மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது
இந்து முன்னணியினரால் மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிராக நீதிமன்றம், அரசு உத்தரவுகளை மீறி திடீரென வைக்கப்பட்ட வினாயகர் சிலை மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முயற்சியால் அகற்றப்பட்டது
29.08.2022 காலை 11.00 மணியளவில் இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் மேட்டூர் நகர இந்து முன்னணித் தலைவர் தமிழ்ச் செல்வன் சேர்ந்து மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் முறையாக அனுமதி எதுவும் பெறாமல் திடீரென ஒரு வினாயகர் சிலையை வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவுகள்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியும், சுற்றுச் சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயன கலவையால் செய்யப்பட்ட அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் வைக்கப்பட் டிருந்தது.
தகவல் அறிந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின், மேட்டூர் காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் இச்செய்திகளை கூறி இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உடனடியாக மேட்டூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் துரித நடவடிக்கை எடுத்து சிலையை வைத்த இந்து முன்னணியைச் சேர்ந்த சேலம் கோட்ட செயலாளர் பழனிசாமியையே அந்த சிலையை எடுக்க வைத்து காவல் துறை மூலம் சிலைக்கு போடப்பட்ட மேற்கூரை பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. இச் செயலுக்காக இந்து முன்னணியினரை காவல்துறை எச்சரித்து அனுப்பியுள்ளது
மேட்டூர் காவல் துறை எடுத்த இந்த உடனடி நடவடிக்கையை மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் பாராட்டுகிறது.
பெரியார் முழக்கம் 08092022 இதழ்