ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை இராசேந்திரன்
¨ கடைசி 10 ஆண்டுகளில் மதங்கள் அனைத்தை யும் வேண்டாம் என்றார்.
¨ ‘திருவருட்பா’ என்று தனது தொகுப்புக்கு பெயர் சூட்டியது வள்ளலார் இல்லை.
¨ வள்ளலாரின் அய்ந்து திருமுறைகளையும் வெளியிட ஆர்வம் காட்டிய பலரும் 6ஆம் திருமுறையை வெளியிட விருப்பம் காட்டவில்லை; சைவப் பற்றே காரணம்.
¨ வள்ளலாரே தனது 6ஆம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என்ற ம.பொ.சி.யின் கருத்து உண்மைக்கு மாறானது.
¨ தில்லை தீட்சதர்கள் அர்ச்சகர்களாக முடியாது; அவர்கள் சிவதீட்சைப் பெற்றவர்கள் அல்ல என்று கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர்.
சைவத்தில் பற்று வைத்து பிறகு சிந்தனை வளர்ச்சிப் போக்கில் சைவத்தின் மனித சமத்துவ எதிர்ப்புக் கருத்துக்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியதுதான் வள்ளலாரின் தனித்துவம். அவர் சுய மத மறுப்பாளர். சைவத்துடனேயே அவர் வாழ்நாள் முழுதும் போராட வேண்டியிருந்தது.
“நாம் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் இலட்சியம் வைக்க வேண்டாம்”, இதுதான் தனது கடைசி பத்தாண்டுகளில் வள்ளலார் மக்களிடம் முன்வைத்த வேண்டுகோள்; அது மட்டுமல்ல சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்” என்று அனைத்து மதங்களையும் அதன் தத்துவங் களையும் எதிர்த்த புரட்சிக்காரராக அவர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 51 ஆண்டுகள். ஆனால் தனது ஆறாம் திருமுறையில் அவர் எழுதிய புரட்சிக் கருத்துக்கள் இன்று வரை இருட்டடிக்கப்படுகின்றன.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்”; “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவே”; “அம்பலத்தரசே அருமருந்தே ஆனந்தத்தேனே, அருள் விருந்தே”; “அருட் ஜோதி தெய்வம் எனை ஆட்கொண்ட தெய்வம்”; “அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்” போன்ற பாடல்களோடு “அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்று மங்களம் பாடி அவரது சீடர்கள் பலரும் முடித்து விடுகிறார்கள். வரலாற்றில் பார்ப்பனி யம் தனது எதிர்ப்பு சிந்தனைகளை ஜீரணித்து ஏப்பம் விட்ட சதிகளுக்கு இது மற்றொரு சான்று.
1872இல் ஞானசபையை உருவாக்கிய அவர் அதற்கான விதிகளில் ஜாதி மறுப்பு, சமய மறுப்புகளை உள்ளடக்கமாக்கினார். வள்ளலார் தொடக்க காலங்களில், சைவப் பற்றோடு தாம் எழுதிய பாடல்களை அச்சு ஏற்றவே விரும்ப வில்லை. ஆனால், மக்களிடத்தில் அதற்கு மிகவும் செல்வாக்கு இருந்தது. இறுக்கம் இரத்தின முதலியார் அவரது பாடல்களைத் தொகுக்க விரும்பி அடிகளாரின் சம்மதம் பெற பெரும் போராட்டமே நடத்த வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் அடிகளார் தனது பாடல்களை அனுப்பி ஒப்புதல் தரும் வரை, தாம் ஒரு வேலை உணவை மட்டுமே உட் கொள்ள முடிவு எடுத்திருப்பதாக அடிகளா ருக்கு கடிதம் எழுதினார். இதற்குப் பதறிப் போய் பதில் எழுதிய வள்ளலார், “தங்களது பட்டினி அறிவிப்பு தன்னை பாதித்தது என்றும், தாம் உண்ணும் உணவு உடம்பில் ஒட்ட மறுக்கிறது என்றும் இரண்டு மாதங்களில் பாடல்களை அனுப்பி வைப்பதாக” பதில் எழுதுகிறார். இவ்வளவு ஆர்வமும், துடிப்பும் உடைய இரத்தின முதலியார், ஆறாம் திருமுறையை பதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பழமை வாதிகளுக்கு ஆறாம் திருமுறை அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டது.
