இந்தியாவில் ஏன் ரயில் விபத்துகள்?
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாததே காரணம்
பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இலட்சம் கோடியை செலவிடாத ரயில்வே துறை
2017 – 2018 ஆம் நிதியாண்டில் – ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த ரூ.1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை ரயில்வே துறை பயன்படுத்தவில்லை, இதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இருப்பதாக கூறிவிட்டது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய கணக்கு தணிக்கை அறிக்கையில் [CAG] இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெல்லி: நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி ரயில் விபத்துகளை வளர்ந்த நாடுகள் தடுக்கும் நிலையில், ஒடிசா விபத்தால் இந்திய ரயில்வேயின் விபத்து தடுப்பு தொழில்நுட்பம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தால், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரயில் விபத்துக்கள், தடம் புரண்டது, ரயில்கள் மோதுவது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. நவீன தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் திறன் இருந்தாலும் கூட, ரயில் விபத்துக்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இருந்தாலும் சில நாடுகள் ரயில் விபத்தை தடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை செயல்படுத்துவதில் வெற்றியும் பெற்றுள்ளன.
திறமையான மற்றும் பாதுகாப்பான ரயில்வே கட்டமைப்புக்கு ஜப்பான் ரயில்வேயை கூறமுடியும். ரயில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ஜெர்மனி, தென் கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ரயில் விபத்துகளை பெருமளவில் தடுக்கின்றன. மேம்பட்ட தொழில்நுட்பங்கள், வலுவான பராமரிப்பு, திறன்மிக்க தகவல் தொடர்பு அமைப்புகள், அட்வான்ஸ் சிக்னலிங், விபத்து மோதல் தவிர்ப்பு அமைப்புகள், தானியங்கி தட ஆய்வு, மேம்பட்ட தகவல் தொடர்பு போன்றவற்றை கூறமுடியும்.
அட்வான்ஸ் சிக்னலிங் சிஸ்டம்: பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இயக்கப்படும் ரயில்கள் நேர்மறை ரயில் கட்டுப்பாடு (பிடிசி) தொழில்நுட்பத்தின் அடிப்படையில், சமிக்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பமானது, ரயில் இயக்கங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும். இதற்காக ஜிபிஎஸ், வயர்லெஸ் கம்யூனிகேஷன், ஆன்போர்டு கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துகிறது. பிடிசி தொழில்நுட்பம் மூலம், ஒரு ரயிலில் இருந்து மற்றொரு ரயிலுக்கு இடையே நடக்கும் மோதல்கள், ரயில் தடம் புரண்டு செல்லுதல் ஆகியவற்றை தடுக்கிறது.
ரயில் மோதல் தவிர்ப்பு கருவி: ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (டிசிஏஎஸ்) தொழில்நுப்பமானது, ரயில் பாதையில் இதர வாகனங்கள், பாதசாரிகள், விலங்குகள் கடந்தால் கூட கண்டறியும். ரேடார், லிடார் மற்றும் பிற சென்சார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறியப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் ரயிலின் லோகோ பைலட்டுகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் ரயில் மோதல்களைத் தவிர்க்க முடிகிறது.
தானியங்கி தடம் ஆய்வு: தானியங்கி தடம் ஆய்வு (ஏடிஐ) தொழில்நுட்பமானது, லேசர்கள் மற்றும் கேமராக்களை பயன்படுத்தி, டிராக் ஜியோமெட்ரி கார்கள், ரயில்வே தடத்தின் நிலைமைகளை மதிப்பிட முடியும். ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக கண்டறியலாம். இந்த கார்கள் டிராக் ரெக்கார்டிங் கார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உரிய நேரத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு குறித்த தகவல்களையும் வெளிப்படுத்தும். இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரள்வதற்கான அபாயத்தை குறைக்கிறது.
விபத்து அபாயங்களைக் கண்டறிதல்: விபத்து அபாயங்களைக் கண்டறிய பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இத்தகைய நுட்பங்களைச் செயல்படுத்துவது, ரயில்களால் ஏற்படும் தவறுகளை முன்கூட்டியே தெரிவித்துவிடும். ரயில்களின் வெப்பநிலை, அதிர்வு, கண்காணிப்பு அமைப்புகள் போன்ற சென்சார்களின் தரவை அடிப்படையில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பராமரிப்பு பணிகளுக்கு இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
மேம்பட்ட தகவல் தொடர்பு: வயர்லெஸ் தரவு நெட்வொர்க்குகள் மற்றும் நிகழ்நேர கருவிகள் உள்ளிட்ட நவீன தகவல்தொடர்பு அமைப்புகள், உரிய நேரத்தில் தகவல்கள் பரிமாற்றத்தை செயல்படுத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அவசரகாலத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் விபத்தைத் தவிர்க்கலாம்.
மேற்கண்ட முறைகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளில் ரயில்வே விபத்து தடுப்பு நடவடிக்கை என்பது கேள்வியாக உள்ளது. அதற்கு ஓர் உதாரணமாக ஒடிசா ரயில் விபத்து நம்முன் நிற்கிறது.
பெரியார் முழக்கம் 08062023 இதழ்