இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு
பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (ஊயளவந ஞசனைந) நூலிலிருந்து:
1795 : உயர் ஜாதியினரிடம் நல்ல பெயர் வாங்கும் நோக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி காசி பார்ப்பனர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளித்தது.
1816 : கீழ் ஜாதிக்காரர்கள் சிறு குற்றங்கள் செய்தாலும் அவர்களை ஆடு மாடுகள் அடைக்கும் பட்டிகளில் அடைத்து வைக்கும் தண்டனையைக் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தியது.
1829 : உயர்ஜாதியினரின் கடும் எதிர்ப்பு களையும் மீறி வில்லியம் பென்ட்டிங் கணவன் இறந்த நெருப்பில் மனைவி தானாக விரும்பி வீழ்ந்தாலும் அல்லது கட்டாயப்படுத்தி நெருப்பில் தள்ளப்பட்டாலும் குற்றம் என்று ‘சதி’ எனும் கொடுமையை முற்றாக ஒழித்தார்.
1850 : ஒதுக்கி வைக்கப்பட்ட கீழ் ஜாதியினராக இருந்தாலும் அனைத்து இந்துக்களுக்கும் பரம்பரை சொத்தில் உரிமை உண்டு என்று லார்டு டல்ஹவுசி முதன் முதலாக ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஜாதித் தடைகளை எதிர்த்து இந்திய அளவில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இதுதான்.
1855 : சத்திரியர்கள் அனைவரையும் அவதாரம் எடுத்து வந்த பரசுராமன் அழித்து விட்டதால் சத்திரிய வம்சமே இல்லை; எனவே ராஜபுத்திரர்கள் சத்திரியர் என்று உரிமை கோர முடியாது; அவர்கள் சூத்திரர்கள் என்ற பார்ப்பன வாதங்களை லண்டன் பிரிவி கவுன்சில் ஏற்க மறுத்து, ராஜ் புத்திரர்கள் சத்திரியர் உரிமை கோரலாம் என்று தீர்ப்பளித்தது.
1858 : கீழ் ஜாதிப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது என்ற பார்ப்பனியம் விதித்தத் தடையை நீக்கி திருவிதாங்கூர் சமஸ்தான திவான் டி. மாதவராவ், ரவிக்கை அணியும் உரிமையை வழங்கினார்.
1859 : பிறகு அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி தந்த அழுத்தத்தின் காரணமாக, மேல் ஜாதிப் பெண்கள் அணியும் ரவிக்கையைப் போல் அணியக் கூடாது; குப்பாயம் அணிந்து மார்பை பொதுவெளியில் மறைத்துக் கொள்ளலாம் என்று திவான் மாதவ ராவ் அறிவித்தார்.
1862 : வில்லியம் பெண்டிங் சதியை சட்டப்படி ஒழித்த பிறகும் பார்ப்பனர்கள், உயர்ஜாதினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய பிரிட்டிஷ் ஆட்சி சதி – தற்கொலைக்கான முயற்சி கொலை அல்ல என்று சட்டத்தைத் திருத்தியது.
1890 : மராட்டியப் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரம்பரை புரோகிதர்களை நியமித்துக் கொண்டார்கள். அவர்கள் மட்டுமே திருமணம் உள்ளிட்ட சடங்குகளை நடத்த முடியும் என்ற கட்டாயம் இருந்தது. வேறு புரோகிதர் ஒருவர் திருமணம் நடத்த ‘தட்சணை’ வாங்கியதை எதிர்த்து பரம்பரை புரோகிதர் ஒருவர் நீதிமன்றம் சென்றார். 20 ஆண்டு காலத்துக்கு மேல் நீதிமன்றங்கள் இந்த வழக்கைச் சந்தித்தது. ஆதரவாகவும் எதிராக வும் தீர்ப்புகளை வழங்கினர். ஜோதி ராவ் புலேயின் ‘சத்திய சோதக்’ அமைப்பு “பிராமண” புரோகித திருமண முறையை மறுத்து அந்தந்த ஜாதியினரே திருமணத்தை நடத்தும் முறையை வலியுறுத்தியது. இதை எதிர்த்தும் நீதிமன்றம் போனது – வைதீகக் கூட்டம். லண்டன் பிரிவி கவுன்சில் உள்ளூர் பரம்பரை அர்ச்சகர்களை வைத்துத்தான் திருமணங்களை நடத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தீர்ப்பு வழங்கியது.
1890 : காயஸ்தா என்ற ஜாதிப் பிரிவினர் சத்திரியர்அல்ல சூத்திரர்களே என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர்கள் சத்திரியர் உரிமை கோரலாம் என்று தீர்ப்பளித்தது.
