சுயமரியாதை எங்கள் அடையாளம் சனாதனம் எமக்கு அவமானம்

திராவிடர் விடுதலை கழகம் நடத்திய சனாதனத்துக்கு எச்சரிக்கை விடும் இளைஞர் மாநாட்டிலிருந்து (ஏப்ரல் 29, 30 – 2023) சில செய்தித் துளிகள் :

  • மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார், தேர்தல் களத்தில் தனது வெற்றிக்கு வாக்காளர்களிடம் வாக்குகளைச் சேகரித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு நன்றி கூறியதோடு தன்னுடைய அரசியல் கட்சி திமுக என்றாலும் சமுதாய அமைப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் தான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
  • சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பயிற்சி முகாம்களில் ‘உயிர் தோற்றம்’ குறித்து தாம் பேசியதையும் தனது தேர்தல் வெற்றிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்ததை யும் நினைவு கூர்ந்தார்.
  • மேடையில் அமைக்கப்பட்ட பதாகையில் ‘சுயமரியாதை எங்கள் அடையாளம்; சனாதனம் எமக்கு அவமானம்’ என்று ஒரு பக்கத்திலும். ‘பன்முகத் தன்மையை சிதைக்காதே; ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்காதே’ என்ற முழக்கங்கள் மற்றொரு பக்கத்திலும் இடம் பெற்றிருந்தன.
  • கருத்தரங்கில் ‘தீக்கதிர்’ ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், கார்ப்பரேட் சுரண்டல் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து அதானியால் மோடி ஆதரவுடன் நாடு சூறையாடப்படுவதை விளக்கும் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
  • கருத்தரங்குகளில் பங்கேற்றுப் பேசிய கழகத் தோழர்கள் தங்களது தலைப்புக்கு உரிய ஆழமான செய்திகளைத் திரட்டி அற்புதமாகப் பேசியது திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயல் வீரர்களாக இருப்பவர்கள் நல்ல சிந்தனையாளர்களாக பேச்சாளர்களாக இருப்பதையும் அறிந்து பலரும் பாராட்டினர்.
  • மாநாடு துவங்கிய ஏப். 29, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் என்பதால் கவிஞரை நினைவுக் கூர்ந்து கழகத் தோழர் இசைமதி, சங்கே முழங்கு, மக்கள் நலத்திற்கு மதமா? ஆகியப் பாடல்களைப் பாடினார்.
  • கழகக் குடும்பங்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளில் இளம் பெண்கள் சிலம்பு, வாள் வீச்சுப் போன்ற வீர விளையாட்டு களையும் நிகழ்த்திக் காட்டியது அனைவரையும் கவர்ந்தது.
  • மாநாட்டில் கருத்துரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் கழக சார்பில் விருதுகள், நூல்களை கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.
  • இரண்டாம் நாள் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆவணப் படங்கள், மாநாட்டு அரங்கில் மின்சாரம் பாய்ச்சுவது போல தோழர்களை உணர்வலைகளுக்கு உந்தியது. பெரியார் பற்றிய ஆவணப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்ட தோழர்கள், அரங்கம் அதிர முழக்கங்களை எழுப்பிய காட்சியின் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப் படுத்த முடியாது.
  • பேரணியில் அடுத்த தலைமுறையாக கழகக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் – கருப்புச் சட்டை சீருடையுடன் கழகக் கொடிப் பிடித்து அணி வகுத்தது பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. குழந்தைகளை முன்வைத்து வீடியோ, புகைப்படங்களை ஏராளமாக எடுத்தனர்.
  • பொது மாநாட்டுக்குத் திரண்டிருந்த கழகத் தோழர்களின் பெரும் கூட்டம் மலைக்க வைத்தது. திரும்பும் இடமெல்லாம் மக்கள் தலைகள்; அரசியல் சார்பற்ற பெரியார் இயக்கத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் இளைஞர்கள் திரண்டிருப்பது வியக்க வைக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
  • தன்னை பகுத்தறிவாளர் என்று அடை யாளப்படுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது உரை முழுவதையும் பெரியாரை முன்வைத்தே பேசியது குறிப்பிடத்தக்கது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கழகத் தோழர் வாஞ்சிநாதன் பொறுப்பில் 10 பேருந்தில் 500 இளைஞர்கள் பேரணியில் கருப்புச் சட்டையுடன் பங்கேற்றனர்.
  • பேரணியில் தோழர்கள் கழகத் தலைமையால் அச்சிட்டு வழங்கப்பட்ட முழக்கங்களை மட்டுமே எழுப்பி கட்டுப்பாடாக பெண்களும் ஆண்களும் அணிவகுத்தனர். காவல் துறையினர், இவ்வளவு பெரிய கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று மாநாட்டை முன்னின்று நடத்திய சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் அவர்களிடம் தெரிவித்தனர்.
  • பெண்கள் ஆண்கள் பாலின பாகுபாடின்றி, கருப்புச் சட்டை – நீல ஜீன்ஸ் பேண்ட் சீருடையுடன் வந்ததோடு பெண்களே முழக்கமிட்டு வழி நடத்தி வந்தனர்.
