பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு
பழனி மலைக் கோயிலில் 17 ஆண்டு களுக்குப் பிறகு தமிழில் குடமுழுக்கு நடந்து முடிந்திருக்கிறது. சொல்லப் போனால் பழனி மலை கோயில் என்பது பார்ப்பன ரல்லாத பண்டாரங்களின் கட்டுப்பாட்டில் சித்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கோயில் தான்.
மதுரையை திருமலை நாயக்கன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்த போது அவனது படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பழனி மலை கோயிலுக்கு வழிபடச் சென்றார். அங்கே பார்ப்பனரல்லாத பண்டாரங்கள் வழிபாடு நடத்துவதைப் பார்த்து அவர் மனம் கொதித்துப் போனார். அவர்களிடம் இருந்து திருநீறை வாங்கிக் கொள்வதற்கு அவர் மறுத்தார், உடனடியாக மதுரைக்குத் திரும்பி பண்டாரங்கள் அத்தனை பேரையும் பதவியில் இருந்து நீக்கி இனி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று உத்தரவிட்டார்.
இப்படித்தான் வழக்கமாக ஆகம விதிப்படி பண்டாரங்கள் வழிபாடு நடத்தி வந்த கோயிலில், ஆகமங்களை மீறி பார்ப்பனர்கள் திணிக்கப்பட்டார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லுகிற போது ஆகம விதிகள் மீறப்படக்கூடாது என்று கூப்பாடு போடுகிற பார்ப்பனர்கள், பழனி சித்தர்கள் கோயிலில் பண்டாரங்கள் வழி பாட்டை நிறுத்திவிட்டு பார்ப்பனர்களை உள்ளே நுழைத்தது மட்டும் ஆகம விதி மீறல் இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு அவர்கள் மறுக்கிறார்கள். நாம் சொல்வது வாய்மொழிக் கதை அல்ல. இப்போதும் பழனி முருகன் கோயிலுக்குள் 1646ஆம் ஆண்டு இந்த தாமிரப் பட்டயம் செதுக்கப்பட்டு உள்ளது.
ஒரு கட்டத்தில் மூலிகைகளால் செய்யப்பட்ட பழனி முருகன் சிலையைத் திருடி திருடி பல வைத்தியர்கள் மருந்துக்கு பயன்படுத்தத் தொடங்கினார்கள். சிலை சிதைந்து போன நிலையில் இருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காஞ்சி ஜெயேந்திரன் என்ற சங்கராச்சாரி அங்கு ஐம்பொன்னாலான சிலையை நிறுவி மூலிகைகளால் செய்யப்பட்ட முருகன் சிலையை அகற்றி சித்தர் மரபை சிதைக்க ஏற்பாடுகளை தன்னிச்சையாக அவர் செய்தார்.
ஜெயலலிதா ஆட்சி அதற்கான முழு உரிமையையும் அவருக்கு வழங்கியது, அந்தக் கோயிலுக்குள் இப்போதும் சித்தருக்கு வீடு இருக்கிறது. புலிப்பாணி அடிகள் என்ற ஒரு சித்தர் அங்கே
இருந்தார். மூலிகைகளால் ஆன முருகன் சிலையை அகற்றிவிட்டு ஐம்பொன்னாலான முருகன் சிலையை வைப்பது என்பது ஆகமத்திற்கு பழனி கோயில் வழிபாட்டு முறைக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ஜெயந்திரனிடம் அவர் வாதிக்கவும் சென்றார். காஞ்சிபுரம் சென்று நேரில் எதிர்ப்பு தெரிவிக்க வந்தபோது அவரை சமமாக அமர வைக்காமல் நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் ஜெயேந்திரன். உடனே தன்னுடைய காரில் தான் கொண்டு வந்திருந்த இருக்கையை கொண்டுவர சொல்லி ஜெயேந்திரனுக்கு இணையாக இருக்கையில் சமமாக அமர்ந்து சமரசமாக பேசினார், உரையாடினார் என்பது வரலாறு.
அந்த காலகட்டத்தில் அப்போதைய தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஜெயேந்திரனின் அத்துமீறிய ஆக்கிர மிப்பையும், பண்டாரங்களை ஒழிக்கப்பட்டு பார்ப்பனர்களை புகுத்தப்பட்டதையும் கண்டித்து தமிழில் வழிபாட்டு உரிமை குடமுழுக்கு வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மக்கள் இயக்கங்களை நடத்தியது அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பழனியில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தியது என்பது வரலாறு.
பழனியில் இப்போது தமிழில் குட முழுக்கு நடத்துகிற இந்த வேளையில் இந்த வரலாறுகளை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
பெரியார் முழக்கம் 02022023 இதழ்