ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

இன்று போற்றி புகழப்படும் “சனாதனம்” சமூகத்தின் சாதிக் கொடுமையின் ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. ஒவ்வொரு மாநிலத்திலும் சனாதானத்தை எதிர்த்து உருவாக்கிய சீர்திருத்தவாதிகள் தான் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கேரளாவில் பிறந்த அய்யன்காளி.

1892 இல் திருவனந்தபுரம் வந்த விவேகானந்தர், கேரளத்தை “மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் பைத்தியங்களின் குடியிருப்பு என்று சாடினார்” அந்த அளவிற்கு அங்கே மூடநம்பிக்கையும் சாதிக் கொடுமையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், இதர பகுதிகளிலும் தலை விரித்து ஆடியது. மக்கள் அதற்காகத்தான் வேத மதத்தைத்துறந்து விட்டு, வேறு மதத்திற்கு போனார்கள். மதமாற்றத்தை எதிர்த்து கூப்பாடு போடுகிறவர்கள் வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

இத்தகைய கொடுமைகளுக்கிடையே 1863 ஆகஸ்ட் 28 அன்று கேரள மாநிலத்தில் வெங்கனூர் என்னும் ஊரில் புலையர் சமூகத்தில் பிறந்தவர்தான் அய்யங்காளி. ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் அவர் போர்குரல் கொடுக்கும் சமூக போராளியாக இருந்தார். ஜாதியை எதிர்த்து அவர் சமராடினார். ஜாதி உயர்வினை எப்போதும் ஏற்க்காதே, சமூகத்தின் சுயமரியாதையை எப்போதும் விட்டுக் கொடுக்காதே என்று அவர் மக்களிடம் துணிச்சலாக கருத்துக்களை தெரிவித்தார். மதத்துக்கு வெளியே அதைவிட்டு விலகி அவர் மனித உரிமைக்குப் போராடியவர்.

மேலாடை அணிவதற்குத் தடை இருந்த பகுதிகளில் தலைப்பாகையுடன் மிக உயர்ந்த ஆடை அணிந்து செல்வது அவரது வழக்கம். ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்ட சாலைகளில் அலங்கரிக்கப்பட்ட வில்லு வண்டியில் அச்சமில்லாது அவர் சென்றார். புலையர் இனப்பெண்கள் இரவிக்கை அணியக் கூடாது என்பதை எதிர்த்து பெண்களை திரட்டி இரவிக்கை அணியும் போராட்டத்தை நடத்தினார். காந்தி அவரை கோவில் நுழைவு போராட்டத்திற்கு அழைத்த போது “எனக்கு கோவில் நுழைவு முக்கியமல்ல பள்ளிக்கூட நுழைவே முக்கியம்” என்று சொன்னார். உங்களுக்கு என்னதான் வேண்டும் என்று காந்தி கேட்ட போது நான் இறப்பதற்கு முன் எனது சமூகத்தில் பத்து பட்டதாரிகள் ஆவது உருவாக வேண்டும் என்பதே என் ஆசை என்று அய்யங்காளி கூறினார்.

அய்யங்காளியின் சமூக சீர்திருத்தத்தின் காரணமாகத் தான் கேரளா இன்றைக்கு தமிழகத்தை போன்ற ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறி நிற்கிறது. ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி 2022 ல் அய்யங்காளியின் 160 வது பிறந்தநாள் தொடங்குகிறது.

சனாதனப் பெருமைகளை பேசிக்கொண்டு சமூகத்தின் இரத்தத்தை எப்படி உறிஞ்சியிருக்கிறது, அந்த சனாதனத்தை ஒழிப்பதற்கு எத்தனை சீர்திருத்தவாதிகள் தங்கள் ரத்தத்தை சிந்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...