எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்
“சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா அருகில், 17.09.2022 அன்று மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பெரியார் படிப்பகத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பறை இசை முழங்க ஊர்வலமாக தோழர்கள் சென்றனர்.
தொடர்ந்து, அண்மையில் மறைந்த திமுக பகுதி முன்னாள் அவைத் தலைவர், பகுத்தறிவாளர் க.வே செழியனின் படம் பொதுக் கூட்ட மேடையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறக்கப்பட்டது. பின், முடிவெய்திய லெனின் சுப்பையா அவர்களின் வழித் தோன்றல்களான புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவின் கருத்தாழமிக்க சாதி இந்துத்துவ எதிர்ப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மறைந்த லெனின் சுப்பையா இணையர் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
24 அர்ச்சகர்களும் பணி ஏற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, “சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக்கூட்டத்தில் பாராட்டி பயனாடையும் விருதும் வழங்கப்பட்டது.
பொதுக் கூட்டத்திற்கு இரண்யா தலைமை வகிக்க, தோழர்கள் தேன்மொழி, இரம்யா, யாழினி ஆகியோர் முன்னிலை வகிக்க, கிருத்திகா வரவேற்பு கூறினார்.
தொடர்ந்து, திமுக, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி, விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். இசை இனியாழ் நன்றி கூறினார்.
கடவுள் மறுப்பாளர்கள் அர்ச்சகர்களோடு
கரம் கோர்த்த மேடை
கடவுள் – மதங்களை மறுக்கும் பெரியார் இயக்க மேடையில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அர்ச்சகர்கள் தங்களுக்கான அர்ச்சர்கள் உடைகளில் பக்தி அடையாளத்துடன் பங்கேற்றனர். அர்ச்சகர் ஒருவர் பக்தி பாசுரம் பாடி விருதை பெற்றபோது கூட்டம் பலத்த கரவொலி எழுப்பியது. கடவுள் இந்து மதத்தின் பெயரால் தமிழர்களை இழிவுபடுத்துவதற்கு எதிரானதே பெரியார் பேசிய கடவுள் – இந்து எதிர்ப்பு என்ற செய்தியை உணர்த்தியது இந்த மேடை. பார்ப்பனரல்லாத வெகு இந்து மக்களைப் புண்படுத்துவது பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ்.சும் தான் என்பதையும் பறைசாற்றியது.
மாற்று சிந்தனைகளையும் மதிக்கும் பெரியார் பின்பற்றிய மரபுப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் இருக்கையில் அமர வைக்கப்பட்டு உரையாற்றிய தலைவர்கள் நின்று கொண்டு படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆகமத் தடைகளைத் தகர்ப்போம்; தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்போம் என்று கழகத் தலைவர் குரல் எழுப்ப, கூட்டத்தினர் வழிமொழிந்து குரல் எழுப்பினர்.
பெரியார் முழக்கம் 22092022 இதழ்