  • பேரணி அணிவகுப்பில் சிறந்த மாவட்டத்தைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் பேரணியில் சீருடை, அணிவகுப்பு, முழக்கம் என்ற மூன்று தலைப்புகளில் தனித் தனி மதிப்பெண்களை வழங்கி மூன்று சிறந்த மாவட்டங்களை தேர்வு செய்தனர். மாநாட்டு மேடையில் அதனடிப் படையில் கழகத் தலைவர், சென்னை மாவட்டத்துக்கு முதலிடம், திருப்பூர் இரண்டாம் இடம், ஈரோடு மூன்றாம் இடம் பிடித்தன. கழகத் தலைவர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
  • ஏப்ரல் 30 சென்னை மாவட்ட கழகச் செயல்வீரர் பத்ரி நாராயணன் நினைவு நாள் என்பதால் மாநாட்டு அரங்கிற்கு வெளியே அவரது படத்துக்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மாலை அணிவித்து முழக்கங்களுடன் வீரவணக்கம் செலுத்தினர்.
  • மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த ஒரு மணி நேரத்தில் மேடையில் தனது நிகழ்வுகள், திரண்டிருந்த கூட்டம் அனைத்தையும் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் பதிவு செய்து தனது உரையின் முக்கிய பகுதிகளையும் வலைத்தளத்தில் பதிவிட்டார்.
  • மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தனது உரையைத் தொடங்குவதற்கு முன் ‘திராவிட மாடல்’ ஆட்சிகளின் சாதனைகளை ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும் ஆவணப் படம் வெளியிடப்பட்டது.
  • இரண்டு நாள் மாநாடுகளிலும் பெரியார், அம்பேத்கர், இயக்கம் கடந்து வந்த பாதை; மக்கள் விரோத மோடியின் இந்துத்துவ ஆட்சி; அதானி சுரண்டல்; திராவிட மாடல் ஆட்சி; ஆளுநர்களின் அடாவடிகளை விளக்கிடும் ஆவணப் படங்கள் வெளியிடப்பட்டன. கழகத் தோழர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
  • அனைத்து ஆவணப் படங்களுக்கும் எழுத்து வடிவம் தந்த ர. பிரகாசு, இயக்கிய இளவரசன், ஒளிப்படமாக்கிய கபிலன், ஸ்டுடியோ உரிமையாளர் கழகத் தோழர் விஜயகுமார் ஆகியோரை மாநாடு மேடையில் அறிமுகப் படுத்தியபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.
  • சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணியாற்றும் அரியலூர் எழிலரசன் – ஒட்டன்சத்திரம் காயத்ரி ஆகி யோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவை உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
  • தாலி சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணம் மணமக்களின் பெற்றோர்கள் முழு சம்மதத்தோடு நடக்கிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி னார்கள்.
  • ராசிபுரம் திமுக பாலு, அதிமுக சுந்தரம், மதிமுக கைலாஷ் ஆகியோர் கழக மாநாட்டிற்கு அனைவரும் திரண்டு வரக்கோரி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது கட்சி பாகுபாடுகளை கடந்த கழகத்தின் மீது கொண்டிருந்த மரியாதையை வெளிப் படுத்தியது.
  • மேடையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “நடந்தது ஆட்சி மாற்றம் அல்ல அடையாள மீட்பு போர்” என்ற நூலையும், கழகத் தோழர்கள் காவலாண்டியூர் ரம்யா மற்றும் இளவரசன் ஆகியோரின் சுநஎடிடவ கூயஅடையேனர என்ற புதிய வலையொளியையும் (லுடிரகூரநெ) உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • மாநாட்டிற்கு குறைந்த விலையில் உணவுகளை தயாரித்து வழங்கியவர் கழகத் தோழர் சேலம் ஆட்டோ சரவணன்.
  • ஈரோட்டில் தொடக்க விழா மாநாட்டில் திருமணம் செய்து கொண்டவரும் டெட்ரா காற்றாலை மின்சார நிறுவன உரிமை யாளருமான செட்டியூர் சத்தியமூர்த்தி மாநாட்டிற்கு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியதோடு வெளியூரில் இருந்து வந்த கழகத் தோழர்களுக்கு இரண்டாம் நாள் இரவு சுவையான மாட்டுக் கறி பிரியாணி உணவையும் வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கியும் கருப்பு ஆடைப் போர்த்தியும் பாராட்டினார்.
  • கலைவாணன் குழு நடத்திய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கான முழு செலவையும் சென்னை மாணவர் நகலக உரிமையாளரும் பெரியாரியலாருமான சௌரிராஜன் ஏற்றுக் கொண்டார்.
  • நாமக்கல், குமாரபாளையத்தைச் சேர்ந்த கழகத் தோழர்கள் கேப்டன் அண்ணாதுரை – பரிமளம் ஆகியோரின் மகள் ஈழ மலர் தான் உண்டியல் மூலம் சேர்த்த நிதியை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கழக வளர்ச்சி நிதியாக வழங்கினார்.
  • மாநாட்டின் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்தவர் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்.
  • பேராவூரணி திருவேங்கடம், மதுரை தளபதி, சென்னை பாரதி, பெங்களூர் சித்தார்த்தன், திருச்சி மனோகரன், காவை இளவரசன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
  • மாநாட்டு வெற்றியில் உளம் பூரித்து கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு தீவிர களப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளும் உற்சாக மனநிலையில் ஊர்களுக்கு பயணமாகினர்.

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

பெரியார் முழக்கம் 04052023 இதழ்

You may also like...