1898 : சத்திரியர் என்ற வம்சமே இல்லை என்று வாதிட்ட “பிராமணர்கள்” வைசியர்களும் இல்லை; அனைவரும் “சூத்திரர்களே” என்று முன்வைத்த வாதத்தை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. ராணடே ஏற்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
1908 : சூத்திரர் – பஞ்சமர் கோயில் நுழைவுக்கு சனாதனம் அனுமதி மறுத்தது. அதற்காகவே கோபுரங்களைக் கட்டி வீதியில் இருந்தே வணங்கும் முறையைத் திணித்தது. ஆலய பிரவேச இயக்கம் நடந்தபோது பார்ப்பனியம் அதை எதிர்த்து, சான்றாக ஆகமங்களைக் காட்டியது. வழக்கு லண்டன் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றது. பிரிவி கவுன்சில் கோயிலில் வழமையாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறும் உரிமை, கோயில் அறங்காவலர்களுக்குக் கிடையாது என்று தீர்ப்பளித்தது. அனைத்து இந்துக்களுக்கும் கோயிலுக்குள் செல்லும் உரிமையே தடுக்கப்பட்டது
1913 : 1824ஆம் ஆண்டிலேயே ‘சதி’ எனும் கொடுமை தடை செய்யப்பட்டாலும் 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, ஒரு வழக்கறிஞராக சதியை அரங்கேற்றிய 8 பிராமணர்களுக்கு ஆதரவாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். கணவன் இறந்த உடலில் மனைவி போய் உட்கார்ந்த உடனேயே அதிசயமாக ஒரு நெருப்பு தானாக உருவானது; அது கடவுள் செயல்; எனவே நெருப்பை யாரும் உண்டாக்கவில்லை என்று வாதிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து குற்றத்தை உறுதிப்படுத்தியது.
1916 : தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் சந்திக்கும் கொடுமைகள் பற்றி தொடர்ந்து ‘கள்ள மவுனமே’ நீடித்தது. எவரும் வாய் திறக்கவில்லை; முதன்முதலாக டெல்லி மேலவையில் (ஐஅயீநசயைட டுநபளைடயவiஎந ஊடிரnஉடை) மேனக்ஜி தாதாபாய் என்பவர் தான் இந்த மவுனத்தை உடைத்தார். தீண்டாமையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் தேவை என்று வலியுறுத்தினார்.
1918 : முதன்முதலாக இந்து மதத்துக்குள் வெவ்வேறு ஜாதியினர்
ஜாதி கலப்பு திருமணம் செய்து கொள்ள வழிவகுக்கும் மசோதாவை விதல் பாய் பட்டேல் தான் அறிமுகப்படுத்தினார்.
1919 : நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறு குற்றங்கள் செய்யும் கீழ் ஜாதிக்காரர்களை ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் பட்டிகளில் அடைக்கும் கொடுமை நிலவியது. இந்த ஆண்டுதான் அந்த கொடூரச் சட்டம் அகற்றப்பட்டது.
1919 : இந்தியாவில் தீண்டப்படாத பிரிவிலிருந்து முதல் சட்டமன்ற உறுப்பினராகியது எம்.சி. ராஜா. அதுவும் சென்னை மாகாணத்தில் தான் நடந்தது. அவர் ஆளுநருடன் கலந்து பேசி தீண்டப்படாத மக்கள் பொதுக் குளம், கிணறு, சாலைகளைப் பயன்படுத்தும் உரிமைகளுக்கான தேவையை வலியுறுத்தினார்.
1920 : நாக்பூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ், இந்து சமூகத்தில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இடையே உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்து மதத்தை தீண்டாமை யிலிருந்து விடுவிக்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. நாக்பூர் காங்கிரஸ் காந்தியின் செல்வாக்கு கட்டுப்பாட்டின் கீழ் நடந்தது. அதற்கு முன் நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் பச்சையாக வர்ணாசிரமம் பின்பற்றப்பட்டது.
1921 : மாண்டேகு சேம்ஸ் போர்ட் சீர்திருத்தத்தின்படி தேர்தலில் போட்டியிட்ட தீண்டப்படாத மக்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கீட்டை பிரிட்டிஷ் ஆட்சி அமல்படுத்தியது.
1922 : தீண்டப்படாத மக்களுக்கு தனிக் கிணறுகளை அமைப்பது என்றும் அதற்கு காங்கிரஸ் கட்சி நிதியை செலவிடுவது என்றும் காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்தது.
1923 : பம்பாய் மாகாண சட்டசபையில் எஸ்.கே. போலே என்பவர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி தீண்டப்படாத மக்கள் பொது இடங்களில் நடக்கவும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
1924 : இதே போல் ஒரு தீர்மானத்தை சென்னை மாகாண சட்ட சபையில் ஆர். சீனிவாசன் என்ற உறுப்பினர் கொண்டு வந்தார். இதற்கு பாலக்காடு “பிராமணர்கள்” கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கினர். மலபார் பகுதியில் கல்பாத்தி அக்ரகாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோயில் திருவிழாக் காலங்களில் தீண்டப்படாதவர்கள் நடமாடுவதாகக் குற்றம் சாட்டினர்.
1926 : சென்னை மாகாண சட்ட சபையில் ஆர். வீரையன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தீண்டாமைக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுதான். அதுவும்கூட உள்ளாட்சி சட்டங்களில் ஒரு திருத்தத்தின் வழியாகவே கொண்டுவர முடிந்தது. வைதீகப் பார்ப்பனியம் கடுமையாக எதிர்த்தது. வைஸ்ராய் இர்வின் இதில் மிகவும் கவனம் செலுத்தி, ஆளுநர் கோஷன் அவர்களிடம் இதை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்; தீர்மானம் நிறைவேறியது.
தமிழில் : ராசேந்திரன்
(தொடரும்)
பெரியார் முழக்கம் 18052023 இதழ்