தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தமிழக ஆளுநர் தமிழர் மறையான திருக்குறளையும் பக்தி இலக்கியத்தில் இணைத்து வேதங்களில் உள்ள கருத்துகள் திருக்குறளிலும் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், திருக்குறளின் பக்தி உள்ளடக்கத்தை சீர்குலைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார். தமிழ் அறிஞர்கள் பலரும் திருக்குறளில் பக்தி உள்ளடக்கத்தைப் பேசியிருப் பதாக தமிழ் அறிஞர்களை தனக்கு ஆதரவாக இழுத்துக் கொள்கிறார். பரிமேலழகர், நாகசாமி, கி.வா. ஜெகநாதன், உ.வே.சா. போன்ற பார்ப்பனர்கள் திருக்குறளில் கூறப்படும் தர்மம் – மனுதர்மம் என்று கூறி, திருக்குறளுக்கு மதச்சாயம் பூச முயன்றனர். மாறாக தேவநேயப் பாவாணர், பாவலர் பெருஞ்சித்திரனார், மறைமலை யடிகள், வள்ளலார் இராமலிங்க அடிகளார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர்  போன்று குறளுக்கு உரை எழுதிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் வைதீகத்துக்கு எதிரானதே ‘குறள்’ என்ற கருத்தையே நிறுவியுள்ளனர்.

வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றது மிக மிக பிற் காலத்தில் தான். இப்போது அச்சு வடிவில் கிடைத்துள்ள வேதம் முதன்முதலாக கி.பி. 14ஆம் நூற்றாண்டில் கருநாடக மாநிலம் அம்பி நகரத்தில் சாயனாச்சாரியார் என்பவரால் தன் முதல் முதல் தொகுத்து பொருள் எழுதப்பட்டது என்று மார்க்ஸ் முல்லர் உள்ளிட்ட பலரும் உறுதி செய்துள்ளனர். திருக்குறள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் வேத கருத்துகளை திருக்குறள் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது அப்பட்டமான திரிபுவாதம். நான்கு வர்ணத்தை ஆரிய மரபு நூல்களான பகவத் கீதைகளும் மனுதர்மமும் வலியுறுத்துகிறது என்றால் ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற தமிழர் மரபை திருக்குறள் பேசுகிறது.

கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற ஆரிய மரபு நூல், தாசிகளுக்கு ஊதியத்தை நிர்ணயித்தது. திருக்குறள் பரத்தைத் தொழிலே ஒழிக்கப்பட வேண்டும் என்கிறது. பிராமணர் தர்மம், ‘பிட்சை’ (பிச்சை)யை நியாயப்படுத்தி, பிரம்மச்சாரி பிச்சை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்கிறது என்றால், திருக்குறள்,

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்”

என்று பறைசாற்றுகிறது.

வேதங்கள் யாகப் பலியிடுதலை நியாயப்படுத்துகிறது என்றால், திருக்குறள்,

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

என்று யாகப் பலியை இடித்துரைக்கிறது. வேதத்தைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறது ஆரிய தர்மம்.

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

– என்கிறது திருக்குறள்.

கடவுள் என்ற சொல்லே திருக்குறளில் கிடையாது. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் ‘இடைச்செருகல்’. அது திருவள்ளுவரால் இயற்றப்பட்டது அல்ல என்று கூறுவாரும் உண்டு. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்றும் வள்ளுவர் எழுதியிருக்க மாட்டார் என்று கூறும் வ.உ.சிதம்பரனார், அதற்கு ‘இடைப்பாயிரம்’ (இடைச் செருகல்) என்று பெயர் சூட்டி தனது திருக்குறள் உரையில் சேர்த்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் தருண் விஜய் என்ற அசாம் பா.ஜ.க. எம்.பி., தமிழகம் வந்து திருக்குறள் பெருமை பேசத் தொடங்கினார். கங்கை நதிக்கரையில் வள்ளுவர் சிலை அமைக்க முயன்றார். ஆதிச்சங்கரர் பூங்காவுக்குள் சிலை வைக்க ஏற்பாடு நடந்தபோது வைதீகப் பார்ப்பனர்கள் தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்த திருவள்ளுவரை ஆதிசங்கரர் பூங்காவில் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சிலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி கிடப்பில் போடப்பட்டது.

இப்போது திருக்குறள் பெருமை பேசும் ஆளுநர், சனாதனவாதிகள், வட நாட்டில் திருக்குறளைப் பரப்பி னார்களா? திருவள்ளுவருக்கு சிலை வைத்தார்களா? என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவார்?

சனானக் குடுவைக்குள் திருவள்ளுவரைத் திணிக்கும் முயற்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது; ஏற்கனவே பார்ப்பனர்கள் முயன்று பார்த்து முகத்தில் கரிபூசிக் கொண்டார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...