கடவுள் வழிபாடு என்பது, சடங்குகள், யாகங்கள், வேண்டுதல்களில் இல்லை. மனிதர் களுக்கு மனிதர்கள் உதவும் ‘ஜீவகாருண்யம்’ தான் கடவுள் வழிபாடு. அதுதான், சன்மார்க்கம்” என்றார். தமிழ் சிந்தனை மரபில் இப்படி மனிதத்தை கடவுளாக்கிய வேறு சிந்தனையாளர் ஒருவர் கூட இல்லை. அதே போல் ‘பசித்த வயிற்றுக்கு உணவு இடு’ என்று வேத மத மரபில் எந்த ரிஷியும், அவதாரமும், எந்த வேதமும், புராணமும், மகான்களும் கூறிய சான்றுகளே இல்லை.
இன்னும் ஒரு படி மேலே போய் தனது சன்மார்க்க நெறிக்கு அவர் தரும் விளக்கம் கடவுள், மதம் மறுப்பாகவே இருக்கிறது. உபதேசக் குறிப்புகளில் அவர் இவ்வாறு எழுதுகிறார்.
“சமயத் தெய்வங்களில் வழிபாடு செய்து அந்த சமயத் தெய்வங்களை பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேற வேண்டிய படிகள் எல்லாம் ஏறி பூரண சித்தியை அடையாமல், தடைப்பட்டு நிற்றல் நில்லாமல் சர்வ சித்தியை அடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவரை உண்மையின் பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்பதே சன்மார்க்க சங்கத்தின் கோட்பாடு” என்கிறார்.
சமய மறுப்பு, தெய்வ உருவம், சடங்கு மறுப்பு சன்மார்க்கத்தின் கோட்பாடு. என்று 1872 லேயே துணிவோடு அறிவித்த வள்ளலாரை வைதீகம் எப்படி ஏற்கும் ?
வள்ளலார் தனது பாடல் தொகுப்புக்கு பெயர் எதுவும் சூட்டவில்லை; அவரது முதன்மை சீடரான வேலாயுத முதலியார் தான் ‘திருவருட்பா’ எனப் பெயர் சூட்டினார். தெய்வத் தன்மை கொண்ட பாடல்கள் என்ற பொருளிலே அப்பெயர் சூட்டப் பெற்றது. ஆறு திருமுறைகளாகத் தொகுத்ததும் அவரே; ‘திருமுறை’ என்றால் ‘பகுதி’ என்று பொருள். இதில் தனது புரட்சிக்கரக் கருத்துக்களை பதிவு செய்த இறுதிக்கால பாடல்கள் ஆறாம் திருமுறையாக தொகுக்கப் பெற்றாலும் அதை உடனடியாக வெளியிட வேண்டாம் என்பதே அடிகளாரின் கருத்து . முதலில் வெளிவந்தது அய்ந்து திருமுறைகள் தான். 13 ஆண்டுகள் கழித்து 1880 இல் வள்ளலார் மறைவுக்குப் பிறகு தான் 6ஆம் திருமுறை வெளிவந்தது.
