மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி
மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்:
கடலூர் : 27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர், ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர், ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும் இயக்க நடைமுறை பற்றியும் விளக்கினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூட்டத்திற்கு தலைமையேற்று சிறப்புரை யாற்றினார்.
இயக்கத்தின் நோக்கம் குறித்தும் இயக்கத்தின் செயல்திட்டங்களை எவ்வாறு வகுத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கினார். ப. அறிவழகன் – அறிவியல் மன்ற அமைப்பாளர் நன்றி கூறினார்.
மதுரை : மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் 26.12.22 அன்று மணியமுதன் இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் மா.பா. மணிஅமுதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார்.
அமைப்புச் செயலாளர் ரத்தின சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கழக எதிர்கால செயல்பாடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா குறித்து ஆலோசனை களையும், பெரியார் மீதான அவதூறுகளுக்கான மறுப்பு களையும் பேசினார்கள். மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, யோகேஷ், அழகர், காளி, முருகேசன், வாசுகி, பிரபாகரன் , விக்னேஸ், அய்யப்பன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 26.12.2022 மாலை 6.00 மணிக்கு பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடை பெற்றது.
அமைப்பு செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் கு. பாரி, மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் க. சொ. சிவசுப்பிர மணியன், சோலை மாரியப்பன், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சா. வெங்கடேசன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் மா. கரிகாலன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சபா. மணிகண்டன், பேராவூரணி ஒன்றிய தலைவர் அ. கோவிந்தன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் மருத.உதயகுமார், பேராவூரணி நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன், தோழர்கள் அறிவுச்செல்வன் பெரிய சாமி, அரும்பு செல்வன் பெரியசாமி, வெ. அய்யப்பன், தோழமை இயக்கங் களான அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆயர் த.ஜேம்ஸ், தமிழ்வழிக் கல்வி இயக்க மாநில துணைச் செயலாளர் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், கொன்றை சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர்.
கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
1) பெரியாரின் கொள்கையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு பணியாற்றிவரும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை அரசுடமையாக்கி பெரியாரின் கொள்கைகளை பொது மக்களிடம் பரப்பிட வழிவகை செய்துள்ள தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்ப தோடு, பரிவுத் தொகையாக 15 இலட்சம் அளித்து பொதுச் செயலாளரை கவுரவித்த அரசுக்கும், தஞ்சை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
2) கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை மீண்டும் பேராவூரணி, தஞ்சை மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியினை தொய்வின்றி செய்வது என்றும் குறைந்தது 100 சந்தாக்களை ஒவ்வொரு நகர பகுதிகளிலும் சேர்ப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
3) சமூக நீதியை குழித் தோண்டிப் புதைக்கும் வகையில் அரிய வகை ஏழைகள் என உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட யாரும் கோரிக்கை வைக்காமல் இரவோடு இரவாக 3 சதவீத உயர்சாதி யினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது. உழைக்கும் மக்களான இழிவை சுமந்து கொண்டிருக்கும், பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் செயல் என இக்கூட்டம் கருதுகிறது.
வருடம் 800,000 வருமானம், 5 ஏக்கர் நிலம், வீடு உள்ளவர்கள் ஏழைகள் என பொருளாதார அளவுகோலைக் கொண்டு உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் கேட்டினை விளக்கி மாவட்டம் முழுவதும் ஒன்றியம் வாரியாக தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் முழக்கம் 05012023 இதழ்