொறுப்பின்றி பேசி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அதிகாரத் திமிருடன் காலில் போட்டு மிதிக்கிறார்.
ஆளுநரே எல்லை மீற வேண்டாம்!
பெரியார் முழக்கம் 11052023 இதழ்