அய்ந்து திருமுறைகளை வெளியிட்ட வேலயாயுதம் முதலியார், ஆறாம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டாமைக்குக் காரணம் அவரது பழமையில் ஊறிய சைவப்பற்று தான். அது மட்டுமல்ல, முதல் 5 தொகுதிகள் வெளி வருவதில் பேரார்வம் காட்டிய இறுக்கம் இரத்தினம், புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், பொருள் உதவி செய்த சோமசுந்தரம் செட்டியார் ஆகியோரும் 6ஆம் திருமுறை வெளி வருவதில் ஆர்வமின்றி ஒதுங்கி விட்டனர். ஏதோ, வள்ளலார் கேட்டுக் கொண்டதற்காக அவருக்கு அஞ்சி வேலாயுத முதலியார் – அவர் உயிருடன் இருக்கும் வரை வெளியிடவில்லை என்று ம.பொ.சிவஞானம் (மாபொசி) எழுதுவது உண்மைக்கு மாறானது என்கிறார், ஆய்வாளர் சரவணன். வள்ளலாருக்கே 6ஆம் திருமுறையில் உடன்பாடு இல்லை என்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்குவதே ம.பொ.சி.யின் உள் நோக்கம். உண்மை என்னவென்றால் வேலாயுத முதலியார் வாழ்ந்த காலத்திலேயே 1885இல் ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டு விட்டது. 1889இல் தான் முதலியார் மரணமடைகிறார். வேலாயுத முதலியாருக்கு அச்சிட மனமில்லாத காரணத்தால் வேலூர் பத்மநாப முதலியார் வெளியிட்டார் என்கிறார் ஆய்வாளர் பா.சரவணன்.
இந்தப் பின்னணியில் அடிகளாரின் திருவருட்பாவிற்கு பழமையில் ஊறிப்போன தீவிர சைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது, அதில் முதல் வரிசையில் நின்றவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர், தமிழகத்தோடு குறிப்பாக சிதம்பரம் கோயிலோடு நெருக்கமாக இருந்தார்; ஐந்து முறை தமிழகம் வந்த அவர் சிதம்பரத்திலேயே தங்கி ‘சைவ பிரகாச வித்யா சாலை’ எனும் பாடசாலையை நிறுவினார்.
வேதத்தை விட ஆகமம் உயர்ந்தது, ஆகமம் சைவத்திற்கே உரியது என்ற கருத்துடைய அவர் தில்லை தீட்சிதர்களைக் கடுமையாக சாடியவர். அவர்கள் சிவ தீட்சை பெறாதவர்கள் அவர்கள் கையில் இருந்து விபூதி வாங்கக் கூடாது, அவர்களுக்கு பூஜைகள் நடத்தும் உரிமைக் கிடையாது என்று கடுமையாக எதிர்த்தார், இதனால் தீட்சிதப் பார்ப்பனர்கள் நாவலர் மீது பகைக் கொண்டனர்.
நாவலருக்கு எதிராக போலியான அர்ச்சகர்களை உருவாக்கி அவர் மீது சேறு வாரி தூற்றி இழிப் பிரச்சாரங்களை செய்தனர். நாவலர் தீட்சிதர்களுக்கு பதிலடி தந்து வந்தார்.
அதே நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களை கடுமையாக சாடும் திரு மந்திரத்தையே அருட்பா பட்டியலில் சேர்க்காதவர், அவர் ஆறுமுக நாவலர் கருத்துக்கு எதிராக 1868இல் ‘திருவருட்பா தூசன பரிகாரம்’ எனும் நூலை திருமயிலை சண்முகம் பிள்ளை என்பவர் எழுதி வெளி யிட்டார்.
அருட்பா மறுட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை கல்யாணசுந்தர முதலியார், செய்கு தம்பி பாவலர் உள்ளிட்ட சுமார் 23 பேர் களமிறங்கினர்.
மருட்பாவுக்காக களமிறங்கி யவர்களில் திருவாடுதுறை வேதாரண்யம், திருவண்ணா மலை மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் உவே சாமிநாதையர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நா. கதிரைவேற் பிள்ளை, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் உள்ளிட்ட சுமார் 15 பேர்.
(சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டு
இதழான ‘புது மலர்’ வெளியிட்ட வள்ளலார் சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை. கட்டுரையின்;
பெரியார் முழக்கம் 02022023 இதழ்