21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்; தமிழக முதல்வர் அறிவிப்பு

பன்னாட்டு புத்தகக் கண்காட்சி சென்னையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நிறைவு விழாவில் 118 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஏராளமான நூல்கள், 365 நூல்கள் பிறமொழிகள் தமிழில் இருந்து மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்களாக அவை நடந்து முடிந்திருக்கின்றன.

நிறைவு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பெரியாருடைய எழுத்து, பேச்சுகள், இந்திய மொழிகளை உள்ளடக்கி 21 உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட தமிழக அரசு ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதே உரையில் அவர் மற்றொரு செய்தியையும் குறிப்பிட்டு இருக்கிறார். பதிப்புத் துறையில் பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், ஏங்கல்ஸ், லெனின்  அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அந்த வகையில் முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிகளாக இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி உள்ளது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

பெரியாருடைய சிந்தனைகள் நாடு முழுவதும், உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காக, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை தமிழகத்தில் உருவானது. பெரியார் எழுத்து பேச்சுகளை தொகுத்து 28 தொகுதிகளாக பெரியார் திராவிட கழகம் வெளியிட்ட போது,அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் வந்தன. குறிப்பாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமே அந்த வழக்கை தொடர்ந்தது. முதலில் நீதிபதி சந்துரு அந்த வழக்கை விசாரித்து இந்தத் தொகுப்பை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது, இடைக்கால தடை கிடையாது என்று அறிவித்தார். பிறகு இரண்டு நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டுக்கு  வழக்கு அப்பில் செய்யப்பட்டது.

இரண்டு நீதிபதிகளும் நீதிபதி சந்துருவின் தீர்ப்பையே உறுதி செய்தார்கள்.  தடைகள் நீக்கப்பட்டதற்கு பிறகு ஏராளமான நூல்கள் பெரியார் எழுத்துக்கள், பேச்சுக்கள், புத்தகங்களாக நாட்டு மக்களிடம் பல பதிப்பகங்களால் கொண்டு வரப்பட்டன.  இன்றைக்கு அடுத்த கட்டமாக 21 உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் பெரியார் நூல் வர இருக்கிறது என்பது அடுத்த கட்டமாக வந்திருக்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தி. பெரியாரிய சிந்தனைகள் உலகம் தழுவியவை. அவை உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கை எட்டி அடைவதற்கு தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு ஒன்று வரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த சாதனை போல மகுடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தட்டிச்சென்று இருக்கிறார் .

பெரியாரியவாதிகள், சமூக மாற்றத்தை விரும்புகிற அனைத்து முற்போக்கு முற்போக்கு சக்திகளும், நிச்சயமாக இதை வரவேற்பார்கள், மகிழ்வார்கள்.

 

 

பெரியார் முழக்கம் 26/01/2023 இதழ்

You may also like...