ஸ்ரீரங்கத்தில் பெரியார் அமர்ந்த வரலாறு

இந்து முன்னணி நடத்திய, இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா, சென்னை மதுரவாயலில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், இந்து முன்னணியின் கலை, இலக்கியப் பிரிவுச் செயலருமான கனல் கண்ணன், “ஸ்ரீரங்கநாதரை வழிபட ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோயிலின் எதிரே, ‘கடவுளே இல்லை’ என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்றைக்கு உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றார். வெளிப்படையாக ஒரு சிலை உடைப்புக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேச்சு பலரையும் இது அதிரவைத்தது. (காவல்துறை வழக்குப் பதிவு செய்தவுடன் தலைமறைவாகி, இப்போது முன்பிணை கேட்டிருக்கிறார்)

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, “இந்து மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் திமுகவினர், அதைக் கருத்து சுதந்திரம் என்கின்றனர். அதே கருத்து சுதந்திரம் கனல் கண்ணனுக்கும் உண்டு. எதிரே, ஈ.வே.ரா. சிலை இருக்க வேண்டுமா என்று அங்கு வரும் பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், ‘வேண்டாம்’ என்றுதான் சொல்வர். பொது இடங்களில் அவரது சிலையை வைத்துக்கொள்ளட்டும் என்றார். அடுத்து, தன் பங்குக்கு ஹெச்.ராஜாவும் கொளுத்திப் போட்டுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் இதற்கு முன்னரும் இதே இடத்தில் வைக்கப்பட்ட பெரியார் சிலை 2006ஆம் வருடம் சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. அப்போது பாஜக இவ்வளவு சத்த பலத்துடன் இல்லை. இருப்பினும், அவர்களது சித்தாந்த சீடர்கள் தான் அந்த வேலையைச் செய்திருப்பார்கள் என்பதில் அன்றைக்கு யாருக்கும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீரங்கமும் பெரியாரும் : ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டதற்கே நீண்ட வரலாறு உண்டு. பெரும் காத்திருப்புக்குப் பின் அமைக்கப்பட்ட சிலை அது.

தமிழகத்தில் இரண்டாவது முறை திமுக கலைஞர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தவுடனேயே ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைப்பதற்காக திராவிடர் கழகம் முயற்சித்தது. 1973இல் ஸ்ரீரங்கம் நகராட்சியின் தலைவராக வெங்கட்ரமண தீட்சிதர் இருந்தார். பெரியாருக்கு சிலை வைப்பது தொடர்பாக அனுப்பப்பட்ட பரிந்துரையை அவர் தலைமையிலான ஸ்ரீரங்கம் நகராட்சி தீர்மானமாக நிறைவேற்றி பெரியார் சிலை வைப்பதற்கு நகராட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அரசுக்குத் தெரிவித்தது.

இதை அடுத்து மாவட்ட ஆட்சியரும் தனது பரிந்துரையை வழங்கினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் 144 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கியது (அரசாணை எண்.162 தேதி 24.1.1973). 1975இல் ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடம் திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் 1.2.1976 அன்று திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப் பட்டதனால் தமிழ்நாட்டில் முழுமையாக நெருக்கடி நிலைமை நடைமுறைப் படுத்தப்பட்டது. நெருக்கடி நிலைமை விலக்கப்பட்ட பிறகும் அதில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட திமுக எதிர்கட்சியாகவே செயல்பட நேர்ந்தது. இடையில் 1996 முதல் 2001 வரை திமுக பதவிக்கு வந்தாலும்கூட இந்தக் கோரிக்கை கிடப்பிலேயே கிடந்தது.

மீண்டும் 2006இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலகட்டத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமைக்கப்படுவதற்கான வேளை வந்தது. 24.12.2006 அன்று சிலை திறப்பு விழாவிற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டவுடன் பெரியார் சிலையும் பீடத்தின் மேல் வைக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காக மூடிவைக்கப்பட் டிருந்தது. ஆனால், 7.12.2006 அன்று, சமூக விரோதிகள் சிலரால் சிலை உடைக்கப் பட்டது. பெரியார் தொண்டர்கள் அசரவில்லை. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி 9.12.2006 அன்று தன்னிடம் இருப்பிலிருந்த புதிய சிலை ஒன்றை அதே பீடத்தில் நிறுவச் சொல்ல திட்டமிட்டபடி சிலை திறப்பு விழாவும் நடந்தேறியது.

பெரியார் சிலைக்கு 1973ஆம் வருடமே அரசாணை இருப்பினும் அதை எதிர்த்து வழக்கொன்றை சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ந்தார் (6.2.2006). ஆனால், அவர்கள் எதிர்பார்த்த இடைக்கால உத்தரவு கிடைக்கவில்லை. எனவே, இந்தத் தகவலை மறைத்து சட்ட விரோதமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வேறொரு வழக்கின் மூலம் தடை உத்தரவு பெற முயற்சி செய்யப்பட்டது. ஏற்கனவே மதுரையில் வழக்கு தொடுத்த அதே நபர் மறுபடியும் சென்னையில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே.சந்துரு தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் ஆஜரான வழக்கறிஞரிடம், “பொதுநல வழக்கில் தாக்கலாக்கப்பட்ட மனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் எங்கிருந்து பெறப்பட்டன?” என்ற கேள்வியை எழுப்பினர். ஏனெனில், மதுரையில் தாக்கல் செய்த வழக்கிலுள்ள ஆவணங்களை ஒளிநகல் எடுத்து சென்னையிலும் தாக்கல் செய்திருந்ததனால் இக்கேள்வி எழுந்தது.

மனுதாரர்களால் இதற்கு உரிய பதிலை அளிக்க முடியவில்லை. அதனால், அவர்களை உயர் நீதிமன்றம் கண்டித்தது. மேலும் திருச்சி மாவட்டம் மதுரைக் கிளையின் அதிகார வரையறைக்குள் வருவதனால் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது. அவ்வழக்கு மதுரைக் கிளையில் ஏற்கெனவே அந்த சிவசேனா கட்சி தாக்கல் செய்திருந்த வழக்குடன் இணைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.

மதுரையில் அப்போது மூத்த நீதிபதியாக இருந்த தர்மாராவ் அடங்கிய டிவிஷன் பெஞ்சின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவ்விரு வழக்குகளையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், “பெரியார் சிலையின் பீடத்தில், ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என்ற வாசகத்தினால் இறை நம்பிக்கையாளர்களுக்கு மனது புண்படுகின்றது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; வேண்டுமெனில் அப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் தனியாக வழக்கு தொடர வேண்டுமே ஒழிய பெரியார் சிலை வைப்பதைத் தடுக்க முடியாது” என்று கூறிவிட்டது (19.2.2007).

பன்முகத்தன்மையை ஏற்க வேண்டும் : உயர் நீதிமன்றத்தின் சென்னை அமர்விலும் மதுரை அமர்விலும் அப்போது ஒரே கட்சிக்கு இரு வேறு வழக்குகளைப் போட்டு வாதாடிய வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் (இப்போது அவர் மதுரைக் கிளையில் நீதிபதியாக இருக்கிறார்).

இதற்கிடையில் பெரியார் சிலை நிறுவப்பட்டதற்கு எதிராக இந்து மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்தையும், மூட நம்பிக்கை ஒழிப்புப் போராட்டம் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிடர் கழகத்தின் போராட்டத்தையும் தடைசெய்யும்படி கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல்செய்தார். அவ்வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெரியார் சிலை இருப்பதனால் மனது புண்படுகிறது என்று தற்பொழுது சொல்லிவரும் அண்ணாமலைகளும், ஹெச்.ராஜாக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தாலும், 15 ஆண்டுகளுக்கு முன்னால் மனதைப் புண்படுத்தும் என்று நம்புபவர்கள் தனியாக வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியும், மறுபடியும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று வன்முறைப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிடுவது எவ்விதத்தில் நியாயம்? அவர்களுக்கு நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கையில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.

இந்த நேரத்தில் வேறொரு தகவலையும் இங்கே பதிவுசெய்வது அவசியம். கோயில் கோபுரத்துக்கு அருகே உள்ள உணவு விடுதியொன்றில், ‘ஸ்ரீகிருஷ்ணய்யர் பிராமணாள் கபே’ என்று போடப்பட்டிருப்பதை எதிர்த்து பெரியார் திராவிடக் கழகம் நடத்திய போராட்டத்தில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பில் மதுரை நகரத்தில், ‘கோனார் மெஸ்’, ‘முதலியார் இட்லி கடை’ என்று இருப்பதைச் சுட்டிக் காட்டியதுடன், தான் மாணவர் பருவத்தில் ‘ரெட்டியார் மெஸ்’ஸில் உணவு அருந்தியதாகவும் பதிவுசெய்தார்.

இப்படி சுவாமிநாதனே கூறிய பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதுதான் அண்ணாமலைகளுக்கு அழகு என்பதைக் கூறவும் வேண்டுமா?

முன்னாள் நீதிபதி கே.சந்துரு (அருஞ்சொல்) இணையதளத்தில் எழுதியது

பெரியார் முழக்கம் 11082022 இதழ்

 

You may also like...